Friday, June 2, 2017

மகரம்: 2017 ஜூன் மாத பலன்கள்

மகரம் :

மகர ராசியின் யோகாதிபதிகள் புதனும், சுக்கிரனும் இந்த மாதம் தத்தம் வீடுகளில் ஆட்சி பெற்றோ அல்லது இன்னொருவரின் வீட்டில் நட்பு நிலையிலோ வலுவுடன் அமைவதால் ஜூன் மாதம் மகரத்திற்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். இதுவரை வெளிநாடு போகாதவர்கள் கடல் தாண்டுவீர்கள். வடமாநிலங்களுக்குப் போவது போன்ற நீண்ட பிரயாணங்களும் இருக்கும். சொல்லிக்கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மேன்மைகளைத் தரும்.


சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தந்தை வழியில் உங்களுக்கு எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள்.

உழைப்பிற்கு அதிபதியான சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு. இந்த மாதம் உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து மிகவும் நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலை செய்வோர் போன்ற எல்லாத் துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும் மாதம் இது.

2,4,5,6,7,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 27 -ம்தேதி இரவு 7.57 மணி முதல் 30-ம்தேதி அதிகாலை 1.32 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

No comments :

Post a Comment