Friday, June 30, 2017

விருச்சிகம் : 2017 ஜூலை மாத பலன்கள்

விருச்சிகம்:

ஜூலை மாத ஆரம்பத்தில் முதலிரண்டு வாரங்கள் ராசிநாதன் செவ்வாய் எட்டாமிடத்தில் இருப்பதாலும், அதன்பிறகு ஒன்பதில் வலு இழந்து நீசநிலையை அடைவதாலும் இந்த மாதத்தின் ஆரம்பநாட்கள் உங்கள் பொறுமையை சோதிப்பதாகவும் பிற்பகுதி நாட்கள் பிரச்சினைளை தீர்த்து நன்மைகளை மட்டுமே தருவதாகவும் அமையும். சனிபகவான் தற்போது ஜென்மசனியின் இறுதிப்பகுதிக்கு வந்து விட்டதால் இனிமேல் உங்களுக்கு கொடுமையான பலன்களைத் தராமல் இரக்கம் காட்டுவார் என்பதால் விருச்சிக ராசிக்கு வேதனைகள் விலகும் மாதம் இது. குறிப்பாக கேட்டை நட்சத்திரக் காரர்களின் மன அழுத்தங்கள் இந்த மாதம் நீங்கும்.
விருச்சிகத்தின் திறமைகள் வெளிவரும் மாதம் இது. குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம் இந்த மாதம் கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் இந்த மாதம் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும். வீண்செலவுகளும், தேவையற்ற விரயங்களும் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ப தேவையான வருமானமும், பணவரவும் நிச்சயம் இருக்கும் என்பதால் எதற்கும் கவலை வேண்டாம். வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.

மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும்.

1,2,3,6,7,15,17,20,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ம்தேதி அதிகாலை 4.10 மணி முதல் 23-ம்தேதி அதிகாலை 4.28 மணி வரை சந்திரன் எட்டில் மறையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் உங்களுக்கு தெளிவற்ற மனநிலை இருக்கும். இந்த நாட்களில் எவ்வித புதிய ஆரம்பங்களும், முயற்சிகளும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment