Saturday, February 3, 2018

விருச்சிகம்: 2018 பிப்ரவரி மாத பலன்கள்


விருச்சிகம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி வலுவடன் அமர்ந்திருப்பதும், மாதத்தின் ஆரம்பம்
சூரியனும், சந்திரனும் மூன்று, ஒன்பதில் அமர்ந்து பவுர்ணமி யோகத்துடன் அமைவதும் விருச்சிகத்திற்கு சிறப்பான அமைப்பு என்பதால் பிப்ரவரி மாதம் உங்கள் வேதனைகளை விலக்கி முன்னேற்ற படிகளில் ஏற வைக்கும் மாதமாக இருக்கும். கடந்த சில வருடங்களாக எல்லா வகையிலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைகளுக்கான அடிப்படைகள் ஆரம்பமாகும் மாதம் இது. 


ராசிநாதன் செவ்வாய் சுபத்துவமுடன் இருப்பதால் இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லாத வண்ணம் சாதகமான, சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும் என்பது உறுதி. சனி தந்த துயரங்கள் எதுவும் இனிமேல் உங்களுக்கு இருக்காது. வருங்காலம் விருச்சிகத்திற்கு இனிமையாக இருக்கப் போகிறது. இனியெல்லாம் சுகம்தான். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கெடுதல்கள் எதுவும் இன்றி அனைத்தும் கையை மீறிப் போகாமல் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

இளையவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இனிமேல் இருக்காது. புதியதாக எந்தப் பிரச்னையும் வராது. இருக்கும் பிரச்னைகளும் தீருவதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு வழி திறக்கும். விருச்சிகத்திற்கு இனிமேல் கஷ்டங்கள் வர காரணங்கள் இல்லை. வாழ்க்கைத் துணை மூலம் நன்மைகள் இருக்கும். சிலருக்கு துணை அமைவதற்கான ஆரம்பம் உண்டு. மனம் படிப்படியாக லேசாவதற்கான சம்பவங்கள் நடக்கும். கடன் தொல்லையால் கலங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. மேலதிகாரிகள் தொந்தரவுகள் இனிமேல் இருக்காது. வேலைப்பளு கம்மியாக இருக்கும். பணவரவிற்கு குறையில்லை. தேவைப்படும் உதவிகள் சரியான சமயத்தில் கிடைக்கும்.

1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி இரவு 7.23 முதல் 24-ம் தேதி இரவு 10.43 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.

No comments :

Post a Comment