Friday, May 25, 2018

மிதுனம்: 2018 ஜூன் மாத பலன்கள்


மிதுனம் :


ராசிநாதன் புதன் மாத பிற்பகுதியில் ராசியிலேயே ஆட்சி நிலையில் இருக்கும் சாதகமான மாதம் இது. குருவின் பார்வையும் ராசிக்கு இருப்பதால் நீங்கள் நினைப்பது நடக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மாதத்தின் முதல் பாதியில் சுபச் செலவுகளும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குதலும் இருக்கும். செலவுகளை கடன் வாங்காமல் செய்வதற்கான வருமானங்களும் உண்டு. மாத பிற்பகுதி முழுவதும் இதுவரை நீங்கள் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து உதவிகள் கிடைத்தலும், குடும்பத்துடன் பிரயாணங்கள் செய்வதும் நடக்கும்.



மாதம் முழுவதும் ஆறுக்கு அதிபதி செவ்வாய் எட்டில் உச்சமாக இருக்கிறார். ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. அதேநேரம் அவரே லாபாதிபதியுமாகி வலுவாக பதினொன்றாம் இடத்தைப் பார்ப்பதால் தாராளமான பணவரவு இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும்.

ஏழாமிடத்தில் சனியுடன் இணைந்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த செவ்வாய் அங்கிருந்து விலகி விட்டதால் இந்தமாதம் வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் நன்மைகளும், ஆதரவும் உண்டு. நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். 

பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால் பிரச்னைகள் வரும். பணவரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

3,5,8,9,10,12,13,14,15,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம்தேதி பகல் 3.37 மணி முதல் 5-ந்தேதி அதிகாலை 4.33 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆயினும் இந்த தினங்களில் புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம்.

No comments :

Post a Comment