மிதுன ராசிக்காரர்களுக்கு எப்போதுமே யோகத்தை தரக்கூடிய கிரகங்களான
ராகு-கேதுக்கள் 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன.
ஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த 3, 9-ம் இடங்கள் அதிர்ஷ்டத்தைச்
செய்கின்ற நல்ல இடங்கள் என்ற நிலையில் தற்போது மாற இருக்கும் 2, 8-ம் இடங்கள்
சாதகமற்ற பலனை தரும் இடங்களாக நமது மூல நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பனிரெண்டு ராசிகளில் மிதுன ராசிக்கு மட்டும் ராகு பகவான் சுபத் தன்மையுள்ள
யோகர் என்ற நிலை பெறுவார் என்பதால் எப்போதுமே ராகு-கேதுக்கள் மிதுன ராசிக்கு
கெடுபலன்களை தருவதில்லை.
மேலும் தற்போது ராகு மாற இருக்கும் கடக வீடு அவருக்கு மிகவும் பிடித்த ஒரு
வீடு என்பதால் கடத்தில் அமரும் ராகு நன்மைகளை செய்வார் எனும் விதிப்படி
உங்களுக்கு அந்த பாவத்தின் தன்மைகளான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின்
நம்மைகளை மட்டுமே செய்வார்.
அதிலும் கடகம் ஜலராசி என்பதாலும், கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு செல்வதை
குறிக்கும் ராசி என்பதாலும், இந்தப் பெயர்ச்சியினால் மிதுன ராசிக்
காரர்களுக்கு வெளிநாடுகள், தூர இடங்கள் மூலமான லாப வரவுகள் இருக்கும்.
கேதுபகவான் 8-மிடத்திற்கு மாறினாலும் அது மிதுன ராசியின் பாக்கியாதிபதியான சனி
பகவானின் மகர வீடு என்பதால் இருக்கும் வீட்டின் அதிபதியின் பலன்களை சர்ப்பக்
கிரகங்கள் செய்யும் என்ற விதிப்படி உங்கள் ராசிக்கு யோக கிரகமான சனியின்
பலன்களை மட்டுமே கேது எடுத்து செய்வார். எனவே 8-ம் இடத்தில் அமரும் கேதுவால்
கெடுதல்கள் எதுவும் நடக்குமோ என்றும் பயப்படத்தேவையில்லை.
அதே நேரத்தில் 3, 6, 10, 11 ஆகிய உபசய ஸ்தானங்களை தவிர்த்து வேறு இடங்களில்
அமரும் ராகு-கேதுக்கள் அந்த பாவத்தை கெடுத்துத்தான் நன்மைகளை செய்வார்கள் என்ற
விதிப்படி 2-ம் வீட்டின் அமரும் ராகுவால் மிதுன ராசிக்கு பொருளாதார
நெருக்கடிகள் இருக்கும்.
எனவே எந்த ஒரு விஷயத்திலும் குறிப்பாக பண முதலீடு விஷயங்களில் அவசரப்பட்டு
எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இது போன்ற காலகட்டங்களில் முதலீடு செய்வதில்
கவனமாக இருக்க வேண்டும் என்பதால் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் என்பது
போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பியோ, அறிமுகம் இல்லாத நபர்களிடமோ,
அனுபவம் இல்லாத கம்பெனிகளிடமோ பணத்தை போட வேண்டாம்.
அதிக வட்டி தருவதாக சொல்லும் கம்பெனிகளில் பணம் போடுவது, அதிக வட்டி தருவதாக
சொல்லும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுவது போன்ற செயல்களை செய்ய சொல்லி
ராகுபகவான் தூண்டுவார் என்பதால் பேராசை பெரும் நஷ்டம் என்பதை புரிந்து கொண்டு
பண விஷயத்தில் மன அடக்கத்துடன் இருந்து கொண்டாலே இந்த ராகு-கேது பெயர்ச்சி
எந்த வித பாதிப்புகளையும் உங்களுக்கு தராது.
அதே நேரத்தில் 8-ம் இடத்தில் சுபத்துவமாக அமரப் போகும் கேது எதிர்பாராத
அதிர்ஷ்டம், தனலாபம், பெரியதொகை ஒன்று வருவது போன்ற விஷயங்களை செய்வார்
என்பதால் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை முடித்து
கொடுப்பதன் மூலமாக உங்களுக்கு நல்ல தனலாபம் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் போன்றவைகளில் வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே தொடர்பை
ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மீடியேட்டர்
போன்றவர்களுக்கும் கமிஷன், காண்ட்ராக்ட் போன்ற தொழில் அமைப்புகளில்
இருப்பவர்களுக்கும் இந்த ராகு-கேது பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரும்.
எட்டாமிடம் சுபத்துவம் அடைவதால் அதன் நல்ல பலன்களான எதிர்பாராத அதிர்ஷ்டம்,
ஒரு பெரிய தொகை திடீரென கிடைத்தல், உறவினர் சொத்து கிடைத்தல், வெளிநாட்டு
நன்மை போன்ற பலன்கள் நடந்து ராகுவினால் ஏற்படும் சாதகமற்ற பலன்கள்
சரிக்கட்டப்படும் என்பது உறுதி.
மேலும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சி
உங்களுக்கு மிகவும் நன்மைகளைச் செய்யப் போகும் ஒன்றாக இருக்கும். கடந்த இரண்டு
வருடங்களாக மிதுனத்திற்கு சாதகமற்ற அமைப்பில் இருந்து வந்த குருபகவான் இன்னும்
சில வாரங்களில் உங்களுக்கு நன்மை தரும் இடமான ஐந்தாமிடத்திற்கு மாறி உங்கள்
ராசியை தனது சுபப் பார்வையால் பார்க்கப் போகிறார். இது உங்களுக்கு மேன்மை
தரும் அமைப்பு.
குருவின் பார்வையினால் ராசி சுபத்துவம் அடைந்திருக்கும் நேரங்களில் மற்ற
கிரகங்கள் தரும் சாதகமற்ற பலன்கள் மட்டுப் படும் என்பது ஜோதிட விதி. எனவே
மிதுனத்திற்கு இந்த ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் சங்கடமான சூழ்நிலைகள்
எதுவும் வந்து விடப் போவதில்லை.
இந்தப் பெயர்ச்சியினால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புக்கள் மூலம்
உங்களுக்கு வேலைப்பளு அதிகம் வரும். வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில்
செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். உங்கள் உழைப்பும், லாபமும்
திருடு போவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அதிகமான வட்டிக்கு கடன்
வாங்காதீர்கள்.
வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம்
யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம்
கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
சுயதொழில் நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும்
வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ,
வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.
ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக
அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள்
போன்றவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகுந்த யோகத்தை தரும்.
அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம்
இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து
உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று
இப்போது நடக்கும்.
அஷ்டம கேதுவால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற வேலை
அமையவும் வாய்ப்பு உள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப்
பயணங்களால் லாபங்கள் இருக்கும்.
இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும்.
வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும்
வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள்.
பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும்.
பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக
பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்.
சிலருக்கு மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று
வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் ராகு கேதுப்பெயர்ச்சியால்
இருக்கும்.
யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க்
எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம்
வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.
குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ
வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும்
நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும்.
கம்ப்யூட்டர் சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும்,
மந்தமான போக்கும், மறதிகளும் ஏற்படும். பொறியியல் துறை மாணவர்கள் கூடுதல்
கவனத்துடன் படிக்க வேண்டிய காலம் இது. பேசும்போது வார்த்தைகளில் கவனமாக
இருங்கள்.
பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே
விரோதிகளும் எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த
பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.
நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது
அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது
என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும்
மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.
இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு செப்டம்பர் மாதத்திற்கு மேல்
குருபலம் வருவதால் இனிமேல் நல்லபடியாக திருமணம் நடக்கும். மிதுன
ராசிக்காரர்கள் வீட்டில் இந்தப் பெயர்ச்சியால் நிச்சயமாக ஏதேனும் ஒரு சுப
காரியம் உண்டு.
பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும்
பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக
இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு
திண்டாட்டமாகலாம்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும்,
சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும்.
உங்களுடைய வேலைத்திறன் முதலாளியாலோ அல்லது மேலதிகாரிகளாலோ மதிக்கப்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு:
எந்தக் காரணத்தை முன்னிட்டும் வீட்டுப் பத்திரத்தை ஈடாகவோ, அடமானமாகவோ வைத்து
புதிதாக தொழில் ஆரம்பிக்க வேண்டாம். இந்தப் பெயர்ச்சி நடக்கும் முன்பே சில
மாதங்களுக்கு முன்பு வீட்டினை வைத்து தொழில் செய்ய ஆரம்பித்தவர்கள் இந்த
ஒன்றரை வருட காலங்கள் மிகவும் கவனமுடன் பங்குதாரர்களை நம்பாமல் சிக்கனமுடன்
தொழில் செய்வது நல்லது. வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை
சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு பகவான் கடக வீட்டில் ஸ்தான பலம் பெறுவதால் வேறு இன மொழி மதக்காரர்கள்
உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக்
கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும்.
பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். பெயர்ச்சியின் பிற்பகுதியில் மிகவும்
நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும். எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில்
இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும்
பயனுள்ள பெயர்ச்சியாகும் இது.
புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்கள் நட்சத்திர நாதனான குருபகவான் இன்னும் சில வாரங்களில் ராசியைப்
பார்க்கப் போகிறார். இது மிகவும் யோகமான ஒரு அமைப்பு. பணத்திற்கு அதிபதி
குருபகவான்தான். அதாவது குருதான் தனகாரகன். ஒருவரை மிகப்பெரிய கோடீஸ்வரன்
ஆக்குபவர் குருதான். அவர் பார்வை ராசிக்கு கிடைப்பதால் பணம் சம்பாதிப்பதில்
இந்த வருடம் உங்களுக்கு நல்ல வருடமாக இருக்கும். நீங்கள் நேர்மையான வழிகளையே
கடைப்பிடிப்பவர் என்பதால் தனயோகம் முழுமையாக உண்டு. வாகனவிஷயங்களில்
செலவுகளும், விரையங்களும், மாற்றங்களும் இருக்கும் என்பதால் புதுவாகனம்
வாங்கும் போதோ, இருக்கும் வாகனத்தை மாற்றும் போதோ அதிக கவனம் எடுத்துக்
கொள்ளுவது நல்லது.
பரிகாரங்கள்:
ஒரு கருப்புநிற விதவைப் பெண்மணி அல்லது ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு
கருப்புநிற ஆடை, நான்கு கிலோ கருப்பு உளுந்து, ஒரு தோல் பை அல்லது முற்றிலும்
தோலினால் ஆன செருப்பு ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தானம்
கொடுங்கள்.
No comments :
Post a Comment