Monday, April 30, 2018

விருச்சிகம்: 2018 மே மாத பலன்கள்


விருச்சிகம் :

ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் உச்ச நிலையில் மிக வலுவாக இருக்கிறார். மாத ஆரம்பத்தில் ஜீவனாதிபதி சூரியனும் உச்சமாக இருப்பது ஒரு நல்ல அமைப்பு என்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பின்னடைவான அமைப்புகளும், மன அழுத்தங்களைத் தந்த விஷயங்களும் நிரந்தரமாக நீங்குகின்ற மாதம் இது.


கடுமையான போராட்டம் நிறைந்த சம்பவங்களாலும், ஏமாற்றங்களினாலும் என்ன செய்வது என்று தெரியாமல் துவண்டு போய் இருப்பவர்களுக்கு தெம்பையும், புத்துணர்வையும் தரக்கூடிய நல்ல மாற்றங்கள் இந்த மாதம் நடக்கும். எந்த நல்லவைகளும் நடக்காத இளைய பருவ விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும் மாதமாகவும் மே மாதம் இருக்கும்.

உங்கள் திறமைகள் வெளிவரும் மாதம் இது. குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். வழக்கு போன்ற முக்கியமான பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும். சூரியனும், செவ்வாயும் நல்ல அமைப்பில் இருப்பதால் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை தரும் நிகழ்வுகள் உண்டு. முருகப் பெருமானின் மைந்தர்களாகிய உங்களுக்கு இனிமேல் கெடுபலன்கள் வராமல் நன்மைகள் மட்டுமே வரும்.

விருச்சிக ராசிக்காரர்களின் வேதனைகள் விலகி விட்டன. ஏழரைச் சனியினால் கிடைத்த அனுபவங்கள் அனைத்துமே சனி முடிந்ததும் நன்றாக வாழ்வதற்காகத்தான் என்பதால் இனிமேல் விருச்சிகத்தினர் ஆனந்த வாழ்வை அடையப் போகிறீர்கள். மனதைத் தளர விடாமல் இறைபக்தியுடன் அனைத்தையும் அணுகினால் பரம்பொருள் உங்களை கைவிட மாட்டார் என்பது உறுதி. ராசிநாதன் பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். 

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் சில நல்ல அனுபவங்கள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு.

2,5,6,10,15,19,20,26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 17 ம் தேதி மாலை 5.40 மணி முதல் 19 ம் தேதி மாலை 6.53 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment