Tuesday, November 1, 2016

கன்னி: 2016 நவம்பர் மாத பலன்கள்

கன்னி:

மாதம் முழுவதும் மூன்றாமிடத்தில் புதன் அமர்ந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சமடைவதால் இந்தமாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு மறைமுகமான லாபங்களைத் தரும் மாதமாக இருக்கும். எட்டுக்குடையவன் ஐந்தாமிடத்தில் உச்சமாகி எட்டாம் வீட்டையே பார்ப்பதால் கடல்கடந்து வெளிநாடுகளில் இருக்கும் பிள்ளைகளிடமிருந்து இந்தமாதம் நல்லசெய்திகள் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு குருட்டு அதிர்ஷ்டம் செயல்படும் என்பதால் எதிர்பாராத ஏதேனும் ஒரு லாபத்தை நீங்கள் இந்தமாதம் எதிர்பார்க்கலாம்.

தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். உடல் நலத்தில் இந்த மாதம் அக்கறை காட்டவேண்டி இருக்கும். யாரையும் நம்பி வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். நீண்ட நாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். போலீஸ், கோர்ட், கேஸ் உள்ளவருக்கு சாதகமான திருப்பங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். இளைஞர்களுக்கு எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும்.

ஐந்தாமிடத்தில் செவ்வாய் உச்சம் பெறுவதால் குழந்தைகள் வழியில் செலவுகளும், மனவருத்தமும் இந்த வாரமும் நீடிக்கும். செவ்வாய் மாறியதும் பிள்ளைகள் உங்கள் சொல்லைக் கேட்பார்கள். அதுவரை பொறுத்திருங்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள்.

5,6,8,9,10,17,18,19,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம் தேதி இரவு 10 மணி முதல் 14-ம் தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சந்திரனுக்கு செவ்வாய் பார்வை இருப்பதால் வீண்சண்டை வரும். கவனம்.

No comments :

Post a Comment