Tuesday, 19 July 2016

விருச்சிகம்: 2016 குருப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம் :

பனிரெண்டு ராசிக்காரர்களில் விருச்சிகராசிக்கு பலன் எழுதும் போது மட்டும் கூடுதல் கவனம் தேவைப்படும் அளவிற்கு விருச்சிகராசியின் நிலைமை இருக்கிறது. கடுமையான ஏழரைச்சனியின் ஆதிக்கத்தினால் உங்களில் பெரும்பாலோர் மனஅழுத்தத்திலும் மனஉளைச்சல்களிலும் இருந்து வருகிறீர்கள்.

என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் எண்பது சதவிகிதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் அல்லது விருச்சிக ராசியினை வீட்டினில் கொண்டவர்கள் என்பதை ஒவ்வொரு வருட ராசிபலன்களிலும் குறிப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். எல்லோரையும் விட விருச்சிகத்திற்கு இழப்புக்கள் அதிகம்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பெரும்பாலான அனுஷ நட்சத்திரக்காரர்கள் பட்ட துன்பங்கள் எழுத முடியாதவை. இந்த வருடம் பிறந்ததிலிருந்து அனுஷத்தின் பிரச்சினைகள் குறைய ஆரம்பித்து தற்போது கேட்டை நட்சத்திரக்காரர்கள் மன உளைச்சல்களில் இருக்கிறீர்கள்.

பிறந்த ஜாதகவலு உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட மிகச்சில விருச்சிகராசிக் காரர்களுக்கு மட்டுமே கஷ்டங்கள் எதுவும் இல்லை. மற்றவர்கள் யாரும் நன்றாக இல்லை. விருச்சிகத்தின் வேதனைகள் இந்தக் குருப்பெயர்ச்சி முதல் படிப்படியாக விலக ஆரம்பித்து அடுத்தவருடம் தீபாவளி முதல் பிரச்னைகள் எதுவும் இல்லாத வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பும்.

விருச்சிகத்திற்கு மட்டும் ஏழரைச்சனி ஆரம்பிக்கும்போதே சனி உச்சமாக வலிமையுடன் இருப்பதால் ஆரம்பத்திலேயே சனி கடுமையான பலன்களைத் தரத் துவங்கி, முதல் ஐந்துவருடங்களில் ஏழரைச்சனியின் அனைத்துக் கெடுபலன்களையும் தந்து பிற்பகுதி இரண்டரை வருடங்கள் வேதனை எதுவும் தராமல் விட்டுவிடுவார், எனவே இனிமேல் உங்களுக்கு அனைத்துமே நல்லபடியாக நடந்து விரைவில் சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவீர்கள் என்பது உறுதி.

சென்ற ஆண்டு உங்கள் ராசிக்குப் பத்தில் குரு இருந்ததாலும் உங்களின் வேலை, தொழில் விஷயங்களில் நல்லபலன்கள் இல்லாமல் இருந்தது. சென்ற வருடத்தில் வேலை இழந்தவர்கள், வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்கள், காரணம் சொல்லப்படாமலேயே வேலையை விட்டு வெளியேற்றபட்டவர்கள் என விருச்சிகத்தின் வேதனைகள் அதிகம்.

அதேபோல சொந்தத்தொழில் செய்யும் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் வியாபாரிகளுக்கும் கடந்த காலங்களில் சுணக்கமான நிலையே இருந்து வந்தது. இப்போது நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும் மனக்குறை அனைத்தையும் தீர்க்கும் என்பதால் வீருச்சிகத்தின் வேதனை விலகும் குருப்பெயர்ச்சியாக இது இருக்கும்.

பதினொன்றாமிடத்தில் லாபகுருவாக இருக்கும் குருபகவான் இனிமேல் உங்களின் தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்களை தருவார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும்.

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, நபர் அதிகாரியாக வருவார்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குரு பகவான் நல்ல செய்திகள் கிடைக்க வைப்பார்.

கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.

பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும்.

பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.
 
நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். லாபஸ்தானத்தில் இருக்கும் குருபகவான் தனது விசேஷ பார்வைகளால் உங்கள் ராசிக்கு மூன்று ஐந்து ஏழாமிடங்களைப் பார்ப்பார் என்பதால் அந்த இடங்கள் மிகவும் வலுப்பெற்று உங்களுக்கு நல்ல பலன்களை செய்யும்.

குருபகவானின் மூன்றாமிடப்பார்வையால் இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.

பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் வந்துவிட்டது. மூன்றாமிடம் கழுத்துப்பகுதியை குறிக்கும் என்பதால் இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் இந்த குருப்பெயர்ச்சியால் நடக்கும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் இளம் பெண்களுக்கு நீங்கள் விரும்பியவாறே அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு காதல் வரக்கூடும். மாணவர்கள் படிப்பைத் தவிர மற்ற அனைத்து உல்லாசங்களிலும் ஈடுபடுவீர்கள். ஆனால் தேர்வு நேரத்தில் ஏதோ ‘மாய மந்திரம்’ செய்து பாசாகி விடுவீர்கள்.

இதுவரை சேமிக்க முடியாதவர்கள் இந்த முறை குழந்தைகளின் பெயரில் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில் முதலீட்டு சேமிப்புகள் செய்ய முடியும். மொத்தத்தில் விருச்சிகராசிக்கு இந்தக் குருப்பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நல்ல யோகங்களையும் தரும் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில் இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று அவரின் அருள் பெறுவதும் துன்பங்களைக் குறைக்கும்.

No comments :

Post a Comment