Tuesday, November 1, 2016

துலாம்: 2016 நவம்பர் மாத பலன்கள்

துலாம்:

மாத முற்பகுதியில் ராசியில் ஒரு நீசகிரகம் இருப்பதும் பிற்பகுதி முழுவதும் ராசிநாதன் மூன்றாமிடத்தில் எதிர்ப்பு வீட்டில் இருப்பதும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவிகள் கூட உங்கள் மேல் பொறாமை கொண்டவர்களால் தடுக்கப்பட்டு கிடைக்காமல் போகும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் தனம், வாக்கு, குடும்பாதிபதி செவ்வாய் மாதம் முழுவதும் உச்சபலம் அடைவதால் எந்த ஒரு விஷயமும் சுலபமாக முடிந்து பணவரவு இருக்கும் மாதமாகவும் இது இருக்கும்.

ஏழரைச் சனி முடியப் போவதால் மனோதைரியம் அதிகமாக இருக்கும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். உங்களில் சிலர் புகழ் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு நீண்டநாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். யோகாதிபதி ராசியில் இருப்பதால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடப்பதோடு குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும்.
 
செவ்வாய் உச்சம் பெற்று பதினொன்றில் இருக்கும் ராகுவை பார்ப்பதால் சிகப்புநிறம் சம்மந்தப்பட்டவர்கள், ரியல்எஸ்டேட்காரர்கள் புரோமோட்டர்கள் ஜெல்லி, மணல் விற்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் வரும். திருமணமாகாத துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடி வரும் நேரம் இது. பொதுவாக துலாம் ராசிக்காரர்கள் களையாக அழகாக இருப்பார்கள். அழகுணர்ச்சி மிக்கவர்கள் நீங்கள். நீண்ட நாட்களாக திருமணம் தாமதமாகி வருபவர்கள் வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் வாழ்க்கைத்துணையோடு இணைவீர்கள். ஒரு சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

1,3,5,7,9,11,12,13,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம் தேதி இரவு 10 மணி முதல் 16-ந்தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடைபெறாது. மேற்கண்ட நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களோ புதிய ஆரம்பங்களோ எதுவும் வேண்டாம்.

No comments :

Post a Comment