Monday, May 2, 2016

விருச்சிகம்: 2016 மே மாத பலன்கள்

விருச்சிகம்:

விருச்சிகநாதன் செவ்வாய் ராசியில் அமர்ந்து தொழில் ஸ்தானாதிபதி சூரியன் உச்சமாகி குருவின் பார்வையில் இருப்பது வெகுநாட்களுக்கு பிறகு உங்கள் தொழில் அமைப்புகளை கெட்ட பலன்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு அமைப்பு என்பதால் வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை உங்களுக்கு இருந்துவந்த தடங்கல்களும் முன்னேற்றமற்ற நிலைகளும் இனிமேல் மாறி இந்தமாதம் முதல் உருப்படியான மாற்றங்கள் இருக்கும் என்பது உறுதி.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல மாதம். இந்தமாதம் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவீர்கள். தலைமைப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு கீழே பணிபுரிவோர்களை புரிந்து கொள்வது நல்லது. எதையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சில நேரங்களில் சுவருக்குக் கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை மறக்காதீர்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக தொழில் நிலைமை சரியில்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குறிப்பாக அத்தைகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.

2,3,5,6,11,19,20,21,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 9ம் தேதி மதியம் 1 மணி முதல் 11ம் தேதி மாலை 4மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment