கடகராசிக் காரர்களுக்கு நடைபெற இருக்கின்ற ராகு-கேது பெயர்ச்சி நல்ல பொருளாதார
முன்னேற்றத்தை தரும்.
கடந்த முறை ராகு-கேதுக்கள் 2, 8 எனப்படும் நன்மைகளைத் தர முடியாத ஸ்தானங்களில்
அமர்ந்தார்கள். இதன் காரணமாக பெரும்பாலான கடகத்தினரின் தனம், வாக்கு,
குடும்பம் எனப்படும் மூன்று அமைப்புகளும் பாதிக்கப்பட்டன.
சிலருக்கு ஜீவன அமைப்புகளான வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில்
சிக்கல்களும், திருமண பருவத்தில் இருப்பவர்களுக்கு கல்யாணம் தடையாகியாதும்
இருந்து வந்தது. தற்போதைய பெயர்ச்சியின் மூலம் சர்ப்பக் கிரகங்கள் மேற்கண்ட
இனங்களில் தடைகளை கொடுத்து வந்த நிலைமை மாறும்.
அதே நேரத்தில் தற்போது மாற இருக்கும் 1, 7-ம் இடங்களும் ராகு-கேதுக்களுக்கு
நல்ல இடங்களாக நமது மூல நூல்களில் சொல்லப்பட வில்லை. ஆயினும் வாழ்க்கைக்கு மிக
முக்கிய தேவையான பண வரவை தடுத்துக் கொண்டிருந்த நிலை, மற்றும் வாழ்க்கையே
அமையாத, ஏற்கனவே அமைந்த வாழ்க்கையிலும் சிக்கல்களை தந்து கொண்டிருந்த நிலையில்
இருந்து ராகு-கேதுக்கள் மாறுகிறார்கள் என்பதே கடகராசிக்கு மிகப்பெரிய உதவியாக
இருக்கும்.
இன்னொமொரு நல்ல பலனாக உங்களின் ராசியான கடக வீடு ராகு-கேதுக்களுக்கு மிகவும்
பிடித்த வீடு என்பதும், கடகத்தில் அமர்ந்த ராகு சுப பலன்களையே அதிகம் செய்வார்
என்பதும் இந்தப் பெயர்ச்சியில் கடக ராசிக்கு கிடைக்க இருக்கும் மிகப் பெரிய
நல்ல விஷயங்களில் ஒன்றாக இருக்கும்.
இதுவரை எட்டாமிடத்தில் இருந்து வந்த கேதுவால் பொருள் இழப்பு, கடன் தொல்லை,
பேராசை பெரும் நஷ்டம் என்ற நிலை, குடும்பத்தில் சிக்கல்கள் நற்பெயர் இழப்பு,
வழக்குகளை சந்தித்தல் போன்ற நிலைமைகள் கடக ராசிக்கு இருந்து வந்தன. இவை
அனைத்தும் இப்போது மாறும்.
ராகு, கேது ஒன்று, ஏழாமிடத்திற்கு வருவது பொதுவாக நண்பர்கள், கூட்டுத் தொழில்
செய்பவர்கள் போன்றவர்களுக்கு ஆகாத ஒரு நிலைமை என்றாலும் ராகு-கேதுக்களுக்கு
உகந்த இடமான கடக, மகரத்தில் இந்த பெயர்ச்சி நடப்பதால் உறுதியாக கடகத்திற்கு
கெடுபலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.
மாறாக கேதுவின் ஏழாமிட இருப்பினால் இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு
கல்யாணம் கூடி வருதலும், புதிய தொழில் உருவாதலும், நண்பர்கள் மூலம்
ஆதாயங்களும், வாழ்க்கை துணை விஷயத்தில் நினைப்பது நடப்பதும், குறிப்பாக காதல்
நிறைவேறுதலும் இம்முறை கடக ராசிக்கு இருக்கும்.
கடக ராசிக்கார்ர்களுக்கு இதுவரை இருந்து வந்த பொருளாதார சிக்கல்கள் விலக
வேண்டும் என்பதால் இந்தப் பெயர்ச்சியினால் உங்களின் தொழில் முயற்சிகள் மிகவும்
நல்லபடியாக இருக்கும். எனவே கடகத்தினர் எந்த ஒரு விஷயத்திலும் முழு
முயற்சியுடன், ஆகத்திறனுடன், ஊக்கத்துடன் செயல்பட்டால் அனைத்தும் நல்லபடியாக
நடந்து வாழ்க்கை மேம்பாடுகள் கிடைக்கும் என்பது உறுதி.
ராகு-கேதுக்கள் மறைமுகமான தன லாபத்தையும், திடீர் அதிர்ஷ்டத்தையும் தர
இருக்கும் கிரகங்கள் என்பதால் இவர்கள் இருவரும் சர வீடுகளில் அமரும் நிலைகளில்
ஜாதகத்தில் யோக தசா புக்திகள் நடைபெறுபவர்களுக்கு மிகச்சிறந்த நல்ல பலன்களே
அளிப்பார்கள்.
எனவே பிறந்த ஜாதகப்படி ராகு நல்ல இடங்களில் அமர்ந்து ராகு தசை புக்தி
நடப்பவர்களுக்கும் ஜாதகப்படி நன்மைகள் தரும் அமைப்புகள் நடப்ப
இருப்பவர்களுக்கும் இம்முறை நல்ல பணவரவுகளையும், தனலாபங்களையும் ராகு தருவார்.
மேலும் இந்த ராகு, கேது பெயர்ச்சியை அடுத்து அக்டோபர் மாதம் 26ம் தேதி நடக்க
இருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் உங்களுக்கு மிகவும்
அதிர்ஷ்டத்தை தரக்கூடிய ஆறாம் இடத்திற்கு மாறப் போவதால் அதற்கு முன்னேற்பாடாக
நல்ல பலன்களை மட்டுமே ராகு கேதுக்கள் அளிப்பார்கள்.
கேது பகவானின் ஏழாமிட மாறுதலால் செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம்
கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே
பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம்
உங்களிடம் இருக்கும்.
பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்னைகள் தீர்ந்து
விடும் என்று சொல்லுவது இப்போது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற
தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாப
நிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை
உங்களுக்கு இருக்கப் போவது இல்லை.
குறிப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம் எனப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள்
இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின்
திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம்
உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.
அடுத்து சனியும் ஆறாமிடத்திற்கு மாறப்போவதால் கடன் வாங்கத் தேவையின்றி பண
வரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதி நிலைமையைப் பற்றி
கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள்.
எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து
நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம்
போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும்.
இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய
போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது
மாற முடியும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை
இப்போது நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக
முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ
அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.
இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தை
விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். சொகுசு வாகனம்
வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது. தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து
வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில்
நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து
வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.
இதுவரை பண விஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த கடக
ராசிக்காரர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல
மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள்.
நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான
சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல்
திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து தொழிலை
விரிவாக்கம் செய்ய முடியும்.
வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு
பிடிக்கும். வருமானம் நன்கு வரும். பங்குதாரர்கள் இடையே கருத்து வேறுபாடு
வரும். ஆனாலும் கூட்டுத் தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவில் இதுவரை
இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். குடும்பத்தில் சுப காரியங்கள்
நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு திருமணம்
கூடி வரும்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் கூடி வந்து
விட்டது. காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர்
சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து
தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள்.
வெளிநாட்டு தொடர்பால் இந்த வருடம் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும்
வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். கணிதம்
சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இம்முறை ஏதேனும் பரிசு அல்லது
விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கடக ராசிக்காரர்கள் மிகப்பெரிய பொதுநல வாதிகள் என்பதாலும், நுணுக்கமான வேலைகளை
அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையுமே சட்டென
கிரகித்துக் கொள்வீர்கள் என்பதாலும் அடுத்து வர இருக்கும் கிரகப் பெயர்சிகளின்
மூலம் நன்மைகளை அடைவீர்கள்.
இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும்,
கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால்
ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற
நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும்.
அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு
கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும்
புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச்
சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள்
உதவுவார்கள்.
குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு
செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய
முடியும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும்.
படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.
புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்களில் சிலர் கிழக்கு நாடுகளுக்கு வேலை விஷயமாகச் செல்வீர்கள். வருமானம்
சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது. வீண் செலவுகளை
முடிந்தவரை குறைத்துக் கொண்டால் இந்த வருடம் வளமான வருடமாக இருக்கும். வயதான
தாயாரைக் கொண்டவர்கள் அவரின் ஆரோக்கியத்தின் மேல் விழிப்புடன் இருங்கள்.
தாயாரால் விரையங்கள் இருக்கும் என்பதால் கவனம் தேவை. குறிப்பிட்ட சிலருக்கு
தாயாருடன் மனக்கசப்புகளும், தாயாரைப் விட்டு பிரிதலும் இப்போது நடக்கும்.
பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு:
வாகன விஷயங்களில் யோகம் கிடைக்கும். புதிய வாகனம் அமையும். ஏதாவது ஒரு செயலால்
புகழ் அடையும்படி இருக்கும். இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை
இப்போது சந்திப்பீர்கள். உங்கள் பிற்பகுதி வாழ்க்கையை நிர்ணயிக்கும் வருடமாக
இது இருக்கும். சிலருக்கு கல்வியில் ஆர்வம் குறையும். அக்கறை எடுத்து
படித்தாலும் மதிப்பெண் கிடைப்பது கடினமாக இருக்கும். கல்வியில் தடை வரும்.
பருவவயதுக் குழந்தைகளுக்கு படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் ஆர்வமும்,
நாட்டமும் இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள் அக்கறையுடன் கவனிப்பது நல்லது.
ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு:
உறவினர்களிடம் சுமுக உறவு தடைபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடம்
கொடுக்கல் வாங்கல் எதுவும் இப்போது செய்ய வேண்டாம். சொத்துப் பிரிவினை, நிலப்
பிரச்னைகள் போன்றவற்றில் கவனமாக இருங்கள். உங்களின் புத்திசாலித்தனத்திற்கும்,
யூகத்திறமைக்கும் ஏற்ற வருடம் இது. மனதிற்குள் நீங்கள் போட்டு வைத்திருக்கும்
திட்டங்களை இந்த வருடம் செயல்படுத்தி சோதனை செய்வீர்கள். இடமாற்றமும்,
வேலைமாற்றமும் உண்டு. நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
பரிகாரங்கள்:
ஏழைகளுக்கும் முடியாமல் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும்
தேடிப்போய் உதவி செய்து அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் ஆசிகளையும்
பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் உதவுவுது, ஏழை
மாணவருக்கு கல்வி உதவி, வசதிக்குறைவான குடும்பப் பெண்ணிற்கு திருமணத்திற்கு
உதவுவது போன்றவைகளால் ராகுவின் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
No comments :
Post a Comment