கடந்த முறை நடந்த ராகு-கேது பெயர்ச்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ராசிகளில்
சிம்மமும் ஒன்று.
ராசியில் ராகு இருந்த நிலையில் இன்னொரு பாப கிரகமான சனிபகவானும்
நான்காமிடத்தில் அர்த்தாஷ்டம சனி என்ற நிலைமை இருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள்
சற்று திணறித்தான் போனீர்கள்.
ராசியிலேயே பகை அமைப்பில் சென்றமுறை ராகு அமர்ந்ததால் பெரும்பாலான சிம்ம
ராசிக்காரர்களுக்கு உடல், மன பாதிப்புகள் இருந்தன. உங்களில் பலருக்கு
வேலைகளில் சங்கடங்கள் இருந்து வந்தன. வேலை பளு அதிகமாக இருந்தது. பலர்
பிடித்தம் இல்லாத வேலையை நிர்பந்தத்திற்காக செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இன்னும் சிலருக்கு வேலையே இல்லாத நிலை இருந்தது. தொழில் சரியாக அமையவில்லை.
அமைந்த தொழிலும் உருப்படியாக இல்லை. வியாபாரத்தில் குழப்பம், மேலதிகாரி தொல்லை
என்று சிம்ம ராசிக்காரர்கள் அடைந்த துன்பங்கள் ஏராளம்.
ஒரு இருட்டுக் கிரகம் உங்கள் ராசியின் மேல் அமர்ந்ததால் பல சிம்ம
ராசிக்காரர்களின் செயல்திறன் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. அனைத்து
முயற்சிகளும் ஒரு முட்டுச்சந்தின் மேல் முட்டிக் கொண்டு முன்னே போக
முடியாமலும், பின்னே திரும்ப முடியாமலும் ஒரு வினோதமான நிலைமை. ராகுவினால்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இருந்து வந்தது.
தற்போது நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிக்கு
எதிர்த்தன்மையுடைய கிரகங்களான ராகு-கேதுக்கள் நன்மைகளை தரக்கூடிய 6, 12-ம்
இடங்களுக்கு மாறுகிறார்கள்.
இந்த அமைப்பு சிம்ம ராசிக்கு மிகுந்த நற்பலன்களை கொடுக்கக் கூடியதாகும்.
இப்போது நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் கடந்த 2 வருடங்களாக
சிம்மத்திற்கு இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கி ஒரு மிகப்பெரிய நல்ல மாற்றம்
உருவாகும்.
இந்த மாற்றத்தினால் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் நிலைமைகளில் இதுவரை இருந்து
வந்த “கிணற்றில் போட்ட கல்” போன்ற நிலைமை இனிமேல் இருக்காது. அனைத்தும்
இனிமேல் சுறுசுறுப்பாக நடைபெறும். எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த
மந்த நிலைமை இனிமேல் இருக்காது.
ராசியில் இருந்து ராகு வெளியேறுவதால் இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள்
ஆரோக்கியம் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். மனம் புத்துணர்ச்சியுடன்
இருக்கும். செயல்திறன் கூடும். இதுவரை இருட்டான குகைக்குள் இருந்தது போன்ற
நிலைமை மாறி வெளிச்சத்திற்கு வருவீர்கள். முகத்தில் பொலிவு தெரியும். உங்களை
அறியாமலேயே உற்சாகத்துடன் இருப்பீர்கள்.
உங்கள் ராசியான சிம்மம் ஒளி மிகுந்த ராசியாகி, அதன் மேல் இருந்த ஒரு இருட்டு
விலகுவது, உங்களுக்கு மிகப்பெரிய நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்பதால் சிம்ம
ராசிக்காரர்கள் அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் உங்கள் விருப்பங்களுக்கும்,
தேவைகளுக்கும் இருந்து வந்த தடைகள் விலகுவதை காணலாம்.
ராகுவின் எதிர்முனை கிரகமான கேதுபகவான் 6-மிடத்திற்கு மாறுவதால் இதுவரை
இருந்து வந்த எதிர்ப்புகள் உங்களுக்கு அடி பணியும். கேது 6-மிடத்தில் அமர்வது
கடன், நோய்கள் அற்ற வாழ்வை தரும் என்பதால் இதுவரை கடன் தொல்லைகளில் மாட்டிக்
கொண்டு தலையை பிய்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் நல்ல பணவரவு வந்து கடனை
அடைப்பீர்கள்.
ஆறாம் வீடு அங்கே இருக்கப் போகும் கேதுவால் சுப வலிமை அடைவதால் அந்த பாவத்தின்
கடன், நோய், எதிர்ப்பு ஆகிய தன்மைகள் இனிமேல் குறையும். எனவே அதிகமான கடன்
தொல்லை, ஆரோக்கியப் பிரச்னைகளில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு
அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் பிறக்கும்.
பிறந்த ஜாதகத்தில் தசா புக்திகளும் ஒத்துழைத்தால் ஒன்றரை வருடத்திற்குள் கடன்
இல்லாத நிலைமையை அடைய முடியும் அளவிற்கு உங்களின் பொருளாதார உயர்வு நன்றாக
இருக்கும். எப்படி பார்த்தாலும் சிம்ம ராசிக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி
மிகப்பெரிய நற்பலன்களை தர இருக்கின்றது என்பது உறுதி.
பாபக் கிரகங்கள் பனிரெண்டாம் வீட்டில் நன்மைகளைத் தருவார்கள் என்ற
விதிப்படியும், ராகுவிற்கு கடகம் அதிநட்பு வீடு என்பதாலும் இந்தப்
பெயர்ச்சியில் ராகுவால் உங்களுக்கு அதிகமாகன நற்பலன்கள் கிடைக்கும். தருவார்.
அதேபோல உங்களின் ஆறாம் பாவத்திற்கு மாறும் கேதுபகவானும் உங்களுக்கு நன்மைகளை
மட்டுமே தருவார்.
பனிரெண்டாமிட ராகுவால் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் மாறுதல்கள்
இருக்கும். ஊர் மாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம், தொழில் இட மாற்றம்
போன்றவை தற்போது நடக்கும். சிலருக்கு இம்முறை வாழ்க்கையைப் புரட்டிப்
போடக்கூடிய அளவிற்கு ஏதேனும் ஒரு முக்கியமான விஷயத்திலும் மாற்றத்தை ராகு
தருவார்.
அதேபோல இயக்கும், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அதாவது
டிரைவர்கள், டிராவல்ஸ் துறையினர், ஓரிடத்தில் இல்லாமல் சுற்றிக்கொண்டே
இருக்கும் துறையினர் போன்றவர்களுக்கு ராகுபகவான் மிகுந்த நன்மைகளை அளிப்பார்.
இதுவரை வெளிநாடு போகாதவர்களை ராகு கடல் தாண்ட வைப்பார். வடமாநிலங்களுக்குப்
போவது போன்ற நீண்ட பிரயாணங்களும் அடிக்கடி இருக்கும்.
விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை
முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை ராகுவால் உண்டு.
சிலருக்கு மறைமுக வழியிலான தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது.
யார் வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால்
பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். குறிப்பிட்ட
சிலருக்கு நம்பர் டூ தொழில் இப்போது கை கொடுக்கும்.
நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று
நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் லோன் போட்டுத்தான்
வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். இந்தப் பெயர்ச்சி உங்களை ஒரு நல்ல சொத்து
சேர்க்க வைக்கும்.
தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி
சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு
போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக
இருங்கள்.
நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம்
சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு
பின்னால் சிரமப்பட வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள்.
யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது, பஞ்சாயத்து பண்ணுவது
போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். இதனால் மனவருத்தம், வீண்
விரோதங்கள் வரலாம்.
சொல்லிக்கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ்,
பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தப்
பெயர்ச்சி அபரிமிதமான நன்மைகளைத் தரும். மேற்கண்ட துறைகளில் இருப்போரின்
வாழ்க்கை லட்சியங்கள் இப்போது நிறைவேறும்.
ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில்
செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி,
சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு
பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம்
வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.
இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தர்ம
காரியங்கள் மற்றும் அறப்பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர்
உங்களை ஆலயத் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும்.
வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா
கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம்
செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.
பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்கள்
அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பிள்ளைகளின் கவனம்
படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு
வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு
ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.
யூக வணிகத்துறையில் இந்த வருடம் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச்
சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம்.
கவனத்துடன் இருங்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த
பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும்
இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம்
போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும்
தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.
மகம் நட்சத்திரக்காரர்களுக்கு:
மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம்
காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில்
பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. உங்கள் நட்சத்திரநாயகன்
கேதுபகவான் சுபபலம் பெறுவது நன்மைகளைத் தரும். மகம் நட்சத்திரக் காரர்களுக்கு
இம்முறை வீடு வாகனம் தாயார் போன்ற இனங்களில் மிகப் பெரிய நன்மைகள் நடக்கும்.
பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்களுக்கு இந்த முறை மிகப் பெரிய லாபங்கள், பணவரவுகள் கிடைக்கும். வீடு வாகன
விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும். சொந்த வீடு புதிய வாகனம் அமையும்.
மனைவியால் நன்மைகள் இருக்கும். விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை
இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை
வந்திருக்கிறது. இதுவரை சொன்னதை செய்து முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறி
அனைத்தும் நல்லபடியாக நடக்கும் நேரம் இது.
உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு:
தந்தையார் வழியில் நீங்கள் மிகப் பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். வெகுதூர
இடங்களில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் தலைமைப் பதவி
கிடைக்கும். அடிக்கடி பிரயாணங்கள் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல
திருப்பங்கள் உண்டு. வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித்
திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும்.
அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு
விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.
பரிகாரங்கள்:
சென்னையில் இருப்பவர்கள் மேடவாக்கம் சேலையூருக்கு அருகில் உள்ள மாடம்பாக்கம்
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் நடைபெறும்
சரபேஸ்வரர் வழிபாட்டில் கலந்து கொண்டு அருள் பெறுங்கள். மற்றவர்கள் அருகிலுள்ள
ஆலயங்களில் அதேநேரத்தில் வழிபடலாம்.
No comments :
Post a Comment