Friday, June 30, 2017

மகரம் : 2017 ஜூலை மாத பலன்கள்

மகரம் :

மகர ராசிக்கு வேலை, தொழில் போன்றவைகளிலும் குடும்பத்திலும் மாற்றங்கள் நடக்கக் கூடிய மாதம் இது. குறிப்பிட்ட சிலருக்கு இந்த மாதம் பதவி உயர்வுடன் கூடிய இடமாறுதல் இருக்கும். பெரும்பாலான மகரத்தினருக்கு குடும்பம், வேலை, தொழில் போன்றவைகளில் ஊர்மாற்றம், இடம் மாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் இப்போது இருக்கும். மாத ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளித்து வெற்றி எப்போதும் கும்பத்தின் பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள்.
மாதத்தின் முதல் வாரங்களில் ஆறாமதிபதி ஆட்சி வலுப் பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். தனாதிபதி லாபத்தில் வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு இந்த மாதம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். கணவன் மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் சுமாராகவே இருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகளும், கோர்ட் கேஸ் போன்றவைகள் இருப்பவர்கள் வழக்கை முடிக்குமாறு அவசரப்பட வேண்டாம்.

செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. சிறுசிறு உடல் கோளாறுகள் வரலாம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு விசா போன்றவைகள் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு கை கொடுக்கும். கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம்.

2,3,7,8,9,12,13,22,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம்தேதி காலை 6 மணி முதல் 27-ம்தேதி காலை 10.23 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகளும், ஆரம்பங்களும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment