Friday, June 3, 2016

மகரம்: 2016 ஜூன் மாத பலன்கள்

மரகம்:

எட்டில் இருக்கும் குருபகவானால் குறிப்பிட்ட சில மகரராசிக்காரர்களுக்கு மனத்திற்குப் பிடிக்காத மாற்றங்களும் பொருளாதார விஷயத்தில் ஏற்ற இறக்கங்களும், வருமானம் இல்லாததால் பணத்தட்டுப்பாடும் தற்போது இருக்கின்றது. ராசிநாதன் சனி பதினொன்றில் இருப்பதால் கிடைக்கும் யோக அமைப்பைக் கொண்டு அனைத்தையும் சமாளித்து கொண்டிருக்கிறீர்கள்.

இந்த நிலைமை வருகின்ற ஆகஸ்டுமாதத்தில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு விலகி உங்களுக்கு நிலையான தொழில் அமைப்புகளும் குறைவில்லாத பணவரவும் அமையும் என்பதால் ஜூன்மாதத்தில் இருந்து அதற்கான முன்னேற்பாடுகள் நடக்கத் துவங்கும் என்பது உறுதி. எனவே ஜூன் மாதம் நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் சில அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும் மாதமாக இருக்கும். உங்களில் சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்த மாதம் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

2,4,5,6,7,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 10 -ம்தேதி காலை 8 மணி முதல் 12-ம்தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

No comments :

Post a Comment