Monday, April 30, 2018

தனுசு: 2018 மே மாத பலன்கள்


தனுசு :

மே மாதம் முழுவதும் ராசிநாதன் குரு லாபஸ்தானமான பதினொன்றாமிடத்திலும், மற்ற யோகாதிபதிகளான சூரியன், செவ்வாய் இருவரும் உச்சவலுவுடன் இரண்டு, ஐந்தில் இருப்பதும் தனுசுக்கு மகிழ்ச்சியான விஷயங்களையும் முன்னேற்றமான தருணங்களையும் தரக் கூடியவை என்பதால் தனுசுக்கு இந்த மாதம் சாதகமான பலன்கள் நடக்கும். இரண்டு, ஒன்பது, பதினொன்றாம் வீடுகள் வலுப்பெறுவதால் இப்போது கிடைக்கும் பணவரவின் மூலம் இருக்கும் பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள்.

உங்களில் சிலருக்கு எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் என்பதால் இந்த மாதம் மாற்றங்கள் உள்ள மாதமாக இருக்கும். சிலர் நல்லது செய்பவர்களைப் போல நடித்து கொண்டிருந்தவர்களைப் பற்றிய உண்மைகள் தெரியவந்து அவர்களை விட்டு விலகுவீர்கள். ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம். எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 

குடும்பத் தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள்.

ஜன்ம ராசியில் சனி இருப்பதால் இளைய பருவத்தினருக்கு இனம்புரியாத மனக்கலக்கங்களும் தவறாக ஏதாவது நடந்து விடுமோ என்கிற பயஉணர்வும் இருக்கும். யோகாதிபதிகள் வலுவாக இருப்பதால் எந்தவிதமான எதிர்மறை பலன்களும் நடைபெறாது. தனுசுராசி இளைஞர்கள் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. 

எதுவும் எல்லை மீறிப் போகாது. எதிர்காலம் பற்றிய கொஞ்சம் குழப்பங்கள் இருக்கும் அவ்வளவுதான். இந்த உலகத்தில் வலிமை உள்ளதுதான் வாழும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். தன்னம்பிக்கை நிரம்பிய உங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியிருக்காது. எதையும் சமாளிக்கும் தைரியமும், தெய்வத்தின் ஆசிர்வாதமும் உங்களுக்கு எப்போதும் உண்டு.

6,8,9,10,20,21,22,27,28,29, ஆகிய நாட்களில் பணம் வரும். 19 ம் தேதி மாலை 6.53 மணி முதல் 21 ம் தேதி இரவு 9.24 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ எதுவும் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment