Friday, June 3, 2016

கும்பம்: 2016 ஜூன் மாத பலன்கள்

கும்பம்:

கும்பராசியின் யோகாதிபதிகள் புதனும், சுக்கிரனும் இந்த மாதம் முழுவதும் தத்தம் வீடுகளில் ஆட்சி பெற்றோ அல்லது இன்னொருவரின் வீட்டில் நட்பு நிலையிலோ வலுவுடன் அமைவதால் ஜூன் மாதம் கும்பராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும்.

குறிப்பாக ராசியோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்படுவதாலும் ராசியில் இருக்கும் கேதுபகவானைக் குரு பார்ப்பதாலும் குறிப்பிட்ட சிலருக்கு தற்போது ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அடிக்கடி ஆலயங்களுக்குச் செல்வீர்கள். வெகுசிலருக்கு ஆலயத்திருப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். ஜாதகத்தில் சனி, குரு, கேது தசை நடப்பவர்களுக்கு ஆன்மிக விஷயத்தில் மேன்மையான பலன்கள் தற்போது நடக்கும் என்பதால் கும்பராசிக்காரர்களுக்கு எவ்வித குறைகள் இருந்தாலும் பரம்பொருள் அவற்றைக் கனிவுடன் தீர்த்து வைப்பார் என்பதால் ஜூன் மாதத்தில் கெடுதல்கள் எவையும் உங்களுக்குச் சொல்வதற்கு இல்லை.

சிலருக்கு மறைமுகமான வழிகளில் இந்த மாதம் வருமானம் கிடைக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். வெளிநாட்டு தொடர்பால் இந்த மாதம் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள்.

1,2,4,5,8,9,10,17,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம்தேதி மாலை 6 மணி முதல் 15-ம்தேதி காலை 6.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நடக்காது. அதே நேரத்தில் புதிய ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment