Saturday, September 19, 2015

குருவிற்கான பரிகாரங்கள்..! – C - 026 - Guruvirkkaana Parikarangal...!



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

ஒருவரின் ஜாதகத்தில் யோகம் தரும் அமைப்பில் இருக்கும் குரு கீழ்க்காணும் வழிகளில் நன்மைகளைச் செய்வார்.

நல்ல நெறி, நன்னடத்தை, கருணை உள்ளம், ஆன்மிக ஈடுபாடு, தூய சிந்தனை, குழந்தைகள், தனம், யானை, பருத்த உடல், அன்பு, எதிலும் பெரியது, மஞ்சள், உயிர், எதிர்பார்ப்பில்லா ஆன்மிகம், வங்கி, நீதித் துறை, ஆராய்ச்சி, நிதி அமைப்புகள், பணம் புரளும் இடங்கள், கோவில்கள், அமைச்சர், சொல்லிக் கொடுத்தல், மதம், யோகா, இனிப்புச் சுவை, அரண்மனை, அந்தணன், ஆலய, ஆன்மிகச் சூழல், நகைத் தொழில், நேர்மையான விவாதம், ஆழமான அறிவு, அதிர்ஷ்டம், பிரம்மம், தனக்கென எதுவும் கொள்ளாமை, துறவு, கோடிக்கணக்கில் பணம், சிவத் தொண்டு, கோவில் கட்டுதல், அர்ச்சகர், பூசாரி, குணமுள்ள வாழ்க்கைத் துணை, பொன் நிறம், தங்கம், அருள் வாக்கு, சாஸ்திரம், சுக போகம், அதிர்ஷ்டம், வட்டித் தொழில், மளிகைக் கடை, நவ தானியம், கடலை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஆகியவற்றை வலிமை பெற்ற குரு தருவார்.

தான் வலிமை இழக்கும் போது மேற்கண்ட விஷயங்களில் தலைகீழ் நிலைமைகளை குரு உருவாக்குவார். உதாரணமாக வலுப் பெற்ற குரு ஆத்திகனையும், வலுவிழந்த குரு நாத்திகனையும் உருவாக்குவார்.

குருவால் உண்டாகும் ஹம்ச யோகத்தின் முழுப் பலனையும் அனுபவிப்பவர்கள் சர லக்னங்களான மேஷம், கடகம், துலாம், மகர லக்னத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். உபய லக்னங்களான தனுசு, மீனம், மிதுனம், கன்னிக்கும் இந்த யோகம் அமையப் பெறும். ஆனால் குருவின் கேந்திராதிபத்ய தோஷத்தினால் அவர்களுக்கு யோகம் முழுமை பெறாது.

சர லக்னங்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றும், உபய லக்னங்களுக்கு தனுசு, மீனத்தில் ஆட்சி பெற்றும் ஹம்ச யோகத்தை அளிப்பார். இந்த அமைப்பில் குரு பலம் பெறுவதால் அவரது சுப காரகத்துவங்கள் ஜாதகருக்கு மேலோங்கி நிற்கும்.

உபய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் இருந்தால் மட்டுமே குரு முழு யோகம் அளிப்பார். எந்த ஒரு லக்னத்திற்குமே குரு லக்னத்தில் அமர்வது ஒரு சிறப்பான நிலைதான். ஒரு இயற்கைச் சுபர் லக்னத்தில் அமர்வது நல்லது என்ற நிலையையும் விட, ஒரு கிரகம் பெறும் ஆறு விதமான வலிமைகளில் ஆட்சி, உச்சத்திற்கு நிகரான இரண்டாவது பலமான திக்பலத்தை குரு லக்னத்தில் அடைவதே இதன் முதல் காரணம்.

ஹம்ச யோகம் தரும் நிலையில் குரு திக்பலமும் பெற்றிருந்தால் இரட்டிப்பு பலன் தருவார். அதே நேரத்தில் உச்சம் பெறும் குருவை செவ்வாயும், சனியும் உச்சம் பெற்றுப் பார்க்கக் கூடாது. இந்த அமைப்பு யோகத்தைப் பங்கப்படுத்தி வலுவிழக்கச் செய்து விடும்.

ஸ்திர லக்னங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு குரு கேந்திர ஸ்தானங்களில் ஆட்சியோ, உச்சமோ அடைவதில்லை என்பதால் இந்த லக்னங்களில் பிறந்தவர்கள் ஹம்ச யோகம் பெறும் வாய்ப்பு இல்லை. ஆனால் மேற்கண்ட லக்னங்களுக்கு ஐந்து. ஒன்பதாமிடங்களில் அமரும் நிலையில் குரு நன்மைகளைச் செய்வார்.

குரு ஹம்ச யோகம் தரும் நிலையில் அவருக்கு எதிர்த் தன்மையுடைய கிரகங்களான சுக்ரன், சனி, புதன் ஆகியோருடன் சேருவது, இவர்கள் குருவைப் பார்ப்பது யோகத்தைக் குறைக்கும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் இன்னும் வலுப்பெறும்.

வலுப்பெற்ற குரு பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில், ஒருவரை பணத்தை இரட்டிப்பாக்கும் வட்டித் தொழில் மற்றும் ஜுவல்லரி போன்றவைகளில் ஈடுபட வைத்து பெரிய லாபங்களைத் தருவார். குரு, தனம் மற்றும் புத்திர காரகன் என்பதால் அவரது தசையில் பணம் அதிகமாகப் புரளும் இடங்களிலோ, பணத்தை வைத்துச் செய்யும் தொழில்களிலோ இருக்க வைப்பார்.

தொழில் ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தோடு குரு சம்பந்தப்படுகையில் ஒருவருக்கு சீட்டுப் பிடிப்பது, சிட்பண்ட் போன்ற தொழில்களும், வங்கித் துறையில் வேலையும், நிதித்துறை அமைப்புகளில் வருமானங்களும் உண்டாகும்.

நீதித்துறையில் ஒருவரை ஜொலிக்க வைப்பவரும் குருதான். சட்டத் துறையில் ஒருவர் வக்கீலாக பணி புரிபவதற்கு சனியின் கருணைப் பார்வை தேவை என்றால் நீதித் துறையின் உயர் நிலையான நீதிபதி எனும் அமைப்பைப் பெறுவதற்கு குருவின் தயவு கண்டிப்பாகத் தேவை.

உலக வரலாற்றில் மிகச்சிறந்த தீர்ப்புகளுக்காக புகழப்பட்டவர்கள் அனைவரும் ஜாதகத்தில் குரு வலுப் பெற்றவர்கள்தான். நீதி,நெறி பிறழாத நேர்மையான நீதிபதிகளை உருவாக்குபவர் குருதான். ஜாதகத்தில் குரு வலுப் பெற்ற நிலையில் இருக்கும் ஒருவர் மனசாட்சியை மீறி ஒருபோதும் தவறுகளுக்கு துணை போக மாட்டார்.


தன்னுடைய கட்சிக்காரர் தவறு செய்திருந்த போதிலும் இவர் நிரபராதி என்று வாதாடும் வக்கீல்களை சனி உருவாக்குவார் என்றால் அந்த வக்கீல்களின் வாதத்தைக் கேட்டு குற்றம் சாட்டப்பட்டவரைத் தண்டிக்கவோ, விடுவிக்கவோ செய்யும் அதிகாரத்தை உடையவர் சனியோடு தொடர்பு கொண்ட குரு.

சொல்லிக் கொடுக்கும் துறைக்கும் குருவே காரணமாவார். தன்னுடைய பெயரையே குரு என்று கொண்டதனால் தனக்குத் தெரிந்த வித்தைகளை சொல்லிக் கொடுக்கும் குருமார்களை உருவாக்குபவரும் குருதான்.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக பணிபுரியும் அனைவரும் குருவின் தயவு பெற்றவர்கள்தான். ஒருவர் சொல்லிக் கொடுக்கும் துறையில் சிறப்பாக இருக்கிறார் என்றால் அவர் ஜாதகத்தில் குரு மேன்மையாக இருக்கிறார் என்று அர்த்தம்.

குருவின் நிறம் பொன் மஞ்சள் என்பதால் பொன்னும், மஞ்சளும் குருவிற்கு உரியதாகிறது. பொன் எனப்படும் தங்கத்திற்கு அதிபதியும் குருவே. உலகெங்கிலும் உள்ள நகைக் கடை நடத்துபவர்கள், தங்கத்தால் பிழைப்பவர்கள், நகை செய்யும் ஆசாரிகள் அனைவரும் குருவால் வாழ்பவர்கள். தங்கத்தின் விலையில் வரும் ஏற்றத்தாழ்வு அனைத்தும் குரு பெறும் வலிமையைப் பொருத்துதான் இருக்கிறது.

ஒருவரை ஆன்மிக வழியில் ஜீவனத்தை அமைத்துக் கொள்ள வைப்பவரும் குருதான். ஆலயங்களில் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அர்ச்சகர்கள், திருக் கோவில்களில் பணிபுரிபவர்கள் போன்ற அனைவருக்கும் குரு வலிமையான நிலைகளில் இருக்க வேண்டும்.

அதேபோல புகழ் பெற்ற திருத்தலங்களைச் சுற்றிக் கடை வைத்திருப்பவர்கள், திருத்தல மகிமையை விளக்கும் சுவாமி புகைப்படங்கள் போன்ற ஆலயம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்பவர்களும், ஜாதகத்தில் குரு பத்தாமிடத்தோடு சம்பந்தப்பட்டவர்களாகவோ அல்லது குரு லக்னாதிபதியாகவோ இருப்பவர்கள்தான்.

நவ தானியம் எனப்படும் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களை மொத்த விலைக்கு விற்பனை செய்கின்ற நிலையங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் மற்றும் சகல பொருட்களும் கலந்து விற்பனை செய்யப்படும் பலசரக்குக் கடைகள் போன்றவற்றிற்கு வியாபாரி எனப்படும் புதனும், குருவும் ஜீவன ஸ்தானத்தோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

புதனும், குருவும் பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில், வித்தைக்கதிபதி புதன் என்பதாலும், சொல்லிக் கொடுப்பதில் சிறந்தவர் குரு என்பதாலும் இருவரும் சுபத்துவத்தோடு உள்ள நிலையில் கல்வி நிலையங்களை நடத்துபவர்களை உருவாக்குவார்கள்.

மிகப்பெரிய என்ஜினீயரிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி போன்றவைகளை நடத்துவதற்கு ஒருவரின் ஜாதகத்தில் பத்தாமிடத்தோடு குருவும், புதனும் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் மருத்துவக் கல்லூரி நடத்துவதற்கு குரு, புதன், செவ்வாய் மூவரும் ஜீவன ஸ்தானத்தோடு சம்மந்தப்பட வேண்டும்.

இவை அனைத்திலும் முக்கியமாக, வாழ்க்கையில் ஒருவரின் பிறப்பின் அர்த்தத்தை முழுமையாக்கும் சந்தான பாக்கியம் எனப்படும் குழந்தைச் செல்வத்தை அருளுபவர் குரு. ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால் அவரின் குழந்தைகள் நல்ல நிலைமையில் இருப்பார்கள்.

வலிமையான குருவின் தசை ஒருவருக்கு நடக்கும்போது அவரது குழந்தைகளும் மேன்மையான நிலையில் இருப்பார்கள். மக்களைப் பற்றிய நல்ல செய்திகளை குரு தனது தசையில் கேட்க வைப்பார். வயதான காலத்தில் வரும் குருவின் தசையில் குரு தன, புத்திரகாரகன் என்பதால் குழந்தைகள் மூலம் வருமானமும் நிம்மதியும் தருவார்.

அதேநேரத்தில் ஆறு, எட்டு போன்ற இடங்களில் மறைந்தோ, பகை, நீசம் பெற்றோ சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களுடன் தொடர்பு கொண்டோ முழுமையான கேந்திராதிபத்திய தோஷம் பெற்றோ, குரு இருப்பாராயின் குழந்தைகளையோ, தன லாபத்தையோ தரும் சக்தியற்றவராகி விடுவார். இதுபோன்ற நிலையில் அந்த ஜாதகத்தின் புத்திர ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்திற்குடையவரும் வலிமையிழந்தால் ஜாதகருக்கு வாரிசு கிடைப்பது கடினம்.

குருவிற்கான முறையான பரிகாரங்கள்...!

ஜாதகத்தில் குரு வலிமை இழந்திருக்கும் நிலையில் நவ கிரகத் தலங்களில் குருவிற்கு முதன்மைத் தலமாக சொல்லப்படும் கும்பகோணம் அருகே உள்ள திருவிடமான ஆலங்குடிக்குச் சென்று குருவருள் பெறுவது மிக நல்லது.

எந்த ஒரு பரிகாரமும் ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் அன்று செய்யப்படுவதே முழுமையான பலனைத் தரும் என்று நமது ஞானிகளால் வலியுறுத்தப்படுவதால், பரிகாரம் செய்ய திருக் கோவில்களுக்குச் செல்லும்போது பிறந்த நட்சத்திரம் அன்று செல்வதே முறையானது.

அதுபோலவே திருத்தலங்களுக்குள் கிரக வலுவினை நாம் பெறுவதற்காக இருக்கும் நேரமும் முக்கியமாகும். தடைகளை நீக்கியருளும் கண்கண்ட தலமான கண்ணப்பர் கண் தந்த ஸ்ரீகாளஹஸ்தியில் நமக்கு ஓரரிவு தங்கி பரிகாரம் செய்ய ஞானிகளால் விதிக்கப்பட்டதைப் போல, ஆலங்குடியில் கோவிலுக்குள் ஒருவர் ஒரு ஜாமம் எனப்படும் இரண்டரை மணிநேரம் இருக்க வேண்டும்.

சென்னையில் இருப்பவர்கள் சேக்கிழார் பெருமானால் ஆயிரம் வருடங்களுக்கு முன் நிறுவப்பட்ட போரூரில் அருள் பாலிக்கும் அருள்மிகு ராமநாதீஸ்வரப் பெருமான் திருக்கோவிலுக்கு வியாழன் தோறும் சென்று வழிபடுவது குருவின் திருவருளை குறைவின்றி அருளும். இத் திருத்தலம் வட ஆலங்குடி என போற்றப்படுகிறது.

தென் மாவட்டத்தில் உள்ளவர்கள், தந்தைக்கு உபதேசித்த குரு, அலைகள் சீராட்டும் செந்தூரின் தலைவன், தமிழ்க் காவலன், எம்பெருமான் செந்திலாண்டவனின் அருட் தலமான திருச்செந்தூரில் குருவருள் கிடைக்கப் பெறலாம். சென்னை பாடியில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம், தென்குடித் திட்டை போன்ற தமிழ்நாட்டின் எண்ணற்ற திருக்கோவில்களும் குருவின் அருள் தரும் கோவில்கள்தான்.

குரு நீசம் அல்லது ராகுவுடன் சேர்க்கை போன்று வலிமையிழந்திருக்கும் நிலையில் அவரது நிறமும், சுவையும் கொண்ட பொருளான லட்டினை வியாழக் கிழமைகளில் தக்ஷிணாமூர்த்தி சந்நிதிகளில் தானம் செய்வது, மற்றும் தாலிக்குத் தங்கம், மஞ்சள் நிறப் பொருட்களை பிறருக்கு கொடுப்பது போன்றவை சிறந்த பரிகாரம். ஆனால் குரு வலுவுடனோ, நீசபங்க ராஜயோக அமைப்பில் இருக்கும்போதோ குருவின் பொருட்களை தானம் செய்யக்கூடாது.

பரிகாரம் எனப்படுவது ஒரு கிரகத்தின் ஸ்தலம், நிறம், தான்யம். வாகனம், கல், குணம் சம்பந்தப்பட்டவை என்பதால் ஒரு வியாழக்கிழமை. குருவின் ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு, விருப்பமான உணவளிப்பது குருவின் வலிமையிழப்பால் உண்டாகும் புத்திர தோஷத்தை நிவர்த்திக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

3 comments :

  1. ஐயா எனக்கு ரிஷபராசி மிதுன லக்னம் நாலாமிடமன கன்னியில் குருமற்றும் சனி அமர்ந்து இருக்கிறார்கள் கேந்ராதிபத்தய தோஷமும் ,சனி யுடன் சேர்ந்த் தோஷமும் உள்ளத மற்றும் தர்ம கர்மாதியோகம் முழுமையாக எனக்கு கிடைக்க என்ன பரிகரமாரம்.
    குறிப்பு:எனக்கு இப்பொழுது குரு தசை குரு புத்தி நடக்கிறது

    ReplyDelete
  2. ஐயா எனக்கு ரிஷபராசி மிதுன லக்னம் நாலாமிடமன கன்னியில் குருமற்றும் சனி அமர்ந்து இருக்கிறார்கள் கேந்ராதிபத்தய தோஷமும் ,சனி யுடன் சேர்ந்த் தோஷமும் உள்ளத மற்றும் தர்ம கர்மாதியோகம் முழுமையாக எனக்கு கிடைக்க என்ன பரிகரமாரம்.
    குறிப்பு:எனக்கு இப்பொழுது குரு தசை குரு புத்தி நடக்கிறது

    ReplyDelete
  3. Guru dan sani sernthaal, prammahathi thosham. Thiruvidaimaru
    thuril pariharam seiyungal.

    ReplyDelete