Friday, June 3, 2016

மிதுனம்: 2016 ஜூன் மாத பலன்கள்

மிதுனம்:

ராசிநாதன் புதபகவான் மாத முற்பகுதியில் நட்புநிலையில் பனிரெண்டாம் வீட்டிலும், பிற்பகுதி முழுவதும் ராசியிலேயே ஆட்சிநிலையில் இருக்கும் சாதகமான மாதம் இது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மாதத்தின் முதல் பாதியில் சுபச்செலவுகளும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குதலும் இருக்கும் என்பதோடு இந்தச் செலவுகளை கடன் வாங்காமல் செய்வதற்கான வருமானங்களும் உங்களுக்கு இருக்கும். மாத பிற்பகுதி முழுவதும் இதுவரை நீங்கள் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து உதவிகள் கிடைத்தலும், குடும்பத்துடன் பிரயாணங்கள் செய்வதும் இருக்கும்.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். லாபாதிபதி வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு இந்த மாதம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது.

குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும். நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் உண்டு.

3,5,8,9,10,12,13,14,15,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம்தேதி பகல் 2.30 மணி முதல் 24-ந்தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆயினும் இந்த தினங்களில் புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம்.

No comments :

Post a Comment