Tuesday, November 1, 2016

மிதுனம்: 2016 நவம்பர் மாத பலன்கள்

மிதுனம்:

ஆறுக்குடைய செவ்வாய் எட்டில் உச்சமாகி ராசிநாதன் ஆறில் மறையும் மாதம் இது என்பதால் மிதுனராசிக்காரர்களுக்கு அனைத்திலும் தடைகள் உள்ள மாதமாக இது இருக்கும். உச்சசெவ்வாய் இரண்டாம் வீட்டை பார்ப்பது பணவரவிற்குத் தடை போடும் அமைப்பு என்பதோடு, விரையங்களையும் தரும் என்பதால் இந்தமாதம் சூதாட்டம், பங்குச்சந்தை போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலர் தங்களுடைய கோபப் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.

மாதம் முழுவதும் எட்டாம் வீட்டில் செவ்வாய் உச்சமாக அமர்ந்து இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் தனம், வாக்கு, குடும்பஸ்தானம் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த மாதம் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். மூன்றில் இருக்கும் ராகு நல்லபலன்களைச் செய்வார் என்பதால் மிக முக்கியமான நபர்களிடமிருந்து இப்போது நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளைப் பெற முடியும். ஒன்பதில் இருக்கும் கேது இதுவரை தரிசிக்க இயலாத புனிதத்தலங்களை சென்று பார்க்கும் வாய்ப்பினை இப்போது உங்களுக்கு தருவார்.

சுக்கிரன் ஏழில் இருப்பதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்களும், கருத்துவேறுபாடுகளும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சகோதர உறவு சற்று முன்பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம்.

1,2,7,8,9,11,14,15,16,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம் தேதி காலை 8 மணி முதல் 8-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது. மாறாக உச்சசெவ்வாயை சந்திரன் புனிதப்படுத்துவதால் சிலருக்கு செவ்வாய் சம்பந்தப்பட்ட பூமி மற்றும் சகோதர விஷயங்களில் லாபம் இருக்கும்.

No comments :

Post a Comment