Wednesday, February 1, 2017

மீனம்: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்

மீனம்:

எதையும் சாதிக்க முடியும் மாதம் இது. உங்களின் கௌரவம், மதிப்பு, மரியாதை புத்துயிர் பெறும். இதுவரை உங்களின் பேச்சைக் கேட்காதவர்கள் உங்களின் சொல்லைக் கேட்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து போனவர்கள் தவறை உணர்ந்து இணையத் தூது விடும் நேரம் இது. தெய்வ அனுகூலம் கிடைக்கும். ராசியிலேயே செவ்வாய் குருபார்வையில் வலுவாக உள்ளதால் திடீர் பண வரவுகளும் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பெரிய உரசல்கள் இன்றி சந்தோஷமாகவே இருக்கும்.

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். விரயாதிபதி வலுப்பெறுவதால் செலவு செய்து ஏதேனும் ஒரு பொருள் குடும்பத்திற்கு வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல விஷயங்கள் உண்டு.

தொழில், வியாபாரம், வேலை செய்யுமிடங்களில் இருந்து வந்த அதிருப்தி, ஏமாற்றம் ஆகியவை விலகி உங்கள் மனம் போல காரியங்கள் நடைபெறும். நீண்டநாட்களாக குழந்தை பிறக்காதவர்களுக்கு இன்னும் ஆறு மாதத்திற்குள் குழந்தை உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

2,3,6,7,8,9,10,22,23,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 18-ம் தேதி மதியம் 12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அலுவலங்களில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவருடன் மனஸ்தாபங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் நிதானம் தேவை.

No comments :

Post a Comment