Friday, March 2, 2018

மீனம்: 2018 மார்ச் மாத பலன்கள்

மீனம்:

ராசிநாதன் குருவும், ராசியில் உச்சமாக இருக்கும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுகின்ற நல்ல மாதம் இது. பரிவர்த்தனை யோகத்தின் மூலம் ராசிநாதன் குரு, ராசியில் ஆட்சி பெறும் நிலை உண்டாவதால் மார்ச் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களை தருகின்ற யோக மாதமாக இருக்கும். குரு பகவான் எட்டில் மறைந்ததால் கடந்த சில மாதங்களாக வருமானக் குறைவு உள்ளவர்களுக்கும் வேலையில் தேக்கம் உண்டானவர்களுக்கும் தொழில் முன்னேற்றம் இருக்கின்ற மாதம் இது. உங்களில் சிலர் புதிய வாய்ப்புகளை அடைவீர்கள்.

அதேநேரத்தில் ஒரு சிறப்புப் பலனாக இந்த மாதம் செவ்வாய் பத்தாமிடத்திற்கு மாறி தனது கோபப்பார்வையை ராசியின் மீது வீசுவதால் நீங்களும் காரணமின்றி மற்றவர்கள் மீது எரிந்து விழுவீர்கள். குறிப்பாக வாழ்க்கைத்துணையின் மீது குற்றம் குறை கண்டுபிடித்து கோபப்படுவீர்கள். எதிலும் நிதானமாக இருக்கவேண்டியது அவசியம். குறிப்பாக வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். ஆனால் இதை மறந்து யாரிடமாவது கோபத்துடன் பேசி இந்தமாதம் அவரை விரோதியாக்குவீர்கள். ஆறாமிடம் வலுப்பெறுவதால் குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேற்றுமைகளுக்கு விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிருங்கள்.

ஐந்தாமிட ராகுவால் பிள்ளைகள் விஷயத்தால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வருவதற்கு இடம் இருக்கிறது. அது வராமல் இருக்கக்கூடிய முயற்சிகளை தம்பதிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வழியில் செலவுகளும், மனவருத்தமும் இருக்கும். ராகு மாறியதும் பிள்ளைகள் உங்கள் சொல்லைக் கேட்பார்கள். அதுவரை பொறுத்திருங்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

1,3,7,8,9,14,15,17,29,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி காலை 8.11 மணி முதல் 7-ம்தேதி மாலை 4.07 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ யாரையும் நம்பி முடிவெடுப்பதோ இந்த நாட்களில் கூடாது. கூடுமானவரை எதையும் இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

No comments :

Post a Comment