Tuesday, November 1, 2016

விருச்சிகம்: 2016 நவம்பர் மாத பலன்கள்

விருச்சிகம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்சமாக இருப்பது சிறந்த அமைப்பு என்பதால் தற்போது ஏழரைச்சனியினால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தற்காலிகத் தீர்வாக நவம்பர்மாதம் எவ்வித கெடுபலன்களும் நடக்காத மாதமாக இருக்கும். இன்னும் ஒரு சிறப்புப் பலனாக ராசிநாதன் உச்சமடைவது அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் வலிமையை ராசிக்குத் தரும் என்பதால் கடந்த நான்கு வருடங்களாக வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்சனைகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தமாதம் முதல் தீர்வுக்கான பாதைகள் தெரிய ஆரம்பிக்கும்.

ராசிநாதன் உச்சவலுப் பெறுவதால் ஜென்மச் சனியின் கெடுபலன்கள் குறைந்து இனிமேல் நல்லபலன்கள் நடைபெற ஆரம்பிக்கும். ஒரு சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ முக்கியமான விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும். முயற்சி ஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை உங்களை விட்டு விலகும். அனைத்து விஷயங்களிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள். ஒரு சிலர் எடுத்துக் கொண்ட காரியங்களை நல்ல விதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள்.

வியாபாரிகள் மந்தமான ஒரு நிலையை சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் கவனம் தேவை. வனத்துறையில் வேலை செய்பவர்கள், காடுகளில் பயணம் செய்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருங்கள். மாணவர்கள் மற்ற விஷயங்களை தள்ளி வைத்து விட்டு படிப்பதில் கவனம் செலுத்துங்கள். மற்ற கிரகநிலைகள் சாதகமாக இல்லாததால் மனதில் ஒருவிதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கலாம். நேர்மையானவற்றை சிந்தித்து நல்லவைகளையே செய்து வந்தால் யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டியது இல்லை.

2,3,4,6,8,12,14,20,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ந்தேதி இரவு 10 மணி முதல் 18-ம் தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்ட நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகளோ, முயற்சிகளோ, ஆரம்பமோ செய்வது பலன் அளிக்காது. நீண்ட தூர பிரயாணங்களை ஒத்தி வைக்கவும். யாரிடமும் வம்பு சண்டைக்கு போக வேண்டாம்.

No comments :

Post a Comment