Wednesday, December 9, 2015

சுக்கிரன் தரும் சினிமா...! – C- 033 - Sukkiran Tharum Cinema...!


பாபக் கிரகங்கள் ஆட்சி வக்ரமானால் தன்னுடைய காரகத்துவங்களை அதாவது செயல்பாடுகளை வலிமையாக செய்யும் என்பதை சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டேன். அது போலவே சனியும், செவ்வாயும் ஆட்சி பெற்று, சுபத்துவம் இழந்து வக்ரமானால் தனது பாபத்துவ செயல்கள் மூலம் அந்த ஆதிபத்தியத்தைக் கெடுப்பார்கள்.

உதாரணமாக ஏழாம் வீட்டில் சனி ஆட்சி பெறுவது சிறப்பான நிலை அல்ல. இது கடக, சிம்ம லக்னங்களுக்கு உரியது. ஏழாமிடத்தில் சனி ஆட்சி பெறுவதால் நடைபெறும் கெடுபலன்களை விட அவர் ஆட்சி வக்ரம் பெறுவதால் கூடுதலான பலன்கள் சனி தசையில் இருக்கும்.

செவ்வாயும் அப்படித்தான். வக்ரம் பெறும் செவ்வாய் சந்திரனுடனோ குருவுடனோ தொடர்பு பெறாத நிலையில் தனது தீய காரகத்துவங்களை வலுவாகத் தரும் நிலை பெறுவார்.

வக்ரம் பெறும் ஒரு கிரகம் தன் இயல்புக்கு மாறானதைச் செய்யும் தகுதி பெறுவதால் சுப கிரகங்கள் தன்னுடைய நல்ல செயல்பாடுகளைத் தரும் தகுதியை இழக்கும். பாபக் கிரகங்கள் தன்னுடைய கெட்ட செயல்பாடுகளை அதிகமாக தரும் தகுதியை பெறும். இதுவே ஆட்சி வக்ர கிரகங்களின் சுருக்கமான நிலை.

இது போலவே அனைத்து கிரகங்களுக்கும் அவற்றின் செயல்பாடுகள் எனப்படும் காரகத்துவங்களின் பலனை நிர்ணயிக்க வேண்டும். மேலும் நட்பு நிலை பெற்று ஒரு கிரகம் வக்ரத்தில் இருக்கும் போது அது நட்பு நிலைக்கும் கீழான வலுவான சமம், பகை போன்ற அமைப்பில் இருக்கும் பலனைச் செய்யும்.

அடுத்து நீச நிலையில் வக்ரமாக இருக்கும் ஒரு கிரகம் அந்த நீசத்துவம் நீங்கி அதற்கு நேர்மாறான உச்ச நிலையை அடையும் என்று நமது மூலநூல்களில் சொல்லப் பட்டிருக்கிறது.

இதுபோன்ற நீச வக்ர அமைப்பில் அந்தக் கிரகத்தின் காரகத்துவங்கள் எனப்படும் செயல்பாடுகளை அது ஜாதகருக்கு முழுமையாக தரும் நிலையைப் பெறும். ஆயினும் முதலில் அனைத்தையும் கெடுத்தே, நீசமாக்கியே பிறகு தன் செயல்களைத் தரும் என்பதையும் நினைவில் கொள்க.

நேரடியான உச்ச நிலை என்பதற்கும், நீசனாகி வக்ரம் பெற்று உச்ச நிலை பெறுவதற்கும் நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. அதேபோல ஒரு நீசக் கிரகம் உச்சனுடன் இணைந்து, நீசபங்கமாகி அதன் மூலம் உச்ச நிலை அடைவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

நேரடியான உச்ச நிலை என்பது ஒரு கிரகம் தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை தன்னுடைய ஆதிபத்திய பாவங்களின் மூலம் அந்த ஜாதகருக்கு எவர் தூண்டுதலும் இன்றி அதிகபட்சமாகச் செய்வதைக் குறிக்கும். இது வெளிப்படையாக நடைபெறுவது.

அதாவது சுக்கிரன் மீனத்தில் எவ்வித பங்கமும் இன்றி உச்சம் பெறும் நிலையில் தன்னுடைய காரகத்துவம் எனும் செயல்பாடுகளான வீடு, வாகனம், பெண்கள், காமம், கேளிக்கை, ஆடம்பரம் போன்றவற்றை அந்த ஜாதகருக்கு தனது ஆதிபத்தியங்களின் வழியே தன் தசை, புக்திகளில் வலுவாகத் தருவார். அவர் தரும் நன்மைகள் நீடித்து இருக்கும்.

அவர் மீனத்தில் உச்ச வக்ரம் பெற்று வலிமை குறைந்த நிலையில் இருந்தாலும், உச்சம் பெற்று பின்பு அதற்கு மாறான நிலையை அடைவதால் முதலில் உச்சத்திற்கான செயல்பாடுகளான வீடு, வாகனம், மனைவி போன்றவைகளில் நல்ல பலன்களை தனது தசை, புக்திகளில் தந்து அவற்றை நீடிக்க விடாமல் தடைகளை, குறைகளை ஏற்படுத்துவார்.

சுக்கிரன் நீசபங்கம் இன்றி கன்னியில் முழுமையாக நீசமாக இருக்கும் நிலைகளில் அவருடைய மேற்சொன்ன வீடு, வாகனம், மனைவி, பெண்கள், காமம் போன்ற விஷயங்கள் கிடைக்காது. சரியான பருவத்தில் அனுபவிக்க வேண்டிய வயதில் திருமணம் ஆகாது. பெண் சுகம் கிடைக்காது. சொந்த வீடு அமைப்பு இருக்காது.

அதேநேரத்தில் அவர் அங்கே நீசத்தில் வக்ரம் அடைந்திருந்தால் முதலில் இவைகள் கிடைப்பதற்கு தாமதமும், தடைகளும் இருக்கும். தசையின் அல்லது புக்தியின் ஆரம்பத்தில் இவைகள் கிடைக்காமல் இருந்ததாலும் தடைகளுக்குப் பிறகு கிடைத்து ஜாதகருக்கு இறுதி வரை நீடித்தும் இருக்கும்.

மிக முக்கிய கருத்தாக இதே நீச பங்கம் என்பது அதற்கு உண்டான விதிகளில் முறையாக அமையும் பட்சத்தில் உச்சத்தை விட மேலான ஒரு அமைப்பைத் தரும் என்பதால் கன்னியின் நீசம் பெற்று, சந்திர கேந்திரத்தில், உச்ச புதனுடன் இருக்கும் சுக்கிரன் முதலில் நீச நிலைக்குரிய ஒன்றும் இல்லாத அமைப்பை உருவாக்கி பிறகு தனது செயல்பாடுகளில் அபரிமிதமான அமைப்பை ஜாதகருக்குத் தந்து அவரை உயர்த்துவார்.

இந்த அமைப்பை கலைத்துறையில் ஜெயித்த சிலரின் ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அன்றைய காலகட்ட பெரும் மீடியாவான வானொலியிலும், பின் சினிமாவிலும் வாய்ப்புக் கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டு பிறகு சூப்பர் ஸ்டார் நிலைக்கு உயர்ந்த வட இந்திய நடிகர் அமிதாப்பச்சன் ஜாதகத்தில் கன்னியில் நீசபங்க நிலையில் சுக்கிரன் உள்ளதைக் குறிப்பிடலாம்.

சரியான புரிந்துணர்வாக சொல்லப் போனால் ஒரு கிரகத்தின் நீச நிலை என்பது முழுக்க வலிமையில்லாத, அதாவது தனது செயல்பாடுகளில் நன்மைகளைத் தர முடியாத ஒரு நிலை. இது ஒரு மனிதனை அந்தக் கிரகத்தின் காரகத்துவங்களில் ஆசை காட்டி வாழ்வை வீணாக்கக் கூடிய அமைப்பு.

ஆனால் முறையான நீசபங்கம் என்பது இதற்கு நேர் எதிர் நிலை. முறையான நீச பங்கத்தில் உள்ள கிரகம் தனது செயல்பாடுகளை முழுமையாகத் தரும் நிலையில் இருக்கும்.

ஜோதிடத்தின் மிக நுண்ணிய சூட்சுமங்களில் இதுவும் ஒன்று. வெறும் நீசபங்கம், முறையான நீசபங்கம் என்பதை அளவிடுவதற்கு பழுத்த அனுபவமும், பரம்பொருளால் தனிப்பட்டுத் தரப்பட்ட ஜோதிட ஞானமும் இருந்தால் மட்டுமே முடியும். மேலோட்டமாகப் பார்த்தால் யாரையும் குழப்பும் அமைப்பு இது.

இயற்கைச் சுப கிரகமான சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் நீசமாக இருப்பது நல்ல நிலை அல்ல. அமிதாப்பச்சன் போன்ற எடுத்துக்காட்டுகள் மிகவும் அரிதாக, அனைத்தும் சரியான அமைப்பில் கோடியில் ஒருவருக்குத்தான் அமையும் என்பதால் சுக்கிரன் நீசம் பெற்று உச்ச புதனுடன் அமர்ந்த எல்லோருக்கும் இது பொருந்தாது.

இதுபோன்ற நிலைகளில் சுக்கிரன் அந்த ஜாதகருக்கு யோகராகவும் அமையும் பட்சத்தில், தனது காரகத்துவமான சினிமா, தொலைக்காட்சி போன்றவற்றில் ஜாதகரை ஈடுபடுத்தி, அதில் ஜெயிக்கவும் விடாமல், அதைவிட்டு வெளியேறவும் விடாமல், தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும் என்ற இக்கட்டில் வாழ்க்கை முழுதும் வருந்த வைப்பார்.

தனிப்பட்ட வாழ்விலும் நீச சுக்கிரன் அமைதியில்லாத வாழ்வு, கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள், வசதியான வீட்டில் இருக்க முடியாத நிலை, சொந்த வீடு இருந்தாலும் அதில் இருக்க முடியாத அல்லது அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் விற்கும் நிலை போன்றவற்றைச் செய்வார்.

வலிமையற்ற சுக்கிரன் தனது தசை, புக்திகளில் தன்னுடைய செயல்பாடுகளான உணவு விடுதிகள், துணிக்கடை, பெண்கள் சம்பந்தப் பட்ட பொருட்கள், ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வைத்து நடத்தும் டிராவல்ஸ், வெள்ளை நிறம் போன்றவைகளில் ஜாதகரை ஈடுபடுத்தி நஷ்டங்களைத் தருவார். சுபத்துவமாக வலிமையுடன் இருக்கும் நிலைகளில் மேற்சொன்னவைகளில் அபரிமிதமான லாபம் இருக்கும்.

நீசம் பெற்று பாபக் கிரகங்களின் தொடர்பு மற்றும் இணைவைப் பெற்றுள்ள நிலையில் ஜாதகரின் நடத்தையில் மாற்றத்தைச் செய்வார். சில நிலைகளில் சுக்கிரன் வாழ்க்கைத் துணையைக் குறிப்பவர் என்பதால் இதுபோன்ற அமைப்பில் துணையின் போக்கால் நிம்மதியற்ற நிலைகள் இருக்கும்.

சுக்கிரன் நீசமாகி செவ்வாய், சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களின் இணைவு தொடர்பு போன்ற அமைப்பில் இருக்கும்போது சுக்கிர தசை, புக்திகளில் வித்தியாசமான, இயல்புக்கு மாறான அனுபவங்கள் ஏற்படும்.

பொதுவாக எந்த ஒரு சூழ்நிலையிலும் இயற்கைச் சுபக்கிரகமான சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் வலிமையிழப்பது நன்மைகளைத் தராது. ஏதேனும் ஒரு வகையில் இது போன்ற அமைப்பு மன அமைதியைக் கெடுக்கும்.

காரகத்துவங்களும், ஆதிபத்தியமும்...!

ஜோதிடம் என்பது பல வகையான சூட்சுமங்களும், நுணுக்கங்களும் நிரம்பியது. இதில் சில ஆழமான விஷயங்களை வெகு எளிமையாகச் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. சென்ற அத்தியாயத்தில் நான் சொன்ன விஷயங்களை சிலர் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஆதிபத்தியங்களுக்கும், காரகத்துவங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளுவது கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் எனது கட்டுரைகளில் சில கடினமான பகுதிகளைத் திரும்பத் திரும்ப படிப்பதன் மூலம் நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும்.

காரகத்துவம் என்பதை தமிழில் செயல்பாடு எனப் பொருள் கொள்ளலாம்.
ஒரு கிரகம் மனிதருக்கு எதைத் தர விதிக்கப்பட்டிருக்கிறதோ அந்தச் செயல் அந்தக் கிரகத்தின் காரகத்துவம் என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக குரு பணம், குழந்தைகள் இவற்றைத் தர பொறுப்பானவர். இது அவருடைய காரகத்துவம். சனி ஆயுள், கடன், நோய், தரித்திரம் இவற்றைத் தர பொறுப்பானவர். எனவே இவைகள் சனியின் காரகத்துவம்.

ஒரு கிரகம் எதை முதன்மையாகத் தரக் கடமைப்பட்டதோ அதன் பெயரிலேயே அதன் காரகன் என்று அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக குருவை புத்திர காரகன் என்றும் சனியை ஆயுள் காரகன் என்றும் சொல்வது இதனைத் தெளிவாக்கும்.

ஆதிபத்தியம் என்பதை மேஷம் முதல் மீனம் வரை பனிரெண்டு ராசி வீடுகளும் ஒரு ஜாதகத்தில் எத்தனையாவது வீடாகிறதோ அந்த வீட்டின் செயல்பாடு எனலாம்.

உதாரணமாக இரண்டாம் வீடு ஒரு மனிதனுக்குப் பணம், அவனது சொல், மற்றும் பேச்சு, மேலும் அவனுக்கு அமையப் போகும் குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும். ஆறாம் வீடு அவனது எதிரிகள் நோய் கடன் போன்றவைகளைக் குறிக்கும். இந்த வீடுகள் தரும் செயல் எனப்படும் விளைவே ஆதிபத்தியம் எனப்படுகிறது.

ஒரு கிரகத்தின் செயல்பாடும், ஒரு ராசியின் செயல்பாடும் இணைந்தே அந்த மனிதனுக்கு நடக்கப் போவதைத் தீர்மானிக்கின்றன. அதாவது காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் இணைந்தே சம்பவங்கள் எனப்படும் ஒரு விளைவு உருவாகிறது. அந்த விளைவு ஒரு மனிதனுக்கு நடக்குமா நடக்காதா அல்லது எப்போது நடக்கும் என்பது தசா, புக்தியால் அமைகிறது.

இதில் அந்த வீடு பெற்ற வலுவையும், கிரகம் பெற்ற வலுவையும் வைத்தே ஜாதகனுக்கு நன்மைகள் உண்டா, தீயவை நடக்குமா என்பதும் உணரப் படுகிறது. எனவே ஜோதிடத்தின் அடிநாதமே இந்த ஆதிபத்தியங்களும் காரகத்துவங்களும்தான்.

ஒரு கிரகமோ அல்லது ஒரு ராசியோ சுப வலுவாக இருக்கிறதா இல்லை பாபத்துவம் பெற்றிருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கணித்து, அந்த வீட்டின் ஆதிபத்தியம் மற்றும் அந்த வீட்டிற்கு அதிபதியாகும் கிரகத்தின் காரகத்துவ நன்மை, தீமைகளை தெளிவாக உணர்வதில்தான் பலன் சொல்லும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

(செப் 10 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

4 comments :

  1. குருஜி அவர்களுக்குப் பணிவான வணக்கம்,
    உச்சம் பெற்ற கிரகம் அம்சத்தில் நீசம் பெற்றால் பலன் என்னவாக இருக்கும்?.

    ReplyDelete
  2. Guruji,
    Jathagathil Neesa Sukran irunthal piragu vazhakayil sirapaga irukku yenna seiya vendum.

    ReplyDelete
  3. மிக மிக அருமையான விளக்கம் குருஜி

    ReplyDelete
  4. ஐயா அவர்களுக்கு வணக்கம்...
    நீசபங்கம் அதோடு பாபத்துவம் பற்றி ஒரு சந்தேகம்...மீனத்தில் 26° இருக்கும் சுக்ரன் அடுத்த ராசியான மேஷத்தில் 9° இருக்கும் நீசத்தோடு 7ன் சனிக்கு நீசபங்கம் கொடுத்து சுக்ரன் நீசனோடு 10°யில் அடுத்தடுத்து ராசிகளில் இணைந்து பாபத்துவம் சுக்ரன் பெறுவாரா ஐயா...? நன்றி ஐயா

    ReplyDelete