Tuesday, November 1, 2016

கடகம்: 2016 நவம்பர் மாத பலன்கள்

கடகம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் நீசமாக இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் என்பதால் முறையான நீசபங்கத்தை அடைந்து இந்த மாதம் முழுவதும் கடகராசிக்கு நல்லபலன்களை மட்டுமே தருவார் என்பது உறுதி. ராசியை உச்சசெவ்வாய் பார்ப்பதால் உங்களுக்கு சில நேரங்களில் கட்டுக்கடங்காமல் கோபம் வரும் என்பதால் இந்தமாதத்தின் சிறப்புப்பலனாக கடக ராசிக்காரர்கள் கோபத்தை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கும். யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் அதிர்ஷ்டம் தரும் மாதம் இது.

உங்களின் எதிர்ப்புகளும் எதிரிகளும் பலம் இழக்கும் மாதமாக இது இருக்கும். கடன்தொல்லைகளில் சிக்கி நிம்மதியை இழந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் இப்போது தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். ஒரு சிலர் வெளிநாட்டுக்கு செல்வீர்கள். பணவரவில் குறையேதும் இல்லை. வெகு நாட்களாக எதிர் பார்த்த ஒரு தொகை கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் சற்றுத் தள்ளியே இருங்கள். செவ்வாய் வலுப்பெற்று ராசியைப் பார்ப்பதால் மனம் சற்றுப் பதட்டத்துடனும் எரிச்சலுடனும் இருந்தாலும் அனைத்தும் கட்டுபாட்டுக்குள் இருக்கும்.

சிலருக்கு தாமதித்து வந்த வேலை இப்போது கிடைக்கும். அரசுவேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீரும். இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். பெண்கள் மூலமான செலவுகள் இருக்கும். மனைவிக்கு கழுத்து நகை வாங்கித் தருவீர்கள். வேலை, வியாபாரம் சொந்த தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வெளிநாடு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள்.

4,5,6,7,11,18,19,20,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம் தேதி மாலை 5 மணி முதல் 10-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய தொழில் முயற்சிகளோ, ஆரம்பங்களோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்திக் கொள்ள இருந்தாலும் தள்ளிவையுங்கள்.

No comments :

Post a Comment