Monday, May 1, 2017

தனுசு: 2017 மே மாத பலன்கள்


தனுசு:

மே மாதம் முழுவதும் ராசிநாதன் குரு பெருங்கேந்திரமான பத்தாமிடத்திலும், மற்ற யோகாதிபதிகளான சூரியனும், செவ்வாயும் உச்சம் மற்றும் ஆட்சி வலுவுடன் திரிக்கோணமான ஐந்தாமிடத்திலும் இருப்பது தனுசுக்கு மகிழ்ச்சியான விஷயங்களையும் முன்னேற்றமான தருணங்களையும் தரக் கூடியவை என்பதால் தனுசுராசிக்கு இந்த மாதம் சாதகமான பலன்களை தரக்கூடிய மாதமாக இருக்கும்.

குறிப்பிட சிலருக்கு எதிர்பார்த்த சில விஷயங்கள் நிறைவேறுவதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும் என்பதால் இந்த மாதம் மாற்றங்கள் உள்ள மாதமாக இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவரை உங்களைப் புரிந்து கொண்டவர்கள் போல நடித்து கொண்டிருந்த சிலரைப் பற்றிய உண்மைகள் தெரியவந்து அவர்களை விட்டு விலகுகின்ற மாதமாக இருக்கும். தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

இதுவரை வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள். காவல்துறையினருக்கு இது நல்ல மாதமாக அமையும். அரசியல்வாதிகள், கலைத்துறையினர், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் லாபம் உண்டு. நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும்.

6,8,9,10,20,21,22,27,28,29, ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1 ஆம் தேதி இரவு 11.32 முதல் 4 ஆம் தேதி அதிகாலை 4.28 மணி வரையும், மாதக் கடைசியில் 29 ம் தேதி காலை 7.53 மணி முதல் 31 ம் தேதி காலை 11.13 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ எதுவும் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment