Tuesday, November 1, 2016

தனுசு: 2016 நவம்பர் மாத பலன்கள்

தனுசு:

ராசியின் யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதாலும் அதிர்ஷ்டத்தை சுட்டிக் காட்டும் ஐந்துக்கதிபதி செவ்வாய் இரண்டில் உச்சம் பெற்று ஐந்தாமிடத்தைப் பார்ப்பதாலும் தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான மாதம் இது. இரண்டு, பனிரெண்டுக்குடையவர்களின் பரிவர்த்தனை இருப்பதால் குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதும், வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபம் தருவதும் இப்போது உண்டு. பிறந்த இடத்தை விட்டு வெளியிடங்களில் இருப்பவர்கள் மாதம் முழுவதும் நல்லபலன்களை அனுபவிப்பீர்கள்.

செவ்வாய் வலுப்பெறுவதால் மாதம் முழுவதும் உங்களுக்கு மேன்மையான பலன்களே நடக்கும். எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சில விஷயங்களை இப்போது செய்வீர்கள். சிலருக்கு வீடு அல்லது வாகனம் புதியதாகவோ ஏற்கனவே உள்ளதை மாற்றியோ அமையும். பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற யூகவணிகத் தொழிலில் உள்ளவர்களுக்கு நற்பலன்கள் உண்டு. போட்டி, பந்தயங்கள் வெற்றியைத் தரும். நீண்டநாள் சந்திக்காத ஒரு உறவினரையோ, நண்பரையோ சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

ராஜயோகாதிபதி செவ்வாய் உச்சநிலை பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்தைப் பார்ப்பதால் அவர் நல்லநிலையில் இருக்கும் அடுத்த சில வாரங்களில் உங்களின் நீண்டநாள் எண்ணங்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். பணம் புரளும் இடங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். அரசியல்வாதிகள் பொறுமையாக இருக்கவேண்டும். “பத்தில் குரு இருந்தால் பதவியைப் பறிப்பான்” எனும்படி, பதவியில் சிக்கல்கள் வரலாம்.

2,3,5,7,9,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி இரவு 10 முதல் 21-ம் தேதி அதிகாலை 4 மணி வரை சந்திராஷ்ம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை செய்ய வேண்டாம். உச்ச செவ்வாயின் பார்வையினால் இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கியமான முடிவுகளை இப்போது எடுப்பதும் சரிவராது.

No comments :

Post a Comment