Friday, March 2, 2018

விருச்சிகம்: 2018 மார்ச் மாத பலன்கள்

விருச்சிகம்:

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சியாக இருப்பது விருச்சிக ராசிக்கு நிம்மதியைத் தரும் அமைப்பு. அதைவிட மேலாக வேலை மற்றும் தொழிலுக்கு அதிபதியான சூரியன் குரு பார்வையில் அமர்ந்து ஜீவனஸ்தானத்தை பார்ப்பதால் இதுவரை தொழிலிடங்களில் கடுமையான சிக்கல்களை சந்தித்தவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கின்ற மாதம் இது. குறிப்பாக சந்தோஷமற்ற வேலையில், அனைத்தையும் சகித்துக் கொண்டு வேலை செய்த இளைஞர்களுக்கு நல்ல மாற்றங்கள் வரும்.

ராசிநாதனின் வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். விருச்சிக ராசிக்காரர்கள் பட வேண்டிய கஷ்டங்கள் அனைத்தையும் ஏற்கனவே அனுபவித்து விட்டீர்கள் என்பதால் இனி நல்லது மட்டுமே உங்களுக்கு நடக்கும். வேலை, தொழில்துறையில் இதுவரை இருந்து வந்த போட்டிகளையும், எதிர்ப்புகளையும் ஜெயிக்கப் போகிறீர்கள். இதுவரை நல்லது நடக்க ஆரம்பிக்காத சிலருக்கு இந்த மாதம் முதல் கஷ்டங்கள் முடிவுக்கு வரும். சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம்.

ராசி வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபங்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு பிரிந்திருந்தவர்கள் மீண்டும் சேருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் சிக்கல்கள் இருந்தவர்களுக்கு சரியாகும். சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். தனலாபாதிபதிகள் வலுவாக இருப்பதால் பணவரவு இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள்.

1,2,3,6,7,15,17,20,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம்தேதி அதிகாலை 4.20 மணி முதல் 26-ம்தேதி காலை 7.16 மணி வரை சந்திரன் எட்டில் மறையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் உங்களுக்கு தெளிவற்ற மனநிலை இருக்கும். இந்த நாட்களில் எவ்வித புதிய ஆரம்பங்களும், முயற்சிகளும் செய்ய வேண்டாம்.

3 comments :

  1. இந்த பதிவு மேலும் விரக்தியை தராமல் இருந்தால் போதும்.இது வார பலன் மட்டுமே

    ReplyDelete
  2. தங்களின் மேல் உள்ள நம்பகத்தன்மை குறைகிறது.

    ReplyDelete
  3. நல்லது நடக்கவில்னல
    ஆனால்
    கெட்டது தொடர் கனத ஆகி விட்டது

    ReplyDelete