Monday, April 30, 2018

மகரம்: 2018 மே மாத பலன்கள்


மகரம் :

மகரத்திற்கு மாற்றங்கள் துவங்க இருக்கும் மாதம் இது. குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த மாதம் நடைபெற இருக்கும் ஒரு சம்பவம் நீங்கள் எதிர்காலத்தில் எப்படி போகிறீர்கள் என்பதை தீர்மானிப்பதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பார்த்தது கிடைக்கும். வேலை தொழில் செய்யும் இடங்களில் சங்கடங்களோ விரயங்களோ இருக்கும் என்பதால் மகரத்தினர் சிக்கனமாகவும் பொது இடங்களில் வீண் விவாதத்தை தவிர்க்க வேண்டும். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான மாற்றங்களை சந்திப்பீர்கள். எட்டுக்குடைய சூரியன் நான்கில் உச்சமாகி, ராசியில் செவ்வாயும் உச்சமாவதால் எரிச்சலும், ஏமாற்றங்களும் கலந்த மாதம்தான் இது.

பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை. அனைத்து மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அவரவர் வயதுக்கேற்ற திருப்புமுனைகள் இப்போது நடக்கும். நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் எதையும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். முக்கியமான துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.

எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்களில் சிலர் ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். இஷ்ட தெய்வ தரிசனம் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். மாத ஆரம்பத்தில் யோகாதிபதி சுக்கிரனுக்கு குருபார்வை இருப்பதால் எவ்வித எதிர்மறைபலன்கள் நடந்தாலும் அவை அனைத்தும் சூரியனை கண்ட பனி போல உடனே மறைந்து கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி.

2,5,9,11,13,15,17,18,22,28, ஆகிய நாட்களில் பணம் வரும். 21 ம் தேதி இரவு 9.24 மணி முதல் 24ம் தேதிஅதிகாலை 1.50 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment