Friday, July 21, 2017

VIRUCHIGAM : 2017 - RAHU KETHU PEYARCHI விருச்சிகம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு தற்போதுள்ள நான்கு, பத்தாம் இடங்களில் இருந்து சர்ப்பக் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு-கேதுக்கள் மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு மாறுகிறார்கள்.

இதில் கேது மாறுகின்ற மூன்றாம் பாவம், ராகு-கேதுக்கள் நன்மைகளைத் தரும் இடங்கள் என்று நமது கிரந்தங்களில் கூறப் பட்டிருப்பதால் இம்முறை ராகு-கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்கு நன்மைகள் மட்டுமே இருக்கும் என்பது நிச்சயம்.

இன்னும் ஒருபடி மேலாக சொல்லப் போவோமேயானால் கடந்த சில ஆண்டுகளாக விருச்சிகராசி இளைய பருவத்தினர் ஏழரைச் சனியின் தாக்கத்தினால் எதிலும் உதவியற்ற ஒரு கடுமையான நிலையை சந்தித்து கொண்டிருக்கிறீர்கள்.

யாராவது ஒருவர் உங்களுடைய கஷ்டமான நிலைமையை பார்த்து உதவலாம் என்று முன் வந்தால் கூட, சாதகமற்ற கிரகங்களின் ஆதிக்கத்தினால் மனம் இருந்தும் அதற்கேற்ற தகுதி நிலை இல்லாமல் போய் ஒரு ஆறுதலான எந்த விஷயமும் விருசிகத்திற்கு இல்லாமல் போகிறது.

இதுபோன்ற உதவிகள் அற்ற நிலை இனிமேல் இல்லாத வண்ணம் கேட்கும் இடத்தில், உதவிகள் கிடைக்கின்ற ஒரு நிலையை தற்போது மூன்றாமிடத்திற்கு மாற இருக்கும் கேதுபகவான் உங்களுக்கு அருளுவார்.

ராகு- கேது பெயர்ச்சியை அடுத்து சில வாரங்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியால் உங்களின் யோகாதிபதியான குருபகவான் பனிரெண்டாம் இடம் என்று சொல்லப் படக்கூடிய சுபமான விரையங்களையும், நற்செயல்களையும் தரும் நிலைக்கு மாறுகிறார். இதுவும் விருச்சிகத்திற்கு வரப் போகின்ற ஒரு சாதகமான கிரக நிலை.

எல்லாவற்றையும் விட மேலாக விருச்சிக ராசியினர் அனுதினமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப் பெயர்ச்சி இம்மாதம் அக்டோபர் 26-ந்தேதி நடக்க இருப்பது விருச்சிகத்திற்கு நன்மைகளை தரக் கூடிய பிரமாதமான அமைப்பு என்பதால் இனிமேல் உங்களுக்கு வரப் போகும் எல்லா நல்லவைகளையும் பெற்றுத் தரக் கூடிய ஆரம்ப மாற்றமாக இந்த ராகு-கேது பெயர்ச்சி இருக்கும்.

சர்ப்ப கிரகங்கள் மூன்று, ஒன்பதாம் இடங்களில் வருவதன் மூலம் சகாய ஸ்தானம் என்று சொல்லப்படும் உதவி ஸ்தானம் மிகுந்த வலுப்பெறும். இந்த இடம் தைரியம் மற்றும் கீர்த்தியை குறிப்பதால் இதுவரை எதற்கும் பயந்து கொண்டு தன்னம்பிகை இன்றி இருந்த விருசிகத்தினர் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள்.

இதுவரை நடந்த எதிர்மறை பலன்களால் கலங்கிப் போய், எனக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது, ஏன் எனக்கு அனைத்திலும் தோல்வி கிடைக்கிறது, ஏன் என்னை எவரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று தைரியம் இழந்து கலங்கித் தவித்துக் கொண்டிருக்கும் விருச்சிக ராசி இளைய பருவத்தினருக்கு தைரியத்தையும், புத்துணர்ச்சியும் ஊட்டி அவர்களை சாதனை செய்பவர்களாக மாற்றும் வேலையினை மூன்றாமிட கேது செய்வார்.

அதே போல தற்போது மாற இருக்கும் மகர, கடக வீடுகள் ராகு-கேதுக்கள் நன்மைகளைச் செய்யக் கூடிய ஒரு அமைப்பு வீடுகள் என்பதால் இந்த பெயர்ச்சியின் மூலம் விருச்சிகத்திற்கு நல்ல வாய்ப்புகளின் கதவுகள் அகலமாகத் திறந்து வைக்கப்படும்.

தொழில் துறையில், வேலை அமைப்புகளில் இதுவரை நல்லது கிடைக்காத நிலைமை விருச்சிகத்திற்கு மாறத் துவங்கி ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு நழுவிப் போன அனைத்து வாய்ப்புகளும் இப்போது தானே தேடி வரும். அதைவிட மேலாக ஏற்கனவே வாய்ப்புக் கிடைத்தும் அதை சரியாக செய்ய முடியாமல், கிடைத்த வாய்ப்பினை நழுவ விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிரகங்களால் கொடுக்கப்படும்.

ராகு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வருவது நன்மைகளைத் தராது என்று நமது மூலநூல்களில் சொல்லப் பட்டிருந்தாலும், ராகு இப்போது செல்லும் இடம் அவருக்கு மிகவும் பிடித்த கடக வீடு என்பதால் பெரிய துன்பங்கள் எதையும் விருச்சிக ராசிக்கு நிச்சயமாக கொடுத்து விட மாட்டார்.

அதைவிட மேலாக கடந்த சில வருடங்களாக சனி கொடுத்துக் கொண்டிருக்கும் துன்பங்களை விட, வேறு எந்த ஒரு கிரகமும் அதிகமான தீமைகளையோ, மனக் கஷ்டங்களையோ விருச்சிகராசிக்கு கொடுத்து விட முடியாது. அப்படி இதை விட கஷ்டத்தை விருச்சிகத்திற்கு ஒரு கிரகம் கொடுக்க வேண்டுமென்றால் சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து புதிதாக பத்தாவது, அல்லது பதினொறாவது கிரகமாக வந்துதான் கொடுக்க வேண்டும்.

எனவே எப்படிப் பார்த்தாலும் விருச்சிகத்திற்கு வரும் அக்டோபர் மாதம் முதல் அனைத்துக் கஷ்டங்களும் படிப்படியாக தீர வேண்டும் என்பது ஜோதிட விதி என்பதால் அதற்கு முன்னால் நடக்ககூடிய இந்த ராகு-கேது பெயர்ச்சி ஒரு போதும் தீமைகளை தராது. எனவே இந்தப் பெயர்ச்சியினை விருச்சிக ராசிக்காரர்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

மூன்றாமிடமான மகரத்தில் கேதுபகவான் சுப, சூட்சும வலுப் பெறுவதால் மூன்றாமிடத்தின் நற்பலன்கள் அனைத்தும் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை உடனடியாக அமையும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும்.

வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த அதிருப்திகள் இனிமேல் இருக்காது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். தடைகள் அனைத்தும் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

சிலருக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று முன்னேறுவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் தவிர்த்த மேல் வருமானங்கள் இருக்கும். தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றங்கள் விலகி பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும்.

ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது.

இளைய பருவத்தினருக்கு தடைகள் நீங்கி உடனடியாக திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும்.

பெண்களுக்கு நன்மைகள் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். கணவர் மூலமாக நன்மையை பெறுவீர்கள். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு:

எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் நீங்கள் என்பதால் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளையே அதிகம் தரும். அதேநேரத்தில் செலவுகள் அதிகம் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இப்போது உங்களுக்கு நடக்கும். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு:

சனி பகவான் உங்கள் நட்சத்திர அதிபன் என்பதாலும் அவர் இன்னும் சில வாரங்களில் உங்கள் ராசியில் இருந்து’ விலகப் போவதாலும் மிகப் பெரிய கஷ்டங்கள் எதுவும் இனிமேல் உங்களுக்கு இல்லை. எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு இந்த வருடம் நன்றாகவே இருக்கும். குருபகவானும் வலுவாக உள்ளதால் மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:

வெளிநாட்டு தொடர்பால் இந்த வருடம் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இம்முறை ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள். பெயர்ச்சியின் ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும்.

பரிகாரங்கள்:

ராகு கேது பெயர்ச்சி நடந்தபிறகு ஒருமுறை ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்பே பேரருள் திருத்தலமான ஸ்ரீ காலஹஸ்திக்குச் சென்று இரவு தங்கி அதிகாலை எம்பெருமான் காளத்திநாதனுக்கும் அன்னை ஞானப் பிரசுன்னாம்பிகைக்கும் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்புங்கள். ஒரு குறையும் வராது.

No comments :

Post a Comment