Friday, June 30, 2017

தனுசு : 2017 ஜூலை மாத பலன்கள்

தனுசு :

ராசிநாதன் குருவுக்கு வீடு கொடுத்த யோகாதிபதி சூரியனும், பஞ்சமாதிபதி செவ்வாயும் இணைந்து ராசியைப் பார்க்கிறார்கள் என்பதால் தனுசு ராசிக்கு நன்மைகள் கிடைக்கும் மாதமாக இது இருக்கும். குறிப்பாக ஐம்பது வயதினைக் கடந்த இரண்டாவது சுற்று பொங்கு சனியினைக் கொண்டவர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் நல்ல வருமானம் இருக்கும். ஜனன கால ஜாதக அமைப்புப்படி யோக தசா, புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இரட்டிப்பு நன்மைகள் உண்டு.


அலுவலகத்தில் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு நன்மைகள் உண்டு. குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும்.

இளைய பருவத்தினர் புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்வது நல்லது. ஏழரைச்சனி முடியும் வரை புதிய முயற்சிகள் எதுவும் கை கொடுக்காது. எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே திறம்பட செய்வது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்றுசேரும்.

5,6,7,12,13,19,20,22,30,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம்தேதி அதிகாலை 4.28 மணி முதல் 25-ம்தேதி காலை 6 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் செய்யவேண்டாம். மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

No comments :

Post a Comment