Tuesday, November 1, 2016

கும்பம்:2016 நவம்பர் மாத பலன்கள்

கும்பம்:

தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் விரைய ஸ்தானத்தில் உச்சமாவதும், அங்கே ராசிநாதன் சனியுடன் அவர் பரிவர்த்தனை பெறுவதும், எட்டில் மறைந்திருக்கும் குரு செவ்வாயைப் பார்ப்பதும், கும்பத்திற்கு விரயங்களைத் தரும் அமைப்பு என்பதால் இந்தமாதம் பாக்கெட்டில் இருந்து காசு எடுக்குமுன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்ய வேண்டிய மாதமாக இருக்கும். சிலருக்கு வீடுகட்டுதல், இடம்வாங்குதல் புதுவாகனம் அமைதல், போன்ற சுபகாரிய செலவுகளும் உண்டு. எனவே கண்டிப்பாக செலவு செய்தே ஆகவேண்டிய விஷயங்களில் மட்டும் கவனத்தை செலுத்தி விரயங்களைத் தவிர்க்க வேண்டிய மாதம் இது.

வேலை தேடும் இளைய பருவத்தினருக்க விருப்பப்பட்ட அமைப்பில் வேலை கிடைக்கும். ஆன்மிகம் சம்மந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடைபெறும். ஏடிஏம்மில் பணம் நிரப்புவது போன்று பெரியஅளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள் பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. பருவவயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.

சுக்கிரன் சனியின் சுபபலம் நல்ல பலன்களைத் தரும். அதிகமுயற்சி இல்லாமலே சிலகாரியங்கள் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இந்த மாதம் நல்லபடியாக நடக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அவர்களின் வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் இந்த மாதம் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் மேலதிகாரிகளிடம் பணிந்து போவது நல்லது. பெண்களால் லாபம் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

3,4,5,8,9,10,13,15,16,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம் தேதி பகல் 2 மணி முதல் 26-ம் தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகள், முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். மனம் இந்த நாட்களில் ஒருநிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்தி வைக்கவும்.

No comments :

Post a Comment