Monday, May 2, 2016

மகரம்: 2016 மே மாத பலன்கள்

மகரம்:

மாத பிற்பகுதியில் ராசியின் யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று வலுடன் இருப்பதால் இந்த மாதம் பெண்கள் விஷயத்தில் லாபங்களும் நன்மைகளும் ஆதரவும் உள்ள மாதமாக இருக்கும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில சந்தோஷங்கள் இந்தமாதம் இருக்கும். சுக்கிரனே உங்களின் ஜீவனாதிபதி என்பதால் மகர ராசிக்காரர்களின் வேலை வியாபாரம் தொழில் போன்றவைகளும் லாபகரமாக நடக்கும் மாதம் இது.

பொதுவாக மகர ராசிக்காரர்களுக்கு சூரிய சந்திரர்கள் வலுப்பெறும்போது நற்பலன்கள் குறைவாகவே இருக்கும். இந்த மாதத்தில் அஷ்டமாதிபதி பலமாக இருந்தாலும் தனஸ்தானம் வலுவடைவதால் மறைமுகமான வருமானங்கள் வரும். அதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம். தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும்.

குறிப்பிட்ட சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு இது நல்ல மாதமாக அமையும். வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும். நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறையும்.

2,5,11,13,15,21,22,24,25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 13ம் தேதி இரவு 12 மணி முதல் 16ம் தேதி காலை 11மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment