துலாம் ராசிக்கு தற்போது ராகு கேதுக்களுக்கு நல்ல இடம் என்று சொல்லப்படும்
பதினொன்றாமிடத்தில் இருந்து ராகு பெயர்ச்சியாகி, பத்தாம் இடத்திற்கும்,
கேதுபகவான் ஐந்தாமிடத்தில் இருந்து நான்காமிடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
இப்போது இருக்கும் பதினொன்றாம் இடம் ராகு-கேதுக்களுக்கு நல்ல இடம் என்று
சொல்லப்பட்டாலும் ஏழரைச் சனியின் தாக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக
ராகுவின் மூலம் மிகப்பெரிய நன்மைகள் எதையும் துலாம் ராசி பெற்றுவிடவில்லை.
அதே நேரத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லப் படக்கூடிய நான்கு, ஏழு,
பத்தாம் இடங்களில் பாபக் கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய், சூரியன்,
ராகு-கேதுக்கள் நன்மைகளை செய்வார்கள் என்ற விதியின் அடிப்படையில் மிகப்பெரிய
துன்பங்கள் எதையும் இம்முறை துலாம் ராசிக்கு ராகு-கேதுக்கள் கொடுத்துவிடப்
போவது இல்லை.
மேலும் ராகு இப்போது மாறப் போகும் வீடான கன்னியில் அவர் அதி நட்புநிலை
பெறுவார் என்பதால் உங்களுக்கு கெடுதல்கள் எதையும் உறுதியாகத் தந்து விட
மாட்டார். பெயர்ச்சியின் இன்னொரு நிலையாக கேதுபகவானும் கேந்திர ஸ்தானமான
நான்காம் வீட்டிற்கு மாறுவது உங்களுக்கு நன்மைகளைத் தரும் அமைப்புத்தான்.
உங்கள் ராசியின் பூரண ராஜயோகாதிபதியான சனியின் சர வீடான மகரத்தில் சுப வலிமை
பெறும் கேதுபகவான், சூட்சும வலுவும் பெறுவதால் சனி தரவிருக்கும் வீடு, வாகனம்,
ஆரோக்கியம், தாயார் சுகம், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து நன்மைகளையும் இப்போது
உங்களுக்குத் தருவார்.
மேலும் இந்த ராகுகேதுப் பெயர்ச்சியின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சில
வாரங்களில் நடக்க இருக்கும் குரு மற்றும் சனிப்பெர்ச்சிகளும் நல்ல அமைப்பில்
உங்களுக்கு மாற இருப்பதால் இனிமேல் துலாம் ராசிக்கு துயரங்கள் எதுவும் இல்லை.
இன்னும் முப்பது வருடங்களுக்கு முன்னேற்றங்களை மட்டுமே காணப் போகும் ராசிகளும்
துலாமும் ஒன்று.
குறிப்பாக இந்த ஆண்டு இறுதியில், அக்டோபர் மாதம் 26 ம் தேதியன்று நடக்க
இருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் உங்களை சில ஆண்டுகளாக ஆக்ரமித்திருத்த
ஏழரைச் சனி அமைப்பு முற்றிலுமாக விலகுகிறது. துலாம் ராசிக்கு இதைத் தவிர
வேறெந்த சந்தோஷச் செய்தியும் இப்போதைக்கு இல்லை.
எனவே இந்த ஆண்டின் இறுதியில் இருந்து கோட்சார ரீதியாக துலாம் ராசிக்கு நல்ல
பலன்கள் நடைபெறும் காலம் ஆரம்பமாகிறது. பிறந்த ஜாதக அமைப்புப்படி நல்ல தசா
புக்திகள் நடப்பவர்களுக்கு பருத்தி புடைவையாக காய்த்தது எனும் அளவிற்கு
இரட்டிப்பு நல்ல பலன்கள் நடைபெறும் . எனவே எப்படிப் பார்த்தாலும் உங்களுக்கு
இனி யோகம்தான். யோகம் மட்டும்தான்.
சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும்
புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும்
இது முன்னேற்றமான காலம். சுயதொழிலர்களுக்கு பணவரவு தடைப்படாது.
வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு
இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை
இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர்
விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.
இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த
கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப்
பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின்
பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். பிள்ளைகளின்
திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.
நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை சுப
காரியங்களுக்கு இருந்த தடை விலகி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா
செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். அம்மாவால்
அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள்.
இதுவரை தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு
பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் வழியில்
ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்துப் பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு
வரும்.
வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக்
கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய
வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி
பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.
தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள்,
பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை
இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள்,
வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர்,
சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ராகுகேதுப்
பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும்.
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும்
ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து
ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சம்பள
உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.
பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. தாராளமான பணப்புழக்கம்
இருக்கும். கேது மற்றும் குருபகவானால் குறிப்பிட்ட சிலருக்கு எதிர்பாராத நல்ல
பணவரவு உண்டு. கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும்.
வீடு வாங்குவதற்கு இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது
காலிமனையோ, குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டோ
வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க
முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம்
இருக்கிறது.
பெண்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் இருக்கும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத
கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள
ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை
செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து
உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.
வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள்
மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான
சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத
இடத்திலிருந்து பணம் கிடைப்பது இப்போது நடக்கும். நீண்ட நாட்களாக
பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று
முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம்.
குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட
நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக
முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை
தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும்.
மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம்
உண்டாகும்.
தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும்.
குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும்
ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால்
உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிலும் ஒரு
விஷேச நிலையாக பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும்
தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசு கிடைக்கும்.
அதுபோலவே முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய்
துன்பத்தில் இருப்பவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை தற்பொழுது நல்ல விதமாக
அமையும். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும்
இருக்கும்.
கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என
அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வந்து
நிம்மதியைத் தரும். வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத்
தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக்
கொள்ளுங்கள். சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது
அவசியம்.
இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினருக்கு திருமணம் கூடி வரும்.
உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன்
இருக்கும்.
மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில்
பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும். மத்திய மாநில நிர்வாகப்
பதவிகளுக்கான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே
எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்லசெய்திகள்
கிடைக்கும். வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்தக் பெயர்ச்சியால் பூமி லாபம் உங்களுக்கு கிடைக்கும். வீடு, காலிமனை
கண்டிப்பாக வாங்க முடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.
திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல்
கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. யூனிபாரம்
அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் நடக்கும்.
தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு
இருக்கிறது. இந்த வருடம் நீங்கள் செய்யும் ஒரு நல்ல உதவியால் வாழ்நாள்
முழுவதும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்கள் நட்சத்திரநாதன் ராகுபகவான் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில்
மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள்
ஒருவருக்கு செய்த உதவியால் அவர் மூலமாக இப்போது உங்களுக்கு நல்லபலன்கள்
கிடைக்கும். இதுவரை தள்ளிப்போய் இருந்த வெளிநாட்டு தொடர்பான வேலை விஷயங்களும்
வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர்
விஷயத்தில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும்.
விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்கள் நட்சத்திரநாதன் குரு இன்னும் சில வாரங்களில் விரைய வீட்டிலிருந்து மாற
இருப்பதால் கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். நீண்ட கால
லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். உங்களின் அந்தஸ்து, கௌரவம்,
மேம்படுவதோடு வருமானம், பணப்புழக்கம் ஆகியவைகள் சரளமாகவும் முழுமையாக
இருக்கும் என்பதால் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். நான்குபேர் இருக்கும்
இடத்தில் பளிச்சென தனித்து தெரிவீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடன்
அணுகுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
பரிகாரங்கள்:
உங்களின் ஜன்ம நட்சத்திரம் அன்று திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம்,
ஸ்ரீகாளஹஸ்தி, சீர்காழி டவுன் பாம்புக் கோவில் அல்லது அருகில் இருக்கும்
நாகநாத சுவாமி, நாகேஸ்வரன் என்ற திருநாமம் கொண்ட போன்ற திருத்தலங்களுக்குச்
சென்று ராகுவிற்குரிய பரிகாரங்களையும் வழிபாடுகளையும் செய்யுங்கள். குறைகள்
ஒன்றும் வராது.
No comments :
Post a Comment