Friday, July 21, 2017

KANNI : 2017 - RAHU KETHU PEYARCHI கன்னி : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு தற்போது நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மிகப் பெரிய மாற்றங்களையும், பொருளாதார முன்னேற்றங்களையும் தரும்.

ராகு-கேதுக்கள் தங்களுடைய ஒட்டு மொத்த சுற்றுப் பாதையான 18 வருடங்களில் நான்கரை வருடங்கள் மட்டுமே நன்மைகளை தரும் வருடமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஒரு மனிதனின் ராசிக்கு 3, 6, 11-ம் இடங்களில் சர்ப்பக் கிரகங்கள் எனப்படும் ராகு-கேதுக்கள் அமரும் போது அவனுக்கு நல்ல பலன்கள் நடக்கும் என்பது ஜோதிட விதி.

இந்த மூன்று இடங்களிலும் லாபஸ்தானம் என்று சொல்லப்படும் 11-ம் இடம் ஒரு மிக விசேஷமான அமைப்பை கொண்டதாகும். பாபக் கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேதுக்கள் 11-ல் அமரும் போது மிகச்சிறந்த நற்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார்கள். அதிலும் ராகு-கேதுக்கள் 11-ம் இடத்தில் வருவது ஒருவருக்கு 18 வருடங்களுக்கு ஒருமுறையே நடக்கும்.

இம்முறை கன்னி ராசிக்கு மாற இருக்கும் 11-மிட ராகுவால் அனைத்து தரப்பு கன்னி ராசிக்காரர்களுக்கும் அவரவர்கள் வயது, இருப்பிடம், தகுதி நிலை போன்றவைகளுக்கு ஏற்ப ராகு-கேதுக்களால் நன்மைகள் இருக்கும்.

குறிப்பாக பிறந்த ஜாதகத்தின்படி ராகு நல்ல இடங்களில் அமர்ந்த ராகு தசையோ, புக்தியோ நடைபெறுபவர்களுக்கு கூடுதலான நற்பலன்கள் உண்டு. அதேபோல ஜாதகத்தில் ராகுதசை இல்லா விட்டாலும் யோக தசாபுக்திகள் நடைபெறுவர்களுக்கும் இந்த பெயர்ச்சியின் மூலம் மேன்மையான பலன்கள் இருக்கும்.

பொதுவாக ராகு கோட்சாரத்தில் நல்ல இடங்களில் வரும் போது சாதூரியமான விதங்களில் பண வரவை தருவார் என்பதாலும், மறைமுகமான வழிகளில் தன லாபம் தருவர் என்பதாலும், இம்முறை கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியில் சொல்லமுடியாத அளவிற்கு பண வரவுகளை அளிப்பார்.

அதுபோன்ற அமைப்பில் தற்போது ராகு பகவான் கன்னி ராசிக்கு வர இருப்பதால் இதுவரை தொழில் விஷயத்திலும், பண விஷயத்திலும் முன்னேற்றங்களை அடையாதவர்களுக்கு நல்ல மாற்றங்கள் நடந்து அருமையான பண வரவுகள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு கன்னி ராசிக்காரர்களுக்கு அமையும்.

ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு அடுத்த சில நாட்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியும் கன்னிக்கு நன்மை தரும் இடங்களில் அமைவதால் இம்முறை கன்னி ராசிக்கு சந்தோஷம் தரும் விஷயங்கள் இருக்கும் என்பது உறுதி.

குருபகவான் இன்னும் சில வாரங்களில் நல்லபலனைத் தரும் இரண்டாமிடத்திற்கு மாறப் போவதால் உங்களின் பொருளாதார மேம்பாடு இனிமேல் திருப்திகரமாக இருக்கும். யாரிடமும் கேட்கும் நிலையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். மாறாக பிறருக்கு கொடுக்கும் நிலையில் இருப்பீர்கள்.

ராகு-கேதுக்கள் 5, 11-ம் இடங்களில் மாறுவதால் வேறு மத, மொழி, இனம் போன்ற நமக்கு சம்பந்தம் இல்லாத அன்னிய அமைப்புகளினாலும், நண்பர்களினாலும் கன்னிக்கு இம்முறை லாபங்கள் இருக்கும்.

குறிப்பாக எதிர்பாராத அதிர்ஷ்டங்களை இந்த பெயர்ச்சியின் மூலம் சர்ப்பக் கிரகங்கள் தரும். வெகுநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் திடீரென முடிவடைந்து உங்களுக்கு பண வரவு கிடைக்கும். மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி அபரிமிதமான தன லாபத்தையும், பண வரவுகளையும் உங்களுக்கு தரும் என்பது உறுதி.

இளையபருவத்தினர் இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவீர்கள். ராகுபகவான் யோகத்தை தரப்போவதோடு இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிப்பார்.

இன்னும் வேலை திருமணம் போன்றவைகள் நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத கன்னி ராசி இளைய பருவத்தினருக்கு திறமைக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்.

வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் போன்றவைகளில் பிரச்னை எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல பலனைத்தரும் பெயர்ச்சிதான். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும். கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நன்மை தரும் பெயர்ச்சி இது.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில் வியாபாரம் போன்ற அமைப்புகள் மீண்டும் எழுச்சியுடன் நடைபெறும். வியாபாரிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்தப்பெயர்ச்சி மிகவும் கை கொடுக்கும்.

சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்ப வேண்டாம்.

பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெறுவதால் இனிமேல் அதிர்ஷ்டம் உங்களுக்குக் கை கொடுக்கும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு.

மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முடியும்.
இதுவரை சேமிக்க முடியாதவர்கள் இந்த முறை குழந்தைகளின் பெயரில் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில் சேமிப்புகள் செய்ய முடியும்.

கேதுபகவானின் அருளினால் நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும்.

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.

வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். திரவப் பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல், கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் சொல்லைக் கேட்பார்கள்.

தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.

இதுவரை இருந்து வந்த வீண் செலவுகளும், விரயங்களும் தவிர்க்கப்பட்டு சேமிப்பு கண்டிப்பாக இருக்கும். இனிமேல் குறிப்பிடத்தக்க அளவில் பண வரவும், லாபங்களும் இருக்கும் என்பதால் நினைத்த இடத்தில் நல்ல வகையில் முதலீடு செய்யமுடியும்.

நெருங்கிய உறவினர்களை இழந்து மனவேதனையில் வாடியவர்கள் புதிய உறவுகள் ஏற்பட்டு புது மனிதர்களாக பிறவி எடுப்பீர்கள். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

உங்களில் சிலர் வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள்.

மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

பதினொன்றாமிடத்தில் இருக்கும் ராகு பகவானால் உங்களின் ஆன்ம பலம், மனஉறுதி, செயல்திறன், அறிவாற்றல், சொல்வன்மை கூடும் என்பதால் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு உங்களது வாக்குறுதியும் சொல்லும் பலித்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி அந்தஸ்து, கௌரவத்தை உயரவைக்கும்.

மொத்தத்தில் கன்னி ராசிக்கு இந்த பெயர்ச்சியின் மூலம் கசப்பான அனுபவங்கள் எதுவும் இல்லாமல் வாழ்க்கை சரியான பாதையில் போகும் என்பதால் கவலைகளுக்கு இடமில்லை.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும். நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பு இந்த வருடம் இருக்கும். எப்படி வருமானம் வந்தது என்று வெளிப்படையாக சொல்ல முடியாத சில வகைகளில் ராகுபகவான் இம்முறை உங்களுக்கு வருமானங்களைத்தருவார். கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு:

வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு இம்முறை நல்ல வருமானம் இருக்கும். சினிமா, தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு:

சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். இதுவரை கருத்து வேற்றுமைகளாலும் குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை அணிந்து செயல்படும் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும். வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள்.

பரிகாரங்கள்:

தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள ராகுபகவானின் திருத்தலமான திருநாகேஸ்வரத்திற்கு ஜென்ம நட்சத்திரம் அன்று சென்று வழிபட்டுத் திரும்புவது ராகுபகவானால் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும். வடமாவட்டங்களில் இருப்பவர்கள் காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள அருள்மிகு சித்திரகுப்தன் ஆலயத்தில் ஒரு அபிஷேகம் செய்யுங்கள்.

No comments :

Post a Comment