Friday, March 2, 2018

தனுசு: 2018 மார்ச் மாத பலன்கள்

தனுசு:

மாதம் முழுவதும் ராசிநாதன் குரு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் சுபத்துவமாக இருப்பதும் அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சமாக இருப்பதும் நன்மைகளை தருகின்ற அமைப்பு என்பதால் மார்ச் மாதத்தில் தனுசு ராசிக்கு கெடுபலன்கள் சொல்ல எதுவும் இல்லை. அதேநேரத்தில் ராசியின் எதிர் கிரகமான சுக்கிரன் உச்சமாக இருப்பதால் இளைஞர்களுக்கு அனைத்திலும் ஒரு விரக்கி மனப்பான்மையும், ஏமாற்றம் தரும் நிகழ்வுகள் நடக்கும் என்பதால் இளையோர்கள் எதிலும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது நல்லது.

தனுசு ராசி இளையபருவத்தினர் அடுத்த முப்பது வருடங்களுக்கு தங்கள் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டிய அனுபவங்களை மட்டுமே இப்போது சனிபகவான் உங்களுக்குத் தருவார் என்பதால் ஏழரைச் சனியை நினைத்து கலக்கம் எதுவும் தேவையில்லை. சனி முடிந்ததும் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து நன்மைகள் நடக்கும் என்பதால் ஏழரைச் சனியைக் கண்டு பயப்படவும் தேவையில்லை. நான் என்னதான் சொன்னாலும் ஒருசிலர் எதிர்மறை பலன்களை சந்தித்து குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். மன அழுத்தத்திலும் சிலர் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை சிறிது நாட்கள்தான்.

யாரையும் நம்பி வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். மாதத்தின் முதல்பாதியை விட பின்பாதியில் அதிர்ஷ்டகரமான நிகழ்வுகளும் மனம் சந்தோஷப்படும் காரியங்களும் இருக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.

5,6,7,12,13,19,20,22,30,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம்தேதி காலை 7.16 மணி முதல் 28-ம்தேதி காலை 10.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் செய்யவேண்டாம். மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

No comments :

Post a Comment