Friday, July 21, 2017

RISHABAM : 2017 - RAHU KETHU PEYARCHI ரிஷபம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்:

ரிஷபராசிக் காரர்களுக்கு தற்போது நான்கு, பத்தாமிடங்களில் இருக்கும் ராகு-கேதுக்கள் மிகவும் நற்பலன்களை தரக்கூடிய மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு மாற இருக்கிறார்கள்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால் மிகவும் நல்ல பலன்களை அடையப் போகும் ராசிகளில் ரிஷப ராசியும் ஒன்று.

கடந்த காலங்களில் வீடு, வாகனம், உயர்கல்வி, தாயார் நலம், தன் சுகம் ஆகிய பலன்களை காட்டக் கூடிய நான்காமிடத்தில் இருள் கிரகமான ராகுபகவான் அமர்ந்திருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக மேற்கண்ட விஷயங்களில் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் எதுவும் நடைபெற வில்லை.

குறிப்பாக வசதி இல்லாத வீட்டில் இருந்து வந்த நிலைமை, சொந்த வீட்டுக் கனவு இழுத்துக் கொண்டே போகுதல், தாயார் வழி விஷயங்களில் தடைகளும், தாமதங்களும், அம்மா சம்பந்தபட்ட விஷயங்களில் எதிர்மறை பலன்கள், மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமின்மை, உயர்கல்வி கற்க தடை, நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய குறை ஆகியவை நான்காமிடத்தில் இருந்து வந்த ராகுவால் நடந்து கொண்டிருந்தன.

மேற்கண்ட சாதகமற்ற பலன்கள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் மாறுதல் அடைந்து அனைத்திலும் இருக்கும் தடைகள் உங்களுக்கு நீங்கும்.

குறிப்பாக தன்னுடைய 18 ஆண்டுகால ஒரு முழுச் சுற்றில் ராகு-கேதுக்கள் மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களில் மட்டுமே நற்பலன்களை தருவார்கள் என்று நமது மூல நூல்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதாவது தன்னுடைய சுற்றுப் பாதையில் வெறும் நான்கரை ஆண்டு காலம் மட்டுமே ஒரு மனிதனுக்கு நன்மைகளை தரக்கூடிய விதத்தில் ராகு-கேதுக்கள் அமர்வார்கள். அதில் மிக முக்கியமான ஒரு அமைப்பு மூன்றாமிடமாகும்.

எனவே 18 ஆண்டுகளுக்கு மட்டுமே வரக் கூடிய மூன்றாமிட ராகு தற்போது ரிஷப ராசிக்காரர்களுக்கு அமைந்திருப்பதால் இது ஒரு சிறப்பான ஒரு நற்பலன்களை தரக் கூடிய பெயர்ச்சியாகவே ரிஷபத்திற்கு இருக்கும். இன்னும் ஒரு கூடுதல் நன்மையாக தற்போது மாற இருக்கும் கடக வீடு, ராகுவிற்கு மிகவும் பிடித்த ஒரு வீடு என்பதாலும் இம்முறை ரிஷபத்திற்கு நற்பலன்கள் நன்றாகவே இருக்கும்.

அடுத்து ஒன்பதாமிடத்திற்கு மாற இருக்கும் கேதுபகவான் அவர் மாறப்போகும் மகர வீடு சனியின் நட்பு வீடு என்பதால், சிலருக்கு ஆன்மிக எண்ணங்களை கூடுதலாக தருவார். கேதுபகவான் நல்ல அமைப்பில் இருக்கும் போது ஒரு மனிதனுக்கு ஆன்மிக அனுபவங்கள் தூக்கலாக இருக்கும் எனும் விதிப்படி. தற்போது மாற இருக்கும் கேதுவின் அமைப்பினால் உங்களுக்கு நல்ல ஆன்மிக அனுபங்கள் ஏற்படும்.

பாக்கிய ஸ்தானத்திற்கு வரப் போகும் கேதுவால் இதுவரை கிடைக்காத சில பாக்கியங்கள் உங்களுக்கு இப்போது கிடைக்கும். அவரவர்களின் வயதிற்கேற்ப அந்த வயதிற்குரிய நல்ல அமைப்புகள் இப்போது நிறைவேறும். எதுவும் கிடைக்க இருந்து வந்த தடைகள் விலகும்.

ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து சில வாரங்களில் நடக்கப் போகும் சனிப் பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் உங்களுக்கு அஷ்டமச் சனியாக மாற இருக்கும் நிலையில் ராகு-கேதுக்கள் முயற்சி மற்றும் தைரிய ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் வருவது உங்களுக்கு ஒரு பாதுகாப்பான அமைப்பு.

இதன் மூலம் உங்களுடைய சிந்தனை தெளிவாகும். திட்டமிடல் நன்றாக இருக்கும். எந்த ஒரு பிரச்னையையும் தீர்க்கமுடன் யோசித்து சமாளிக்கும் தைரியம் உண்டாகும். எனவே எப்படிப் பார்த்தாலும் இம்முறை நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சி உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி’

அதே நேரத்தில் ராகுகேது பெயர்ச்சியை அடுத்து சில வாரங்களில் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் நீங்கள் வரப் போவதால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த வித புது முயற்சிகளும், தொழில் ரீதியாக செய்யாமல் இருப்பது நல்லது. அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ, புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ வேறு எந்த வகையிலும் புதியவைகளை செய்வதோ வேண்டாம்.

வேலை செய்பவர்களும் இருக்கும் வேலையை கண்ணும் கருத்துமாக கவனித்து செய்து வருவது நல்லது. மேலதிகாரி சொல்லும் பேச்சுகளைக் கவனமாக கேட்டு நடங்கள். அலுவலகங்களில் வீண் ஈகோ பார்க்க வேண்டாம். வேலை பிடிக்கவில்லை என்று இருக்கும் வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்கு போக போகிறேன் என்பது இந்த நேரங்களில் உதவாது.
 
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை இப்போது நடக்கும் என்பதால் இருக்கும் வேலையை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது நல்லது. அல்லது இன்னொரு வேலை கிடைத்த பின்பு இருக்கும் வேலையை விடுவது நல்லது. ஆனால் புதிதாய்க் கிடைக்கும் வேலை நன்றாக இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. சில நேரங்களில் இந்தப் பேயை விட அந்தப் பிசாசிடமே இருந்திருக்கலாம் என்றும் நினைக்க வைக்கும்.

அரசு, தனியார், காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வருடம் சம்பள உயர்வு, படிகள் போன்றவை ஓரளவு கிடைக்கும். பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.

சிலருக்கு இப்போது வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற மாற்றங்கள் இருக்கும். அந்த மாற்றம் வேண்டாததாக, பிடிக்காததாக இருக்கலாம். சில நிலைகளில் சீதோஷ்ண நிலை ஒத்து வராத இடங்களில் இருக்க வேண்டியிருக்கும். எங்கேயாவது நமது தாய்மொழி காதில் கேட்காதா என்று ஏங்கும்படி முற்றிலும் அந்நிய மொழி, இன, மத பிரதேசங்களில் பணியாற்ற வேண்டியிருக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

பொருளாதார நிலை மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

பிற இன மொழி மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். ராகு-கேதுப் பெயர்ச்சியின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள பெயர்ச்சியாகும் இது.

இதுவரை வாழ்க்கையில் செட்டிலாகாத ரிஷப ராசிக் காரர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமான நன்மைகளையும், எதிர்காலத்திற்கான அஸ்திவாரங்களையும் உருவாக்கும் ஒரு காலகட்டம் என்பதால் இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையில் நிலை கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் இந்த ராகுப்பெயர்ச்சியின் மூலம் உருவாகும். அவற்றை சிறியவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

ராகுபகவான் மூன்றாமிடத்தில் நிலை கொள்வதால் உங்களுடைய சொல்லாற்றல், செயல்திறன், வாக்குப் பலிதம், மனதைரியம், எதையும் சமாளிக்கும் திறன், தெளிவான சிந்தனை போன்ற அனைத்துப் பண்புகளும் இப்போது உறுதி பெற்று நல்ல முடிவுகளை இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்து உங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கி கொள்வீர்கள்.

குறிப்பாக அடுத்த சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மதங்களில் ரிஷப ராசிக்காரர்கள் வாழ்வின் சில முக்கிய திருப்பு முனையான அமைப்புகளைப் பெறுவீர்கள் என்பதோடு அதன் மூலம் உங்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாகவும் இருக்கும் என்பதும் உறுதி.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த வருடம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். வருமானம் வந்தால்தானே செலவு செய்ய முடியும்? எனவே பணவரவும் திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். இந்தப் பெயர்ச்சியில் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு இருக்காது. அதேநேரத்தில் முறைகேடாக தவறான வழியில் ஆசை காட்டப்படும் எந்த முயற்சிக்கும் மனதை திடப்படுத்திக் கொண்டு அலைபாயாமலும் அடிபணியாமலும் இருக்க வேண்டியது அவசியம். சில நேரங்களில் செய்யாத தவறுக்கும் தண்டனை கிடைக்கும் என்பதால் எதற்கும் ஒரு ஆதாரம் வைத்துக் கொள்ளுங்கள்.

ரோகினி நட்சத்திரக்கார்களுக்கு:

இந்த வருட பிற்பகுதியில் நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், திருமணம், குழந்தைபிறப்பு, வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் குடும்பத்தில் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடக்கும். சிலருக்கு ஒரு வருட காலம் பிள்ளைகளால் விரையங்களையும், பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கங்களையும், பருவ வயதுக் குழந்தைகளின் முதிர்ச்சியற்ற வயதுக்கே உரிய போக்கால் மனக்கஷ்டங்களையும் தருவார்.

மிருகசீரிடம் நட்சத்திரக்கார்களுக்கு:

வாழ்க்கைத்துணை மூலம் இந்த வருடம் உங்களுக்கு மிகச்சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள். அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே சில விஷயங்களை திட்டமிட்டுக் கண்காணித்து அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும்.

பரிகாரங்கள்:

சென்னையில் இருப்பவர்கள் மயிலாப்பூர் அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் அமாவாசை தினத்தன்று நடக்கும் சூலினி துர்கா ஹோமத்தில் கலந்து கொண்டு நன்மை பெறுங்கள். வெளியூரில் இருப்பவர்கள் அருகாமை கோவில்களில் இந்த ஹோமம் நடைபெறும்போது கலந்து கொள்ளுங்கள்.

No comments :

Post a Comment