Tuesday, November 1, 2016

மகரம்: 2016 நவம்பர் மாத பலன்கள்

மகரம்:

ராசியில் செவ்வாய் உச்சம் பெறுவது சுற்றியிருக்கும் அனைவரும் உங்களை வெறுப்பேற்றி உங்களுக்குக் கோபம் வரவழைக்கும் ஒரு அமைப்பு என்றாலும் செவ்வாயும், சனியும் பரிவர்த்தனை அடைவதாலும், செவ்வாய்க்கு குருவின் பார்ப்பதாலும் மகரராசிக்காரர்களுக்கு அனைத்தும் நல்லவையாக அமையும் மாதம் இது. ராசிநாதனும் லாபாதிபதியும் பரிவர்த்தனையாவது தொழில் அமைப்புகளில் நல்லபலன்களைத் தரும் என்பதால் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நவம்பர் மாதம் லாபத்தை தரும் அமைப்பில் இயங்கி உங்களின் பொருளாதாரச் சிக்கல்கள் தீரும் மாதம் இது.

ராசியில் உச்ச செவ்வாய் இருப்பதால் கடுகடுப்பாக இருப்பீர்கள். தேவையின்றி எரிந்து விழுவீர்கள். மற்றவர்கள் உங்களைக் கண்டு பயந்து விலகுவதற்கு சந்தர்ப்பம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். பாக்கியஸ்தானம் வலுப்பெறுவதால் பூர்வீக சொத்து விஷயங்களில் நன்மைகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். அப்பாவின் அன்பு கிடைக்கும். எதிலும் பற்றாக்குறை இருக்காது. சிலருக்கு இளைய சகோதர்களால் வீண்விரயங்களும் செலவுகளும் இருக்கும்.

எட்டில் இருக்கும் ராகு ஸ்பெகுலேஷன் துறைகளில் ஆசையைத் தூண்டி விட்டு சிக்கலில் மாட்டி விடக் கூடும். கண்களையும், காதுகளையும் கூர் தீட்டி வைத்துக் கொண்டு கவனமாக இருங்கள். சூதாட்டம் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமைகள் வரவிருப்பதால் தொழிலில் அக்கறை காட்டுங்கள். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.

1,2,5,6,7,9,13,14,19,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 23-ம் தேதி பகல் 2 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இந்த நாட்களில் புதிய தொழில் முயற்சிகள் அல்லது தொழில் விரிவாக்கம் போன்றவைகளை செய்வது நல்லபலன் தராது.

No comments :

Post a Comment