Friday, July 21, 2017

MAGARAM : 2017 - RAHU KETHU PEYARCHI மகரம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு சென்ற முறை அஷ்டம ராகுவாக இருந்து கடுமையான பலன்களைக் கொடுத்து வந்த ராகுபகவான் அந்த சாதகமற்ற நிலையில் இருந்து விலகி இம்முறை ஏழாமிடத்திற்குச் செல்கிறார். இதுவும் ஒரு சுமாரான நிலைதான் என்றாலும் அஷ்டம ராகு போலத் துன்பங்கள் இருக்காது என்பதால் ஒருவகையில் இது உங்களுக்கு நல்ல அமைப்புத்தான்.

அதேபோல இதுவரை உங்களின் இரண்டாமிடத்தில் இருந்து பொருளாதாரச் சிக்கல்களை கொடுத்து வந்த கேதுபகவானும் இப்போது உங்கள் ராசிக்கு மாறுகிறார். ராசியில் இருக்கும் கேது சுபத்துவமும் சூட்சும வலுவும் பெறுவதால் கேதுவால் உங்களுக்கு கெடுதல்கள் இல்லாமல் நன்மைகள் இருக்கும்.

சென்ற காலங்களில் உங்கள் ராசிக்கு இருந்து வந்த சரியில்லாத கோட்சார நிலையினால் சிலருக்கு கசப்பான அனுபவங்களும், சிக்கல்களும், கடன் தொல்லைகளும், உடல்நலப் பிரச்னைகளும் இருந்து வந்தன.

தற்போதைய ராகுகேது பெயர்ச்சிக்குப் பிறகும் மாறும் கிரக நிலைகளால் உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் அனைத்தும் பொலிவடையும். உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும்.

அதேநேரத்தில் ராகுகேது பெயர்ச்சிக்குப் பிறகு நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால் வேலை தொழில் விஷயங்களில் அகலக்கால் வைக்காமல் எதிலும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னரும் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ உங்கள் மேல் அக்கறை கொண்ட நண்பர்கள் உறவினர்களிடமோ கலந்து பேசி அவர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது.

வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும், லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.

பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் குழந்தைகளின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப் பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம்.

நீங்கள் பிறந்த போது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும்போதே கர்ணனின் கவசகுண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம்.

குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.

தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்டம் கை கொடுக்காத நேரம் இது. உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும். செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும்.

கடும் முயற்சிக்குப் பின்னர்தான் எதையும் செய்ய முடியும். சிலர் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.
புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம் உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

அடிக்கடி ஞாபகமறதி வரும். எனவே கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை நம்ப வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் உங்களுக்கு நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கு தடைகள் உண்டு. எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும்.

பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு துறை சார்ந்த நெருக்கடிகள் இருக்கும். மேலதிகாரிகளிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். செய்யாத தவறுக்கு வீண்பழி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.

பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை விரயகேது ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

வயதான மகர ராசிக்கார்கள் சிலருக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

ஜன்ம ராசியில் கேது அமர்வதால் தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். சிலர் புனிதத்தலங்களுக்கு அருகில் வேலை மாறுதல்கள் பெறுவீர்கள். சிதிலம் அடைந்த ஆலயங்களை புனருத்தானம் செய்வீர்கள். கும்பாபிஷேக திருப்பணிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.

தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார்.

மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளைஞர்களும், யுவதிகளும் தங்களின் வாழ்க்கைத் துணைவரை பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கலாம். காதல் வரும் வருடம் இது.

பெண்களுக்கு இந்தப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே இப்போது வெற்றி கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு:

வேலை மாற்றங்களோ வேலையை விட்டு விலகக்கூடிய சூழ்நிலைகளோ, தூர இடங்களுக்கு பணி மாறுதல்கள் கிடைப்பதோ இப்போது இருக்கும் என்பதால் எதையும் நீங்கள் புத்திசாலித்தனமாக சமாளிக்க வேண்டி இருக்கும். தந்தைவழியில் ஆதரவு குறையும். அதேநேரத்தில் உங்களின் ஆன்ம பலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களுக்கு சிறப்பு நற்பலன்களும் நல்ல லாபங்களும் இப்போது உண்டு. சந்திரன் இரண்டேகால் நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார் என்பதால் அவர் வலுவாக இயங்கும் நாட்களிலும், கேதுவுடன் இணையும் நேரங்களிலும் மிகுந்த நன்மைகளை இப்போது பெறுவீர்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திரு இடம் போன்ற புனிதத் தலங்களுக்கு போக முடியும்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு:

பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இந்தப் பெயர்ச்சியால் இருக்காது. அதேநேரம் ஏழரைச் சனி ஆரம்பிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அலைச்சல்கள்தான் இருக்கும்.

பரிகாரங்கள்:

கேதுபகவானால் கிடைக்கும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயத்தில் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அன்றோ அல்லது ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையன்றோ அபிஷேகம் செய்யுங்கள். இயலாதவர்கள் செவ்வாய்தோறும் விநாயகப் பெருமானுக்கு விளக்கேற்றுங்கள்.

No comments :

Post a Comment