Friday, June 3, 2016

தனுசு: 2016 ஜூன் மாத பலன்கள்

தனுசு:

தனுசுநாதன் குருபகவான் ராகுவுடன் இணைந்து ராசியைப் பார்ப்பதோடு அவருக்கு வீடு கொடுத்த சூரியனும் மாதப்பிற்பகுதியில் செவ்வாயின் பார்வையைப் பெற்று ராசியைப் பார்க்கிறார். யோகக்கிரகங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் சம்பந்தப்பட்டு ராசியையும் பார்ப்பதால் ஜூன் மாதம் எவ்வித தொல்லைகளும் இல்லாத மாதமாக தனுசு ராசிக்காரர்களுக்கு இருக்கும்.

அதேநேரத்தில் இளைய பருவத்தினருக்கு ஏழரைச்சனியின் ஆதிக்கம் இருப்பதால் வேலை, தொழில் விஷயங்களில் மாற்றங்களும் குறைபாடுகளும் இருக்கும். நான்கிற்குடையவன் அந்தவீட்டிற்கு ஆறில் மறைவதும் ஒன்பதிற்குடையவர் ராசிக்கு ஆறில் மறைவதும் தாய்-தந்தையர் விஷயத்தில் கருத்து வேற்றுமைகளும் மனச்சங்கடங்களும் இருக்கும் அமைப்பு என்பதால் பெற்றோர் சொல்படி கேட்டு நடந்து அவர்களின் மனதைக் குளிரவைப்பது நன்மைகளைத் தரும். வயதான பெற்றோர்களின் உடல்நலத்திலும் இந்தமாதம் அக்கறை தேவைப்படும்.

பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உங்களின் ராசிநாதன் ராசியைப் பார்ப்பதால் பெரிய அளவில் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை. பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

1,4,5,11,12,13,19,20,21,24 ஆகிய தினங்களில் பணம் வரும். 7-ம்தேதி அதிகாலை 2 மணி முதல் 10-ம்தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். வெகுதூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

No comments :

Post a Comment