Friday, July 21, 2017

KUMBAM : 2017 - RAHU KETHU PEYARCHI கும்பம் : 2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

கும்பம்:

பனிரெண்டு ராசிகளில் கும்ப ராசிக்கு மட்டும் மிகவும் மேன்மையான கோட்சார அமைப்புகள் இப்போது உருவாகின்றன. தற்போதைய ராகு,கேது பெயர்ச்சி மிகவும் நன்மையைத் தரும் ஆறு பனிரெண்டாமிடங்களில் உங்களுக்கு நடக்க இருக்கிறது.

ராகு,கேதுக்கள் இதுபோல ஒரு நல்ல இடத்திற்கு வருவது பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். ஆகவே இம்முறை கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு கேதுப் பெயர்ச்சியால் மிக அதிக நன்மைகள் கிடைக்கும்.

அதைப் போலவே ராகுகேது பெயர்ச்சியை அடுத்து நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியும் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தைத் தரும் ஒரு நல்ல மாறுதலாக இருக்கும். இதன் மூலம் கும்ப ராசிக்காரர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் நிலையைப் பெறுவீர்கள்.

ராகு, கேது பெயர்ச்சியும், குருப் பெயர்ச்சியும்தான் உங்களை சந்தோஷப்படுத்தப் போகிறது என்றால் அதனை அடுத்த சில வாரங்களில் நடக்க இருக்கும் சனி பெயர்ச்சி உங்களை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் விதமாக லாப ஸ்தானம் எனப்படும் பதினொன்றாமிடத்திற்கு சனிபகவான் மாற இருக்கிறார்.

இந்த அமைப்பு ஒரு மனிதனின் வாழ்வில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடக்க இருப்பது என்பதால் எந்த வகையில் பார்த்தாலும் இன்னும் மூன்று வருடங்களுக்கு கோட்சார ரீதியில் கும்பத்திற்கு மிகுந்த சாதகமான பலன்கள் நடக்க இருக்கின்றன.

அதேநேரத்தில் கோட்சார பலன்கள் என்பவை பொதுவானவைதான். ஒரு மனிதனுக்கு நடக்க இருக்கும் நல்ல கெட்ட சம்பவங்களையும், நன்மை தீமைகளையும் உறுதியாகச் சொல்பவை அவனது பிறந்த ஜாதக அமைப்புப்படி நடக்க இருக்கும் தசாபுக்தி அமைப்புகள்தான்.

தசாபுக்தி பலன்களும், இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் கோட்சார பலன்களும் சரியான விதத்தில் நன்மையாக ஒன்று சேரும் போது ஒரு மனிதன் சந்தோஷ வாழ்வின் உச்சத்திற்கு செல்ல முடியும்.

எனவே பிறந்த ஜாதகப்படி நல்ல தசா,புக்தி அமைப்பு நடப்பவர்கள் நான் சொல்லும் இந்த நன்மைகளை நூறு சதவிகிதம் அனுபவிப்பீர்கள். பிறந்த ஜாதகப்படி நல்ல அமைப்புகள் நடக்காதவர்களுக்கு பலன்கள் சற்றுக் குறைவாக இருக்கும்.

கும்ப ராசியினர் இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு பம்பர் பரிசாக இந்த மூன்று பெயர்ச்சிகளும் அமையும் என்பதால் இந்த வருடத்தின் இறுதியில் இருந்து மிகவும் நன்மைகளை அடைவீர்கள்.

ஆறாமிடத்திற்கு மாறும் ராகுவால் செய்தொழில் விருத்தி, எதிலும் லாபம், யாவற்றிலும் வெற்றி, அரசலாபம், அன்னிய இன, மத, மொழிக்காரர்களால் நன்மை. வெளிநாடு, வெளிமாநில மேன்மை, தூரஇடங்களில் இருந்து பணம் கிடைத்தல், சிறிது முயற்சி, பெரியநன்மை. அதிர்ஷ்டம் ஆகிய பலன்கள் உங்களுக்கு நடக்கும். இதுவரை நடக்காமல் தட்டிப்போயிருந்த அத்தனை பாக்கியங்களும், கொடுப்பினைகளும் இப்போது தடையின்றிக் கிடைக்கும்.

ராகுபகவான் கடக வீட்டில் அமரும் போது அதிகமான நன்மைகளைச் செய்வார் என்பதால் இம்முறை இரட்டிப்பு நன்மையாக பெயர்ச்சிக்குப் பிறகு தாராள பணவரவு, குழந்தைகளால் பெருமை போன்ற பலன்களைச் செய்வார். குறிப்பாக பிறந்த ஜாதகத்தில் ராகுதசை அல்லது ராகுபுக்தி நடந்து கொண்டிருப்பவர்களுக்கும், யோகமான தசாபுக்திகள் நடப்பவர்களுக்கும் இம்முறை ராகுபகவானால் மேம்பட்ட நல்ல லாபங்கள் கிடைக்கும்.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்குப் பிடித்த வகையில் நல்லசம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும்.

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பள உயர்வு, பதவிஉயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள், சுயதொழில் செய்பவர்கள் உள்ளிட்டவர்கள் தொழில்மேன்மையும், புதிய தொழில் தொடங்குதலும் அடைவீர்கள்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

விவசாயிகளுக்கு இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய முயற்சிகளை இப்போது செய்யலாம்.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். திருமண வாழ்வில் பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்தானவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். இந்த வாழ்க்கை நீடித்தும் நிம்மதியாகவும் இருக்கும்.

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த மங்களகாரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். காதலித்துத் கொண்டிருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு நல்லமுறையில் குழந்தை பிறக்கும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.

பெண்களுக்கு இந்த ராகுகேதுப் பெயர்ச்சி சிறப்பான நன்மைகளைத் தரும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும்.

செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் குருப்பெயர்ச்சியின் மூலம் குருபகவான் பாக்ய வீடு எனப்படும் ஒன்பதாமிடத்திற்கு மாறுவதால் வருட இறுதியில் குருவாலும் உங்களுக்கு நன்மைகள் இருக்கும்.

வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வாங்க முடியும். புதிதாக வாகன யோகம் வந்து விட்டது. நீண்ட காலமாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த புதிய வாகனம் வாங்க முடியும். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம்.

குறிப்பிட்ட சிலர் கடந்த காலங்களில் மனக்கஷ்டங்களையும் வாழ்வில் தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இப்போது இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும்.

வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். கடன் பெற்று நல்ல பிளாட் வாங்க முடியும். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.

செலவுகள் அதிகம் இருக்கும் எனபதால் வரும் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்ல விதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம் என்பதால் வரப்போகும் வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. அடுத்தடுத்து நன்மையாக வந்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கும்ப ராசியினர் உங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வீர்கள் என்பது நிச்சயம்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு:

வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். திரவப் பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப் பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல்கதவைத் தட்டும்.

சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு:

தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வருடம் நீங்கள் செய்யும் ஒரு உதவியால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த ராகுகேதுப் பெயர்ச்சியால் தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயணங்களும், ஞானிகள் தரிசனமும் கிடைக்கும். பிறந்த ஜாதகத்தின்படி குரு புக்தி நடப்பவர்கள் நல்ல பலன்களை அடைவீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்த ராகுப் பெயர்ச்சியால் இருக்கும்.

பரிகாரங்கள்:

ராகுபகவானால் பெறும் நன்மைகளை கூட்டிக்கொள்ள ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு சலவையாளருக்கு 18 கிலோ அடுப்புக்கரி தானம் செய்யவும். கேதுபகவானுக்கென உள்ள திருத்தலமான காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயத்தில் அர்ச்சனை அபிஷேக ஆராதனைகளையும் செய்யலாம்.

No comments :

Post a Comment