Wednesday, February 1, 2017

கும்பம்: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்

கும்பம்:

இந்த மாதம் கும்பராசிக்கு கெடுதல்கள் எதுவும் இல்லாத நன்மையான மாதமாகவே இருக்கும். குறிப்பாக நல்ல பணவரவு உள்ள மாதம் இது. பிரிந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள். நீண்ட நாள் பார்க்காத நண்பர்கள் உறவினர்களை இந்த மாதம் பார்த்து மனம் மகிழ உரையாடலாம். விருந்து கொடுக்கலாம். புதிய வீடு வாங்கலாம். இருக்கும் வீட்டை மேம்படுத்தலாம். புதிய நல்ல ஆடம்பரமான வாகனம் அமையும். வசதிக்குறைவான வீட்டில் இருப்பவர்கள் நல்ல வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். பிரச்சினைகள் எதுவும் கிட்டே வராது. எதிலும் வெற்றி கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களும் வலிய வந்து உதவுவார்கள். சூதாட்டம் பங்குச்சந்தை கை கொடுக்கும். பெண்கள் தொடர்பான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல காலம்தான். பொருட்கள் தங்காது. விற்றுத் தீர்ந்து விடும். ஆனால் விற்ற லாபம் எங்கே என்று கல்லாவில் தேடுவீர்கள். பணம் இருக்காது. வேறு வழியில் செலவழிந்து போய்விடும்.

கூட்டுத் தொழில் சிறப்படையும். தந்தைவழி உறவினர்களால் செலவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து தலையிடவும். வேலை செய்யும் இடங்களில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். வழக்கு சம்மந்தமாக போலீஸ், கோர்ட் என்று அலைந்தவர்கள் இனிமேல் சாதகமான திருப்பங்களை காண்பார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதம்தான். சுற்றியுள்ள பெண்கள் மூலமாக இந்த மாதம் வீண் பிரச்சினைகள் வரும் என்பதால் அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பது நல்லது. குறிப்பாக பெண்களின் கீழே வேலை செய்பவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

1,3,4,5,8,11,12,13,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி மதியம் 3 மணி முதல் 16-ம் தேதி அதிகாலை 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களையும் தவிர்க்க வேண்டும்.

No comments :

Post a Comment