Thursday, December 9, 2021

சூரிய கிரகணம்: யாருக்கு தோஷம்? என்ன பரிகாரம்?...(A-020)


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

நாளை மார்ச் ஒன்பதாம் தேதி அதிகாலை முதல் நிகழ இருக்கும் சூரிய கிரகணம், தமிழ்நாட்டில் ஏறத்தாழ சூரியன் உதயமாகும் காலை 6.20 முதல் 6.50 வரை மட்டும் தெரியும்.

கிரஹண்என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு ஒளி மறைப்பு அல்லது ஒளி இழப்பு என்று அர்த்தம்.

சூரியனும், பூமியும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் அமாவாசை நாளில் சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால் சில நிமிடங்களுக்கு வானில் சூரியன் மறையும் தோற்றமான இத்தகைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

இத்தனை சிறிய நிலாவின் நிழல் அதனை விட நானூறு மடங்கு பெரியதான சூரியனையே மறைப்பது போன்ற இந்தத் தோற்றத்திற்குக் காரணம் பூமிக்கும் சந்திரனுக்கும் இருக்கும் தூரத்தைப் போல நானூறு மடங்கு தூரத்தில் சூரியன் இருப்பதுவேயாகும்.

எனவே அருகில் இருக்கும் சிறிய நிலாவும் தூரத்தில் இருக்கும் பெரிய சூரியனும் நமது கண்களுக்கு ஒரே அளவில் இருப்பது போன்ற தோற்றம் உண்டாகி இந்த கனகச்சிதமான ஒளி மறைப்பு உண்டாகிறது.

வானில் அனைத்துச் சிறிய பொருட்களும் தனக்கு அருகில் இருக்கும் பெரிய பொருளைச் சார்ந்து அதனை மையமாக வைத்தே சுற்றி வருகின்றன. அதன்படி, சந்திரன் பூமியை ஏறத்தாழ ஒருமாதத்திற்கு ஒருமுறை சுற்றும் நிலையில், நமது பூமி வருடத்திற்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது.

நமது சூரியன், தனது சூரிய மண்டலத்திலுள்ள நமது பூமி உள்ளிட்ட கிரகங்கள், அவற்றின் துணைக்கோள்கள், வால் நட்சத்திரங்கள், கிரகங்களாக உருப்பெறாத ஆஸ்ட்ராய்டு குறுங்கற்கள், ஊர்ட் மேகங்கள் போன்ற அனைத்தையும் இழுத்துக் கொண்டு, நொடிக்கு சுமார் 275 கிலோமீட்டர் வேகத்தில், தன்னை விடப் பெரிதான இந்த பால்வெளி மண்டலத்தை ஏறத்தாழ இருபத்தியிரண்டு கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.

இதனையே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்கிறோம்.

மனிதன் அறிவியல் முன்னேற்றத்தை அடைய ஒருவகையில் இந்த பௌர்ணமி, அமாவாசை மற்றும் சூரிய, சந்திர கிரகணங்களே காரணமாக இருந்தன. மனிதனின் தெரிந்து கொள்ளும் ஆர்வம்  மற்றும் ஆய்வு மனப்பான்மையை இந்த நிகழ்வுகளே தூண்டி விட்டன.

உள்ளங்கைக்குள் சாக்லெட்டை மறைத்து வைத்து, தன் குழந்தைக்கு ஆர்வமூட்டி அதனை மெல்லத் திறந்து காட்டும் ஒரு தகப்பனைப்போல, மனிதனுக்கு மெல்ல மெல்ல தனது ரகசியங்களைத் அறியத் தந்து கொண்டிருக்கும் இந்த மகா பிரபஞ்சத்தில், ஒரு குழந்தையின் ஜனனம் முதற் கொண்டு பூமியின் மூலமுதல்வனான சூரியனின் ஒளியை சின்னஞ்சிறு நிலவு கிரகணம் என்ற பெயரில் மறைப்பது வரை நடக்கும் அனைத்திற்கும் காரணங்களும், தொடர்புகளும் கண்டிப்பாக இருக்கின்றன.

பூமியிலும், ஏனைய வான் பொருட்களிலும், பிரபஞ்சத்திலும் நடக்கும் அனைத்து சம்பவங்களும் ஒன்றுக்கொன்று கண்டிப்பாகத் தொடர்புடையவையே. காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. இதனையே நமது ஞானிகள் சுருக்கமாக, அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் இருக்கிறது என்று சொன்னார்கள்.

ஜோதிடத்தில் சூரியன் ஆத்மா எனப்படும் ஆன்மக்காரகனாக குறிப்பிடப்படுகிறான். சந்திரனை மனதை இயக்குபவன் என்ற அர்த்தத்தில் மனோகாரகன் என்று அழைக்கிறோம். நாம் பிறக்கக் காரணமான இந்த பூமி லக்னம் எனப்படும் நமது உயிரை நமக்குத் தந்தது. ஆகவே நமது உயிரும், மனதும், ஆன்மாவும் ஒரு நேர்கோட்டில் இணையும் நாளான இந்தக் கிரகண நாள் ஆன்மீகத்தில் ஒருவகையில் தனிச் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.

உலகின் உன்னதமான மேலான எனது மதம் உயிர், மனம், ஆத்மா என இவை மூன்றும் ஒரே அலைவரிசையில் இருக்கும் இந்த கிரகண நேரம், சித்துக்கள் கை வரப்பெற வேண்டும், இறைநிலை பற்றிய ரகசியத்தை அறிய வேண்டும், பரம்பொருளின் பக்கத்தில் செல்ல வேண்டும் என்று விரும்பும் ஒருவருக்கு தவம், தியானம் போன்றவைகளைச் செய்ய சரியான நேரம் என்று சுட்டிக் காட்டுகிறது.

இந்தக் கிரகண நேரத்தில் உங்கள் மனமும், உங்களின் உயிர் அடங்கிய இந்த உடலும், ஆன்மா எனப்படும் பிரபஞ்ச உயர் சக்தியோடு ஒரேவித அலைவரிசையில் தொடர்பு கொண்டிருக்கும் என்பதால்தான், இந்த கிரகண நேரங்களில் நமது ஞானிகள் சாதாரண விஷயங்களைச் செய்யாமல், நமது மனது பக்குவப்படும் ஜபம், தியானம் போன்ற உன்னத விஷயங்களைச் செய்யச் சொன்னார்கள்.

கிரகண நேரத்தில் வெளியே வராதே என்று நமது மதம் சொல்வது பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் கிண்டல் செய்யப்படுகிறது. ஆனால் பூகம்பம் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளை முன்கூட்டியே உணரும் சக்தி படைத்த விலங்குகளும், பறவைகளும் கிரகண நேரத்தில் வெளியே வருவதில்லை அல்லது உடனடியாக இருப்பிடம் திரும்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஒரு கிரகணத்தின் போது, கிரகணம் ஏற்படும் நட்சத்திரத்திற்கு முன்பின் நட்சத்திரங்கள் மற்றும் அதே நட்சத்திரத்தின் திரிகோண பத்தாவது நட்சத்திரங்களான அந்த நட்சத்திர அதிபதியின் மற்ற நட்சத்திரங்களும் தோஷம் அடையும் என்பது ஜோதிடவிதி.

தற்போது நடைபெற இருக்கும் இந்த சூரிய கிரகணம் கும்பராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறுவதால், பூரட்டாதியின் முன்பின் நட்சத்திரங்களான சதயம், உத்திராட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சூரியன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தோஷங்கள் ஏற்படும்.

மேலும் பூரட்டாதி குருவின் நட்சத்திரம் என்பதால் குருபகவானின் மற்ற இரு நட்சத்திரக்காரர்களான புனர்பூசம், விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அவர்களது ஜாதகப்படி சூரியனின் ஆதிபத்திய காரகத்துவ அமைப்புகளில் பாதிப்புகளை அடைவார்கள்.

இதனால் கிரகணம் நிகழும் ராசியான கும்பம் மற்றும் அதன் முன்பின் ராசிகளான மகரம், மீனம் மற்றும் மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்குள் அடங்கிய மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

மேற்கண்ட நட்சத்திரக்காரர்களின் தந்தைக்கோ, தந்தைவழி உறவினர்கள், அல்லது பூர்வீகஅமைப்புகளில் கெடுபலன்களோ அல்லது மேற்கண்ட நட்சத்திரக்காரர்களின் ஜாதகங்களில் சூரியன் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியவரோ அந்த பாவக பலன்களில் குறைகளும் கெடுபலன்களும் இருக்கும்.

சூரியன், ராகு-கேதுக்களால் பீடிக்கப்படுவதால் மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் கிரகண தினத்தன்று தங்களின் தாய் தந்தைக்கு அல்லது அவர்களுக்கு நிகரான பெரியோர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை,எளியோருக்கு தங்களால் இயன்ற அளவுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ஆடைகளை தானம் செய்வது கெடுபலன்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் சிறந்த பரிகாரம்.

ஜோதி வடிவான சூரிய, சந்திரர்களையே சிவன்-சக்தி, அம்மை-அப்பன் என வழிபடும் நமது மேலான இந்து மதத்தின் திருக்கோவில்கள் கிரகண நேரத்தில் இவர்கள் வலுவிழப்பதால்தான் நடைசாத்தப்பட்டு கிரகணம் முடிந்த பின் பரிகாரபூஜைகள் செய்விக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுகின்றன.

கிரகணத்தன்று ஏற்படும் சக்தியிழப்பை அன்று வெளிப்படும் தோஷமான கதிர்களைத் தடுக்கும் சக்தி தர்ப்பை புல்லுக்கு உண்டு என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் காரணமாகவே கிரகண நேரத்தில் நாம் நீரோ உணவோ அருந்தக் கூடாது எனவும் அப்படித் தவிர்க்க முடியாமல் தண்ணீர் குடிக்க நேர்ந்தால் அதில் தர்ப்பைப் புல்லைப் போட்டுக் குடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் நேரமும் சந்திர கிரகணம் முடியும் நேரமும் முக்கியமானது என்பதால் இந்த நேரங்களில் புனித நீராடுவது நல்லது.

ஒரு பொதுவான வழிகாட்டுதலாக, நாளைய கிரகண நேரத்தில் கும்ப லக்னம் மற்றும் கும்பராசி மற்றும் ஜாதகத்தில் சூரியனைச் சுபராகக் கொண்டவர்கள் முக்கிய செய்கைகள் முடிவுகள் எதனையும் எடுக்காமல் இருப்பது நலம். அதைவிட இந்த நேரத்தில் சூரிய காயத்ரி போன்ற சூரிய துதிகளை தியானிப்பது நல்லது.

கிரகண நேரத்தில் என்ன செய்யலாம் ?

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது. நீரில் விழும் சூரிய பிம்பத்தைப் பார்க்கலாம். கூலிங்கிளாஸ் போன்ற குளிர்கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும். இதனால் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

வீட்டில் இருக்கும் உணவு நீர், போன்ற பொருட்களில் தர்ப்பைப் புல்லை இட்டு வைக்க நமது முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும் கிரகணம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிப்பது மேன்மை.

சர்க்கரை நோயாளிகள் போன்று நேராநேரத்திற்கு உணவருந்த வேண்டியவர்கள் கிரகணநேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பே சாப்பிட்டு விடலாம். மற்றவர்கள் கிரகணம் முடிந்த பிறகு மட்டுமே சாப்பிடுவது நல்லது.

நடைபெறப்போவது சூரிய கிரகணம் என்பதால் கிரகணம் ஆரம்பிக்கும் நேரம் பித்ரு தர்ப்பணம் கொடுக்கலாம். இளைய தலைமுறையினர் கிரகணநேரத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற பொழுது போக்குகளில் அரட்டை அடிக்காமல் ஜபம் மற்றும் பாராயணம் செய்வது அவர்களின் மனோபலம் செயல்திறனைக் கூட்டும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.



5 comments :

  1. Kala sarpa thosam ullavargam 50 vayadu varai kastapaduvargal yenpadu unmaya

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக உண்மை இல்லை. தவறான இந்தக் கருத்து சில முழுமையற்ற ஜோதிடர்களால் சொல்லப் படுகிறது.

      Delete
    2. Sir ovoru raasikum thaniyaga raghu kethu peyarchi post pannuven endru solli iruntheergalae..waiting for it..

      Delete
  2. அய்யா நான் மாலைமலர் நாளிதழ் படிக்கவில்லை நான் உங்களுடைய ராகு மற்றும் கேது ராசி பலன்களை தயவு செய்து அனுப்புங்கள் அய்யா! மிக்க நன்றி

    ReplyDelete
  3. kala surpa thosam patri thayavu seithu virivaga kooravum. enathu magan 07.01.1997. tuesday 2.42PM ku piranthan. ippothu varai kastapattu kondu than irukkirom. atleast avanukavathu future nandraga irukkuma

    ReplyDelete