Friday, June 2, 2017

மீனம்: 2017 ஜூன் மாத பலன்கள்

மீனம் :

மீன ராசிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றிதான். அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம். சொந்தத் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.


சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும். இளைஞர்களுக்கு இந்த மாதம், கையில் காசு நடமாட்டம் அதிகம் இருக்கப் போவதால் தேவையில்லாத சில பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஒன்பதாமிடத்து சனி எப்போதுமே கொடுத்துக் கெடுப்பார் என்பதால் சனி கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள். கெட்டுப் போகாதீர்கள்.

மகன் மகளுக்கு திருமணம் உறுதியாகும். பேரன் பேத்திகள் மூலம் நல்ல சுபநிகழ்ச்சிகள் இருக்கும். வயதானவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதியவர்களின் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். நகைகளை அடமானம் வைத்த நிலை மாறி அவற்றை மீட்பதோடு புதிதாக நகை வாங்கவும் முடியும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டு. முதுகுக்குப் பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்கள். மனதில் இருப்பதை வெளிப்படையாக யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

2,5,7,8,9,10,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி காலை 4.33 முதல் 7-ம்தேதி மாலை 04.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

No comments :

Post a Comment