Wednesday, July 17, 2013

சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-7

சென்ற இதழில் கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு செய்யும் பலன்களைப் பற்றிப் பார்த்தோம்.

தற்போது கேந்திரத்திற்கும், கோணத்திற்கும் பொதுவானது எனப்படும் லக்னத்தில் இருக்கும் ராகு என்ன செய்வார் என்பதைப் பற்றிச் சொல்லும் முன்...

கேந்திரம், திரிகோணம் என்று சொல்லப்படும் 1, 4, 7, 10 மற்றும் 1, 5, 9 மிடங்கள் அவ்வளவு சிறப்பாகச் சொல்லப்படுவது ஏன்? அதன் சூட்சுமம் என்ன? என்று ஒரு வாசகர் (ரசிகர்!) கேள்வி எழுப்பி இருந்தார்.

திரிகோணங்கள் எனப்படுபவை ஒரே நட்சத்திரங்களை உள்ளடக்கிய மூன்று வித்தியாசமான ராசிகள். கேந்திரங்கள் எனப்படுவை ஒன்பது கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நட்சத்திரங்களை தொடர்ச்சியாகக் கொண்ட ஒரே தன்மை கொண்ட ராசிகள்.

அதாவது காலபுருஷனின் முதல் ராசியான மேஷத்திற்கு சிம்மமும், தனுசும் திரிகோணங்கள் (1, 5, 9, மிடங்கள்) ஆகும். இந்த மூன்று ராசிகளுக்குள்ளும் ஒரே கிரகத்தின் ஆளுமை கொண்ட நட்சத்திரங்களே இருக்கும்.

அதாவது மேஷத்திற்குள் இருக்கும் அசுவினி, பரணி, கிருத்திகை சிம்மத்திற்குள் அமைந்த மகம், பூரம், உத்திரம் மற்றும் தனுசுவில் அடங்கும் மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய மூன்றும் கேது, சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களின் ஆளுமையைக் குறிப்பவை.

மேலும் மேஷம், சர ராசி, சிம்மம் ஸ்திரம், தனுசு உபயம் என திரிகோண ராசிகள் மூன்றும் வெவ்வேறு தன்மை கொண்ட ராசிகள். இதைப் போலவே ஒவ்வொரு ராசிக்கும் அதன் திரிகோண ராசிகள் ஒரே நட்சத்திரங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

கேந்திரங்கள் எனப்படும் 1, 4, 7, 10 மிடங்களைக் கவனித்தால் மேஷத்தின் கேந்திரங்களாக கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகள் அமையும். இவற்றில் மேஷத்தில் அசுவினி, பரணி, கிருத்திகை 1 ம் பாதம் என ஆரம்பித்து மகரத்தின் உத்திராடம் 2, திருவோணம், அவிட்டம் 2ல் தொடர்ந்து துலாத்தின் சித்திரை 3, சுவாதி, விசாகம் 3 ல் நீடித்து கடகத்தின் புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் என அனைத்துக் கிரக நட்சத்திரங்களையும் தொடர்ச்சியாக உள்ளடக்கி முடியும்.

அதோடு இந்த ராசிகள் அனைத்தும் சர ராசிகள் மட்டும் என்பதைப் போல் அனைத்துக் கேந்திர ராசிகளும் சரம், ஸ்திரம், உபயம் மட்டுமாகவே இருக்கும். கலந்து வராது. இவைதான் கேந்திர, கோணங்களின் சிறப்பு.

இதையும் தாண்டி திரிகோணாதிபதிகளாக இயற்கைப் பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் வரக்கூடாது என்று நான் அடிக்கடி எழுதுவதில் ஒரு மிகப்பெரிய சூட்சுமம் உள்ளது. அதை இங்கே விவரித்தால் இந்தக் கட்டுரை திசை மாறும் என்பதால் வேறொரு சந்தர்ப்பத்தில் அதை விளக்க முயற்சிக்கிறேன்.

அடுத்து லக்னம் என்பது ஜாதகரை, அதாவது உங்களைத்தான் குறிக்கிறது. ஒருவரது லக்னம் எது, லக்னாதிபதி யார்? லக்னத்தோடு சம்பந்தப்படும் கிரகங்கள் எவை? என்பதை வைத்து உங்களைப்பற்றி நூறு சதவிகிதம் துல்லியமாகச் சொல்ல முடியும்.

(என்னிடம் பலன் கேட்க வருபவர்களிடம் நான் முதலில் இந்த முறையைக் கையாண்டு ஜாதகரின் குண விசேஷங்களைச் சொல்லி விடுகிறேன். இவற்றைத் தெளிவாக உங்களால் சொல்ல முடிந்தால் பலன் கேட்பவருக்கு உங்கள் மேல் நம்பகத்தன்மை கூடும்.)

அதோடு ராகு என்பது ஒரு இருட்டு என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். எனவே லக்னத்தில் ராகு என்றால் நீங்கள் இருளில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களை, உங்கள் திறமைகளை யாரும் கவனிக்க முடியாது மற்றும் பார்க்க மாட்டார்கள் என்று அர்த்தம். எனவே லக்னத்தில் ராகு இருப்பது சிறப்பான நிலை அல்ல.

பாவக்கிரகங்களான செவ்வாய், சனியின் ராசிகள் லக்னங்களாகி அதில் ராகு இருந்து பாவிகளின் தொடர்பை அவர் பெற்றிருப்பின் அந்த ஜாதகர் முன்கோபம், பிடிவாதம், குறுகிய மனப்பான்மை, சுயநலம், தந்திரப்போக்கு, நன்றி மறத்தல், முட்டாள்தனம் போன்ற குணங்களைக் கொண்டிருப்பார்.

அதிலும் மேஷம் லக்னமாகி ராகு அதில் இருந்து, ராகு கேதுக்களுடன் இணையாத செவ்வாயின் பார்வையை ராகு பெற்றிருந்தால் அந்த ஜாதகர் கடுமையான முன் கோபக்காரராகவும், முரட்டுத்தனம் உடையவராகவும் இருப்பார்.

அதோடு விருச்சிகம், மகர, கும்பங்களில் ராகு இருந்து அஷ்டமாதிபதியின் இணைவை நெருக்கமாக பெற்றிருந்தால் தற்கொலை எண்ணத்தை ராகு தூண்டுவார். ராகு அல்லது எட்டுக்குடையவனின் தசாபுக்திகளில் ஜாதகர் தற்கொலை முயற்சிகளில் இறங்கி வெற்றி பெறக் கூடும்.

விஷமருந்தியோ, தூக்குப்போட்டுக் கொண்டோ தன் மரணத்தைக் தேடிக் கொள்ள வைப்பவர் ராகு பகவான். சில நேரங்களில் சிலர் கொடூரமான முடிவுகளைத் தேடிக் கொள்வதும் இவரால்தான். லக்னத்தில் சுபத்துவமோ சூட்சுமவலுவோ பெறாத ராகு இந்த வேலைகளைச் செய்வார்.

பாவிகளுடன் தொடர்பு கொண்ட ராகு லக்னத்தில் இருந்தால் உடல்நலம் மனநலம் இரண்டையும் தனது தசை புக்திகளில் பாதிப்பார். லக்னத்தில் இருந்து இயற்கைப் பாவியான ஆறாமிடத்தோனுடன் சம்பந்தப்படும் ராகு மனநோயாளிகளை உருவாக்குவார்.

ஆனால் லக்னத்தில் சுபருடன் இணைந்தோ சுபரால் பார்க்கப்பட்டோ, சுபரின் வீடுகள் லக்னமாகி அதில் அமர்ந்த ராகுவோ இதுபோன்ற கெடுபலன்களைச் செய்வது இல்லை.

அதாவது ராகு எப்போதுமேதான் இருக்கும் வீட்டின் அதிபதியையும் தன்னைப் பார்க்கும் மற்றும் தன்னோடு இணைந்தவர்களின் குணங்களையும் பிரதிபலிப்பவர் என்பதால் சுபரின் வீடுகளான ரிஷபம் துலாம் மீனம் தனுசு போன்ற ராசிகள் லக்னங்களாகி அதில் சுபரோடு இணைந்து அல்லது சுபரால் பார்க்கப்பட்டு இருந்தால் மிகப் பெரும் நன்மைகளைச் செய்வார்.

புதனும் சந்திரனும் கட்டுக்கு உட்பட்ட சுபர்கள் என்பதால் (அதாவது பாவிகளுடன் சேராத தனித்த புதனும், வளர்பிறை சந்திரனும் மட்டுமே சுபர்கள்.) அவர்கள் பரிபூரண சுபத்துவம் பெற்றிருக்கும் நிலையில் அவர்களின் வீடுகளான மிதுனம் கன்னி கடகத்தில் இருக்கும் ராகு மற்ற சுபர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் நிலையில் நற்பலன்களைத் தருவார்.

ஆயினும் பொதுவாக ராகு லக்னத்தில் அமர்வது நல்ல நிலை அல்ல. லக்ன ராகு ஜாதகரை பிரகாசிக்க இயலாமல் செய்வார். இருட்டு உங்கள் மேல் கவிந்திருந்தால் என்ன ஆகும்..? நீங்கள் வெளியே தெரிய மாட்டீர்கள். உங்களுடைய திறமைகள் வெளி வர முடியாத சூழ்நிலை இருக்கும். மேலும் லக்ன ராகு உடல், மனம் இரண்டையும் பாதிப்பார். நல்ல குணங்களை தள்ளிப் போகச் செய்வார்.

இன்னும் ராகுவைப் பற்றி உள்ள சூட்சுமங்களை அடுத்த மாதம் பார்ப்போம்....

(அக்டோபர் 2012  இதழில் வெளிவந்தது)

4 comments :

  1. அய்யா நுட்பமான தகவல் ஆனால் தசம ஸ்தான நட்சத்திரங்கள் நீங்கள் கூறியபடி தொடர்ச்சியாக வரவில்லையே அய்யா கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அஸ்ட்ரோபாபு...

      கேந்திரங்கள் எனப்படும் என ஆரம்பிக்கும் பாராவை மீண்டும் படித்துப் பாருங்கள்..நான் சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்.

      ஆனால் நீங்கள் கேட்பது அந்த நட்சத்திர அமைப்பு ஏன் தொடர்ச்சியாக வரவில்லை என்ற கேள்வியாக இருப்பின் அதுவே காலபுருஷ தத்துவத்தின் மிகப் பெரிய சூட்சுமம்.

      சர ஸ்திர உபய தத்துவங்கள் மட்டுமின்றி ஆண் பெண் நெருப்பு நிலம் காற்று நீர் தத்துவங்களும் இதில் அடங்கி உள்ளன.

      நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

      Delete
  2. what will happen if ragu along with sevvai and guru in laknam(simma laknam). is it applicable for same

    ReplyDelete
  3. இருட்டு கிரகமான " ராகு லக்கினத்தில் இருந்தால் " ஜாதகரை மறைத்து வாழ்வில் பிராகாசிக்காதவாறு செய்ய வைப்பார் ... அருமை ஐயா

    லக்கினத்தில் ராகு எழில் கேது ... (லட்சக்கணக்கான ஜாதகர்கள் இருக்கின்றனர்) இது எல்லோருக்கும் பலிக்குமா?

    ReplyDelete