Friday, June 2, 2017

கும்பம்: 2017 ஜூன் மாத பலன்கள்

கும்பம் :

எட்டில் இருக்கும் குருபகவானால் சில கும்ப ராசிக்காரர்களுக்கு மனத்திற்குப் பிடிக்காத மாற்றங்களும், பொருளாதார விஷயத்தில் ஏற்ற இறக்கங்களும், பணத் தட்டுப்பாடும் தற்போது இருக்கின்றது. ராசிநாதன் சனி அதிசார அமைப்பில் பதினொன்றில் இருப்பதால் கிடைக்கும் யோக அமைப்பைக் கொண்டு அனைத்தையும் சமாளித்து கொண்டிருக்கிறீர்கள். வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு நிலையான தொழில் அமைப்புகளும், குறைவில்லாத பணவரவும் அமையும் என்பதால் ஜூன் மாதத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் நடக்கத் துவங்கும் என்பது உறுதி.


நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

ராசியோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்படுவதால் சிலருக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அடிக்கடி ஆலயங்களுக்குச் செல்வீர்கள். ஆலயத் திருப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். ஜாதகத்தில் சனி, குரு, கேது தசை நடப்பவர்களுக்கு ஆன்மிக விஷயத்தில் மேன்மையான பலன்கள் நடக்கும் என்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு எவ்வித குறைகள் இருந்தாலும் பரம்பொருள் அவற்றைக் கனிவுடன் தீர்த்து வைப்பார் என்பதால் ஜூன் மாதத்தில் கெடுதல்கள் எவையும் உங்களுக்குச் சொல்வதற்கு இல்லை. நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அதாவது டிரைவர்கள், டிராவல்ஸ் துறையினர், ஓரிடத்தில் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும் துறையினர் போன்றவர்களுக்கு இந்தமாதம் நன்மைகள் உண்டு.

1,2,4,5,8,9,10,17,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 2-ம் தேதி மாலை 6.19 மணி முதல் 5-ம் தேதி அதிகாலை 4.33 மணி வரையும், மாதக் கடைசியில் 28 ம் தேதி காலை 10.01 முதல் 30ம் தேதி மதியம் 1.11 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment