Monday, May 2, 2016

தனுசு: 2016 மே மாத பலன்கள்

தனுசு:

தனுசுநாதன் குருபகவான் ராசியைப் பார்ப்பதோடு உச்சமாக இருக்கும் சூரியனையும் பார்ப்பதாலும் ராசினாதனுக்கு வீடு கொடுத்தவர் உச்சமாக இருப்பது ஒரு மேன்மையான அமைப்பு என்பதாலும் தனுசுராசிக்கு இந்தமாதம் கேட்கும் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் மாதமாக இருக்கும். மூன்றில் இருக்கும் கேதுவால் சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்களால் ஆதரவும் தகுந்த நேரத்தில் உதவியும் இப்போது கிடைக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு. சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஏழாமிடம் வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் இந்த மாதம் ஒன்று சேருவார்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும்.

தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சுமாரான நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள்.

2,5,11,19,20,21,22,24,25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 11ம் தேதி மாலை 4 மணி முதல் 13ம் தேதி இரவு 12மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment