Friday, May 25, 2018

கடகம்: 2018 ஜூன் மாத பலன்கள்


கடகம் :

கடகத்திற்கு கஷ்டங்கள் எதையும் கொடுக்காத மாதம் இது. தனாதிபதி சூரியன் மாத ஆரம்பத்தில் லாப ஸ்தானத்திலும், பிற்பகுதியில் விரையம் எனப்படும் செலவு ஸ்தானத்திலும் இருக்கிறார். ஒரு நிலையில் அவர் குருபார்வையில் இருப்பதால் ஜூன் மாதம் நீங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து போகும் மாதமாக இருக்கும் என்பதால் கடத்திற்கு இந்தமாதம் கெடுதல்கள் எதுவும் இல்லை. ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய் இன்னும் சில மாதங்களுக்கு உச்ச நிலையில் இருப்பது கடகத்திற்கு யோகம் தரும் அமைப்பு. ஆகவே கடகத்தினர் எதையும் துணிந்து ரிஸ்க் எடுத்து செய்து இப்போது சாதித்துக் காட்டுவீர்கள்.

பத்தாமிடம் எனப்படும் ஜீவனஸ்தானம் வலுப் பெறுவதால் இதுவரை வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் நிலைத்தன்மை பெறாத இளைய பருவ கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் நிரந்தரமான வேலை, மற்றும் தொழில் அமைப்புகளுக்கான ஆர்டர்களைப் பெறுவீர்கள். மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுபத்துவமாக இருப்பதால் வேலை விஷயமாக வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு பயணம் செல்லுதலும், அதன் மூலம் நல்லவிதமான வாழ்க்கை மாற்றங்களும் நடக்கும். இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது உங்களுக்கு கிடைக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இதுவரை உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் இப்போது உங்களின் உண்மை மனதைப் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு இருக்கும். ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு புதிய தொழில் ஆரம்பம் இருக்கும். குழந்தைகளின் சுப காரிய விஷயமாக சிலருக்கு அலைச்சல்களும், ஒன்றும் சரியாக அமையவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. 

குறைகள் எதுவும் இல்லாத மாதம் இது. சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லவைகளாக நடக்கும்.

1,2,4,8,10,13,15,17,18,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம்தேதி அதிகாலை 4.33 மணி முதல் 7-ம் தேதி மதியம் 3.43 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் தூரப்பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.

No comments :

Post a Comment