Saturday, 25 March 2017

மிதுனம்: 2017- ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு, ஆரம்ப மாதங்களில் நிதானமான நன்மைகளைத் தந்தாலும் பிற்பகுதி முழுவதும் மேன்மையான பலன்களை செய்யும் வருடமாக இருக்கும்.

வருட ஆரம்பத்தில் ராஜ கிரகங்களான குரு, சனி ஆகியோர் உங்களுக்கு நன்மைகளைத் தர முடியாத அமைப்பில் இருக்கிறார்கள். ஆனால் ராசிநாதன் புதன் பதினொன்றாம் வீட்டில் வலுவாக இருப்பதும், யோகாதிபதியான சுக்கிரன் பத்தாம் இடத்தில் உச்சமாக இருப்பதும் வேலை, தொழில், அமைப்புகளில் நன்மைகளைத் தரும் என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

புத்தாண்டின் மிக முக்கிய பெயர்ச்சியாக செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் குருபகவான் மாறுவதால் குருவின் பார்வை ராசிக்கு கிடைத்து அதன் பிறகு நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்க துவங்கும்.

இளைய பருவத்தினருக்கு குரு பலம் எனப்படும் வாழ்க்கையை செட்டிலாக்கும் அமைப்பு உருவாவதால் திருமணம், நல்ல வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், நினைத்த காரியம் கைக்கூடுதல், தொட்டதும் துலங்குதல், நிரந்தர வருமானம் கிடைத்தல் போன்ற பலன்கள் அப்போது நடக்கும்.

எனவே வருட ஆரம்பத்தில் உங்களுக்கு கிரகங்கள் தரும் பலன்கள் சுமாராக இருந்தாலும் வருடத்தின் பிற்பகுதியில் இருந்து நல்ல பண வரவுகளை தரக்கூடிய அமைப்புகள் இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் எதற்கும் கலங்க தேவையில்லாத வருடமாக இந்த வருடம் இருக்கும்.

புத்தாண்டின் ஆரம்பத்தில் நடக்க இருக்கும் ராகு கேது பெயர்ச்சியால் ராகுபகவான் இப்போதிருக்கும் சாதகமான இடமான மூன்றிலிருந்து நல்ல பலன்களைக் கொடுக்க இயலாத இரண்டாமிடத்திற்கு மாறுவது உங்களுக்கு பொருளாதாரச் சிக்கல்களைத் தரும் என்று தோன்றினாலும் கடக வீடு ராகுவிற்கு மிகவும் பிடித்த வீடு என்பதால் பெரிய பிரச்னைகள் எதுவும் வரப்போவது இல்லை.

இந்த அமைப்பின் மூலம் இதுவரை வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி போன்றவற்றில் ஆதாயங்களை எதிர்பார்த்திருந்த உங்களில் சிலருக்கு நன்மைகள் உண்டு. சிலர் தூர இடங்களுக்குச் செல்வீர்கள்.

அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் சனிபகவானும் நல்ல இடமாக சொல்லப்படாத ஏழாமிடத்திற்கு மாற்றம் அடைந்தாலும், மிதுன ராசிக்கு சனிபகவான் ஒன்பதுக்குடைய பாக்யாதிபதி என்பதாலும், யோகங்களைச் செய்யக் கூடியவர் என்பதாலும் நிச்சயம் கெடுதல்கள் இருக்காது.

மிதுன ராசி இளம் பருவத்தினருக்கு வருடப் பிற்பகுதியில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் இருக்கும். இன்னும் சிலர் வருட ஆரம்பத்திலேயே எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்தித்து செப்டம்பர் மாதத்திற்கு பிறகு அவரை வாழ்க்கையில் இணைத்துக் கொள்வீர்கள். இந்த வருடம் அனைத்து மிதுனத்தினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத்தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும் என்பது உறுதி.

ஒரு சிறப்புபலனாக ராகு தன வீடான இரண்டில் அமரப் போவதால் சிலருக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியே சொல்லமுடியாத அளவிற்கு மறைமுகமான வகைகளில் பணலாபம் இருக்கும். வாக்குறுதிகளை இந்தவருடம் உங்களால் காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்தமுடியும். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக்கொடுத்து இருந்தால் அதையும் பழுதின்றி நிறைவேற்றுவீர்கள்.

நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் நல்லசெய்திகள் இருக்கும்.

குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து அனைத்தும் சாதகமாகும்.

பெண்களுக்கு கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

சொந்தத்தொழில் செய்பவர்கள் தொழில்அதிபர்கள் வியாபாரிகள் ஆகியவர்களுக்கு நல்ல நேரம் இது. சில தொழில்முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும். பூர்வீக சொத்து விஷயத்தில் பாகப்பிரிவினை செய்வதற்கு இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில் அனைத்தும் நல்ல படியாக நடைபெறும்.

நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

வேலையில் இருப்பவர்களுக்கு தள்ளிப் போயிருந்த பதவிஉயர்வு சம்பள உயர்வு ஆகியவை தாமதமின்றி கிடைக்கும். எல்லாவகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். ஏழில் சனி இருப்பதால் தேவையற்ற விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று தேவையற்ற விரோதங்களை சம்பாதித்து கொள்வீர்கள் எனபதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவார்கள்.

என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆனாலும் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனால் வீண் செலவு செய்வதை தவிருங்கள்.

கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழாமிடத்தில் சனி இருப்பதால் குடும்ப விஷயத்தில் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். சகோதரர்கள் உதவுவார்கள்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

எப்படிப் பார்த்தாலும் பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு மிதுன ராசிக்கு கெடுதல்களைச் செய்யக் கூடிய அமைப்பில் இல்லை. ஆனால் உங்களின் எதிர்கால நன்மைக்குரிய சில மாற்றங்கள் இந்த வருடம் நடக்கும். எட்டாமிடம் என்பது மாற்றங்களைக் கொடுக்கும் என்பதால் அஷ்டம ஸ்தானத்தில் அமர இருக்கும் கேது உங்களுக்கு நல்ல மாறுதல்களைக் கொடுப்பார்.

No comments :

Post a Comment