Friday, 2 June 2017

2017 ஜூன் மாத நட்சத்திரப் பலன்கள்

அஸ்வினி 

இந்த மாதம் நல்ல பணவரவு உங்களுக்கு இருக்கும். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் நன்மைகளை அடைவீர்கள் திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. வருமானம் சிறப்பாக இருக்கும் என்பதால் பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கூடுதல் சம்பளத்துடன் கிடைக்கும். இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இப்போது நல்லபடியாக திருமணம் கூடி வரும்.

பரணி 

உங்களில் சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடையும் நிகழ்வுகள் இந்தமாதம் உண்டு. வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள். குறிப்பிட்ட சில பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த மாதம் வீண் செலவுகள் இருக்கும். அதேநேரத்தில் பணவரவுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் சேமிக்க முடியாமல் போகும். சிலர் வீட்டுக்குத் தேவையான பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

கிருத்திகை

ஆசிரியர், பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்லமாதம் இது. செலவுகளும், சுபவிரயங்களும் இப்போது இருக்குமாதலால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உங்கள் நட்சத்திரநாதன் சூரியன் மாதம் முழுவதும் நல்ல அமைப்பில் இருப்பது வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளை வளப்படுத்தும் என்பதால் இந்த மாதம் சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். அதே போல மாதம் முழுவதும் பணவரவும் நல்லபடியாக உண்டு. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.

ரோகிணி

தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். ரோகினி நட்சத்திரக்கார்களுக்கு இந்தமாதம் நல்ல மாதம்தான். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும்.

மிருகசீரிஷம்

பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் இந்த மாதம் உள்ளது. இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கலைஞர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும். கெடுதல்கள் எதுவும் இந்த மாதம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் இந்த மாதம் முழுவதும் பலமடைவதால் எரிச்சலும் சிடுசிடுப்பும் இருக்கும். அடிக்கடி கோபப்படுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் கருத்து வேற்றுமைகள் இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

திருவாதிரை

திருமணம் தாமதமாகி கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் திருமண உறுதி நிகழ்வுகள் உண்டு. காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தைரியம் வரப்பெற்று பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. இதுவரை கஷ்டப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தும் இனிமேல் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றியாக நடந்து உங்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும். இந்த மாதத்தில் இருந்து புதிய மனிதராக உணர்வீர்கள். உங்களில் அரசியல்வாதிகளில் சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். ஜூன்மாதம் உங்களுக்கு அருமையான மாதம்.

புனர்பூசம்


பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னைகள் உள்ளவருக்கு இந்த மாதம் சாதகமான தீர்வு கிடைக்கும். வெகுசிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இந்த மாதம் உற்சாகமான மாதமாக இருக்கும். ஏதேனும் ஒரு விஷயத்தில் குழப்பமாகி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். நீண்டநாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். தனயோகம் உண்டாவதால் பணவரவுக்குப் பஞ்சமில்லை.. பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள்.

பூசம்

மனைவியுடன் கருத்துவேற்றுமை இருக்கும். மீடியாத் துறையினருக்கு அலைச்சல்கள் உண்டு. சிறுகலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கால நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதுவரை தோல்வி மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப்பெற்று சுறுசுறுப்பாவீர்கள். சுயதொழில் செய்வோருக்கு முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ஆயில்யம்

குறைகள் எதுவும் சொல்ல முடியாத மாதமாக ஜூன் மாதம் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்தமாதம் நல்ல வருமானம் உண்டு. பூர்வீகச்சொத்துக்களில் தடைகளும், வில்லங்கங்களும் இருப்பவர்கள் அது விலகப் பெறுவீர்கள். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. இந்தமாதம் முதல் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் பெருகும். கடந்த காலங்களில் இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. குறிப்பிட்ட சிலர் நல்ல வீட்டில் குடி போவீர்கள்.

மகம்

உங்களின் நட்சத்திர நாதன் கேதுபகவான் இந்த மாதம் நல்லநிலையில் இருப்பதால் ஜூன் மாதம் உங்களுக்கு சிறப்பைத் தரும் மாதமாக அமையும். இதுவரை வாழ்க்கைத்துணையுடன் சிக்கல்களை உண்டாக்கிக் கொண்டு வழக்கு கோர்ட்டு என்று அலைந்து கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு சொந்த ஊரில் இருந்து வேலை விஷயமாகவோ, தொழில்விஷயமாகவோ வேறு ஊருக்கு செல்லும் மாற்றங்கள் இப்போது நடக்கும்.

பூரம்

சுக்கிரனின் ஆட்சி பலத்தால் இப்போது நினைத்தது கைவரப் பெறுவீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்டத் தொழில் செய்பவர்களுக்கு ஜூன் மாதம் மிகவும் நல்ல மாதமாக அமையும். குறிப்பிட்ட சிலருக்கு திருமணம் நடப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இது நிம்மதியைத் தரும் மாதமாக இருக்கும். இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட குறிப்பாக கார், மோட்டார் சைக்கிள் போன்றவைகளை ரிப்பேர் செய்யும் மெக்கானிகள் மற்றும் ஆட்டோமொபைல் தொழில் செய்பவர்கள் நல்ல பணவரவைப் பெறுவீர்கள்.

உத்திரம்

உத்திரம் நட்சத்திரம் முதல்பாதத்தில் பிறந்தவர்களுக்கு சற்று நிதானமான மந்தபலன்களும் மற்ற மூன்றுபாதங்களில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்களும் ஜூன்மாதம் நடைபெறும். குறிப்பாக இரும்புத்தொழில் சம்பந்தப்பட்டவர்கள் பழையகழிவு, வேஸ்ட்பேப்பர் தேவையில்லாத பொருட்கள், அழுகும் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்பவர்களுக்கு இந்தமாதம் நல்ல லாபங்கள் உண்டு. 30 வயதிற்குட்பட்ட இளைய பருவத்தினருக்கு எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கான ஆரம்ப அறிமுகங்கள், அஸ்திவாரங்கள் இந்த மாதம் நடக்கும்.

அஸ்தம்

அனைத்து விஷயங்களிலும் அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு இருந்து வரும் மந்தநிலைகள் வருகின்ற ஆகஸ்டு ராகுகேது, செப்டம்பர் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு விலகத் துவங்கி மிகவும் நல்லபலன்கள் நடக்கும் என்பதால் ஜூன்மாதம் உங்களுக்கு நல்லவைகளின் ஆரம்ப மாதமாக இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த அதிருப்தியான நிலைமையும் எதிலும் பிடிப்பில்லாமல் மேம்போக்காக நீங்கள் இருந்து வந்த நிலைமையும் இனிமேல் மாறி அனைத்திலும் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.

சித்திரை

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு ஜூன்மாதம் முதல்பகுதியில் மிக நல்ல பலன்களும் மாதபிற்பகுதியில் மத்திம பலன்களும் நடக்கும். மாதத்தின் முதல் 15 நாட்கள் பணவரவு இருக்கும். பாக்கெட்டில் காசு வைத்துக்கொண்டு தெம்பாக இருப்பீர்கள். பின்பகுதி மாதத்தில் பணம் போன வழி எது என்று குழம்பிக் கொண்டிருப்பீர்கள். ஆனாலும் ஜூன்மாதம் உங்களுக்கு சிறப்பான வருமானம் தரும் மாதமாகவே அமையும். சிலருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து கேட்கும் உதவிகள் கிடைக்கும்.

சுவாதி

உங்களில் கருப்புநிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் மற்றும் திரவப்பொருட்கள் விற்பவர்கள் இந்தமாதம் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். குறிப்பிட்ட சிலரின் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்கும் அண்ணன், அக்காக்களின் திருமண உறுதி நிகழ்ச்சி இப்போது நடக்கும். இதுவரை குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் இப்போது உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் சிலருக்கு நல்ல ஆதாயங்கள் இருக்கும். வேலைக்காரர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விசாகம்

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு ஜூன்மாதம் சுமாரான பலன்களை தரும். உங்களில் சிலருக்கு ஞாபகமறதி அதிகமாக இருக்கும் என்பதால் கைப்பொருளில் கவனம் தேவை. குறிப்பாக செல்போனைத் தொலைப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் சிறு விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. வங்கிகளில் பணம் செலுத்தும் போதும், பணம் எடுத்து வரும்போதும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்நிய இன, மத மொழிக்காரர்கள் உதவி கிடைக்கும். குறிப்பாக இஸ்லாமிய நண்பர் ஒருவர் சரியான நேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டுவார்.

அனுஷம்

உங்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும் மாதம் இது. ஜூன்மாதம் உங்களுக்கு நல்லமாதம் தான். வெளிநாட்டு விஷயங்களில் நல்ல தகவல்களும் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் உண்டு. குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பவர்கள், ஊதாநிறம் சம்பந்தப்பட்டவர்கள் நன்மைகளை அடைவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு பதவி உயர்வோ அல்லது சம்பளஉயர்வோ கிடைக்கும். பெண்களுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும் தடைகளும் விலகும்.

கேட்டை

கேட்டை நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலோருக்கு மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நடுத்தர வயதுகளில் இருப்பவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பெண்களின் நிலைமையோ மிகவும் கடுமையாக இருக்கிறது. குடும்பத்தில் குழப்பம், பிரிவு, இழப்பு, பணப்பிரச்னை, போன்றவைகளால் நிம்மதிக் குறைவு இருக்கிறது. குடும்பத்தில் யாராவது ஒருவர் விருச்சிக ராசி என்றாலும் அந்தக் குடும்பமே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாம் இன்னும் சில வாரங்கள்தான். கேட்டை கோட்டை கட்டி ஆளும் என்பது மறுபடியும் நிரூபிக்கப்படும். இன்னும் சிலவாரங்களில் எல்லாம் மாறும். கவலைப் படாதீர்கள்.

மூலம்

உங்களைத் தொல்லைப்படுத்தி கொண்டிருக்கும் கடன் சிக்கல்களில் இருந்து இந்த மாதம் மீண்டு வருவீர்கள். இதுவரை நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு நபர் முக்கியமான நேரத்தில் இந்தமாதம் உங்களுக்கு உதவுவார். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும் மாதம் இது. சிலருக்கு இதுவரை இருந்து வந்த உடல்நலக் கோளாறுகள் சரியாகும். குறிப்பாக பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி மேன்மைகளைத் தரும் மாதம் இது. முதல் வாழ்க்கை கோணலாகி வழக்கு கோர்ட் என அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமான திருப்பங்களும் முடிவுகளும் உண்டு.

பூராடம்

வேலை தொழில் வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் முதல் நிலைமை மாறி அனைத்தும் சாதகமாக மாறும். போட்டியாளர்கள் ஒழிவார்கள். தொழிலை கண்ணும் கருத்துமாக கவனியுங்கள். அகலக்கால் வைக்க வேண்டாம். இதுவரை தந்தையிடம் ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க நேரம் எதிர்பார்த்து இருந்தவர்கள் இந்த மாதத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஆசைப்பட்டுக் கேட்கும் விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பார். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

உத்திராடம்

நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு காரியம் உங்கள் எண்ணம்
போல் இந்த மாதம் நிறைவேறும். குலதெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும் மாதம் இது. நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்துவீர்கள். இந்த மாதம் உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் நடப்பதற்கு தடைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும்.

திருவோணம்

வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிபவர்களுக்கு இப்போது நல்லபடியாக அனைத்தும் ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். நல்ல வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த மாதம் உருவாகும். இன்னும் செட்டில் ஆகாத இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும். அரசு, தனியார் துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத் தரப்பு திருவோண நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டத்தை தரப்போகும் மாதம் இது. இந்த மாதம் எவ்விதக் குறையும் இல்லாத மாதமாக இருக்கும்.

அவிட்டம்

மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும். சிலருக்கு எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையக்கூடிய நிகழ்ச்சிகள் இந்தமாதம் இருக்கும். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். மேலதிகாரியின் தொந்தரவு இருக்காது. நீண்ட நாட்களாக கேட்டு வந்த சம்பள உயர்வுக்கு முதலாளி இப்போது சம்மதிப்பார். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும்.

சதயம்

மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கலாம். நகைகள் சேரும். இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இனிமேல் இருக்காது. அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.

பூரட்டாதி

அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. வேலை வியாபாரம் தொழில் போன்ற அமைப்புக்களில் நல்ல பலன்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு இது நல்ல மாதம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. கலைஞர்கள் வளம் பெறுவார்கள். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும்.

உத்திரட்டாதி

குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரப்பதவி கிடைக்கும். சனிபகவான் வலுவாக இருப்பதால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் மாதம்.. இதுவரை வியாபாரத்தில் போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் அது விலகுவதைக் காண்பீர்கள்.

ரேவதி

தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கு இந்தமாதம் நன்மைகள் நடக்கும். உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் உடல்நலத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் உண்டு.. ஆன்மபலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.. படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ இப்போது வேண்டாம். அடுத்த மாதம் வரை தள்ளிப் போடுங்கள்.

2 comments :

  1. ஐயா நான் கேட்னட நட்சத்திரம்.சில வாரங்களில் நன்னம நடக்கும் என்கிறீர்கள் எப்போது. உயினர கையில் பிடித்திருக்கும் கேட்னட

    ReplyDelete
  2. சந்திரசேகரன்11 June 2017 at 19:15

    ஐயா, வணக்கம்.எனது நட்சத்திரம்​ சுவாதி. மனைவி நட்சத்திரம் கேட்டை.என் மகளின் நட்சத்திரம் ரோகிணி.என் மகனின் (இளையவன்) நட்சத்திரம் பூரம்.மகளுக்கு வரன் அமைவது மிகவும் கடினமாக உள்ளது.DOB:11 Dec 1989 Time: 09.28 P.M Place: Tuticorin. எனக்கு வயது 61 நடந்து கொண்டு இருக்கிறது.அடுத்து மகனையும் Settle பண்ண வேண்டும். எனக்கு பைத்தியமே பிடிக்கவில்லை. மகளுக்கு நல்ல திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்ல இயலுமா.நன்றி.

    ReplyDelete