Wednesday, February 1, 2017

சிம்மம்: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்

சிம்மம்:

அதிசார நிலையில் சனிபகவான் வேறு ராசிக்கு மாறியதன் மூலம் சனியின் பார்வை சிம்மத்திற்கு விலகி விட்டதால் இனிமேல் எவ்வித சங்கடங்களும் உங்களுக்கு இல்லை. இந்த மாதம் உங்களுக்கு என்ன பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்து எல்லாவற்றையும் தனி ஆளாக நீங்கள் ஒருவரே சமாளிப்பீர்கள் என்பது உறுதி.

அதேநேரத்தில் ராசிநாதன் சூரியன் ஆறில் மறைந்து சனிபார்வையும் பெற்று வலிமை இழப்பதால் உங்களுடைய செயல்களில் “இரண்டும்கெட்டான் தனம்” இருக்கும். சில விஷயங்களில் சட்டென ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிப்பீர்கள். இது உங்களை சுறுசுறுப்புடன் செயல்பட முடியாமல் தடுக்கும். எட்டாமிடம் குருவின் பார்வையாலும் செவ்வாயின் இருப்பாலும் வலுப்பெறுவதால் புது விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. என்னதான் எதிரி சுக்கிரன் வலுப்பெற்றாலும் குருவின் பார்வை அவருக்கு இருப்பதால் பிரச்னைகள் வருமோ என்று உங்களை யோசிக்க வைக்கலாமே தவிர கெடுதல்கள் எதுவும் நூறு சதவிகிதம் உங்களுக்கு நடக்காது.

தொட்டது துலங்கும் நேரம் ஆரம்பமாகப் போகிறது என்பதால் ஜீவன அமைப்புகளான வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் நீங்கள் நீண்ட காலமாக செயல்படுத்த நினைத்திருந்த திட்டங்களை இப்போது செய்யலாம். அதன் மூலம் உங்களுக்கு லாபங்கள் இருக்கும். வயதான தாயாரை கொண்டவர்கள் அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. வீடு விஷயமான எந்த விஷயங்களையும் இன்னும் இரண்டு மாதம் ஒத்திப் போடுங்கள். புதிய வாகனம் வாங்குவதையும் இரண்டு மாதம் தவிர்க்கலாம்.

6,7,8,14,15,16,21,22,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி மற்றும் 2-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். ஆயினும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் இருக்காது.

No comments :

Post a Comment